வலைஞர் பக்கம்

நம் சட்டம்... நம் உரிமை... பெண் குழந்தை பாதுகாப்புக்கு வைப்புத் தொகை பத்திரம்

செய்திப்பிரிவு

கடந்த இரு வாரங்களாக மாற்றுத் திறனாளிகள் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மேம்பட மத்திய, மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவி, தொழிற் பயிற்சி, மானியக் கடன் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக பார்த்தோம்.

தற்போது தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

சமூக நலத்துறையின் கீழ் திட்டங்கள் என்னென்ன?

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், ஈவெரா மணியம்மையார் ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண உதவி திட்டம், தமிழக அரசின் கலப்பு திருமண நிதி உதவி திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், குழந்தைகள் காப்பகம், அரசு சேவை இல்லம் போன்றவை சமூக நலத்துறையின் கீ்ழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?

பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டத்தில் ஒரே ஒரு பெண் இருந்தால் ரூ. 22 ஆயிரத்திற்கான வைப்புத் தொகை பத்திரம் சமூக நலத்துறை மூலம் அரசு வழங்குகிறது. இரண்டு பெண் இருந்தால் தலா ரூ.15 ஆயிரத்து 200 வீதம் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெயரில் வைப்பு தொகை பத்திரம் வழங்கப்படும்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற நிபந்தனைகள் என்னென்ன?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்க கூடாது. ஆண் குழந்தையை தத்து எடுக்க கூடாது. பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இரண்டு இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 12 ஆயிரத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூக நல அலுவலகம் அல்லது அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுக வேண்டும். விண்ணப்பத்துடன் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று, சாதிச் சான்று, பெற்றோர் வயது சான்று, ஆண் வாரிசு இல்லை என்ற சான்று, குடும்ப அட்டையின் நகல், குடும்ப புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT