வலைஞர் பக்கம்

செங்கோட்டை முழக்கங்கள் 53 - ‘உலகம் நம்பும் நமது நேர்மை!’ | 1999

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திய அரசியலில் ஓர் அபூர்வம் - அடல் பிகாரி வாஜ்பாய். பொது வாழ்வில் கண்ணியம், நாகரிகம் அருகிவிட்ட சூழலில் இந்த நற்குணங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த இளகிய மனது பிரதமர், ஒரு புதிய இந்தியாவை நிர்மாணிக்க அழைப்பு விடுக்கிறார்.

ஒவ்வொரு துறையிலும் இந்தியாவை சாதனையாளர்களின் தேசமாக மாற்ற முடியும் என்று திடமாக நம்பிய அடல் பிகாரி வாஜ்பாய் 1999 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இதோ: இந்த புனிதமான சுதந்திர தின தருணத்தில் எனது வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளவும். இதை நினைவுகளுக்கான நாள். அர்ப்பணிப்புக்கான நாள். இந்த ஆண்டு சுதந்திர தினம், சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நூற்றாண்டு நிறைவுக்கு வருகிறது. அடுத்த சுதந்திர நாளில் உலகம் அடுத்த நூற்றாண்டில் இருக்கும்.

இருபதாம் நூற்றாண்டில் அஸ்தமனத்தில் நின்று கொண்டு கடந்த யுகத்தின் நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கும்போது, இந்திய மண்ணில் காலனி ஆதிக்கம் முடிந்து போனதே மிக முக்கிய முன்னேற்றமாய் பார்க்கிறோம். நமது மாபெரும் தலைவர்கள், நமது நாட்டு மக்களின் பல தலைமுறைகள் - சுதந்திரத்துக்காக வலிமையான போராட்டம் நடத்தினார்கள். இதன் மூலம் அவர்கள் மற்ற பல நாடுகளின் சுதந்திரத்துக்கும் வழி வகுத்தார்கள். சுய தியாகம், அர்ப்பணிப்பு மிகுந்த தலைவர்களும் தேசப்பற்றாளர்களும் தமது வாழ்நாள் முழுக்க சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். தேவைப்பட்டபோது, தமது இன்னுயிரையும் மாபெரும் விடுதலை வேள்வியில் 'ஆகுதி'யாய்த் தந்தனர். வாருங்கள் இந்த நாட்டின் குடிமக்களே.. அந்த மாபெரும் தலைவர்களின் வாரிசுகளாக நம்மைத் தகுதியாக்கிக் கொள்வோம்.

இதேபோன்று, கார்கில் பகுதியில் எதிரியிடம் இருந்து நம் தாய்நாட்டின் ஒரு பகுதியை மீட்டெடுப்பதில் தியாக உணர்வையும் அபாரமான வீரத்தையும் வெளிப்படுத்திய, ராணுவம் மற்றும் விமானப் படையின் தீரமிக்க வீரர்கள் அலுவலர்கள் மற்றும் பிறரை வணங்குகிறேன். கார்கில் போரில் தமது உயிரைத் தியாகம் செய்தோருக்காக நாம் அனைவரும் நன்றியுடன் தலை வணங்குகிறோம்; அஞ்சலி செலுத்துகிறோம். சற்றும் சாத்தியமற்ற மலைமுகடுகளில் எதிரிகளை எதிர்த்து நின்று நமது ஹீரோக்கள் வெளியேற்றியதை அநேகமாக நமது நாட்டு மக்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார்கள். அத்தனை உயரத்தில் போரிட்டுப் பெற்ற வெற்றி, நமது நாட்டின் முழு வலிமையைக் காட்டுகிறது. நமது படைகளின் துணிச்சலின் அடையாளம் இது. இத்தகைய ஹீரோக்களை எவ்வாறு மறக்க முடியும்? காயமுற்ற நிலையிலும், விரைவில் நலம் அடைந்து, மீண்டும் ராணுவத்தில் சேர்ந்து போரிட வேண்டும் என்று விரும்பிய அந்த வீரர்களை எவ்வாறு மறக்க முடியும்? உயிரை ஈந்த துணிச்சல் மிக்க வீரர்களின் உடல்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் குடும்பத்தினர் கூறினார்கள் - 'எங்கள் கண்களில் நீர் இல்லை; ஆனால் எங்கள் இதயத்தில் பெருமிதம் இருக்கிறது'. இவர்களை நாம் எப்படி மறக்க முடியும்?

தனக்கு ஒரு மகன் மட்டுமே இருக்கிறான்; நம்ம நாட்டுக்காகப் போரிட இன்னொரு மகன் இல்லையே என்று புலம்பிய அன்னையை எவ்வாறு மறக்க முடியும்? வெறுமனே ஆறுதல் சொற்கள் மட்டுமே போதாது என்பது எனக்குத் தெரியும். உயிர்நீத்த, காயமடைந்த வீரர்களின் குடும்பங்கள் வசதியாக கண்ணியமாக வாழ்வதற்கு உதவுகிற விதத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்போம். போரின் போதும் போர் முடிந்த உடனேயும் (சில நாட்களுக்கு மட்டுமே) வீரர்களை நினைக்கிறோம்; அவர்களுக்கு சிறப்பு செய்கிறோம்; நாட்கள் போகப்போக அவர்களை மறந்து விடுகிறோம் என்று சொல்லப்படுகிறது. முந்தைய போர்களில் உயிர் நீத்த காயமுற்ற பல வீரர்களை நாம் மறந்து விட்டோம் என்பது ஒரு சோகமான உண்மை. இதுபோல மீண்டும் நிகழாது என்று நான் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு உறுதி மொழிகிறேன்.

செங்கோட்டையும் அதன் உலகப் புகழ்பெற்ற கொத்தளங்களும் புவியியல் இடங்கள் மட்டுமல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தின் இதயத்துடிப்பு இந்த கோட்டை மற்றும் கொத்தளங்களில் இணைந்திருக்கிறது. 1857 முதல் சுதந்திரப் போரில் இங்குதான் பகதூர் ஷா ஜாஃபர் சிறைக் கைதியாக வைக்கப்பட்டு இருந்தார். 1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தக் கோட்டையை பிரச்சார இலக்காகக் கொண்டிருந்தார். 'தில்லி சலோ, சலோ லால் கிலே' என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்ததும் இங்குதான். இந்த கோட்டையில் இருந்து தான் நமது முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு 1947-ல் சுதந்திர இந்தியாவின் மூவண்ணக் கொடியை முதன் முதலில் ஏற்றி வைத்தார். அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று நாம் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தில் நிற்கிறோம். வாருங்கள், இந்த புதிய யுகத்துக்குள் ஒன்றாய் காலடி எடுத்து வைப்போம், நமது தீர்மானத்தில் ஒன்றாய் இருப்போம்.

கடந்த ஆண்டு இந்த கொத்தளத்தில் இருந்து உங்களிடம் பேசும் போது, நிலையற்ற சூழல் நிலவியது. என்னிடம் கேட்கப் பட்டது - பொருளாதாரத் தடைகளை நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரங்களை பாதித்த பொருளாதார நெருக்கடியை நம்மால் எந்த அளவுக்கு எதிர்த்து நிற்க முடியும்? அரசாங்கம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுமா? இன்று தன்னம்பிக்கை உடைய இந்தியாவுக்கு நான் பிரகடனப் படுத்துகிறேன் - பொருளாதாரத் தடைகள் அதன் திறனை இழந்து விட்டன. அது கடந்த காலத்தோடு போய்விட்டது. நமது பொருளாதாரத்தின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு அதனை நாம் கையாண்டோம். தென்கிழக்கு ஆசிய பொருளாதார நெருக்கடிகளைத் தள்ளியே வைத்தோம்.

ஆமாம். அரசாங்கம் கீழே இறக்கப்பட்டது. ஆனால் நாடு கீழ் இறங்கவில்லை. 'சராய்வேடி' 'சராய்வேடி' (Charaiveti - move on) என்கிற மந்திரத்துக்கு ஏற்ப நாடு தொடர்ந்து முன்னேறியது. அரசாங்கம் தொடர்ந்து தனது கடமையைச் செய்து வந்தது. மிக முக்கியமாக நமது மீது ஒரு போர் திணிக்கப்பட்டது. இன்னல்களை மட்டும் நாம் வெற்றி பெறவில்லை; அதற்கு மேலும் சாதித்து இருக்கிறோம். வழியில் பல தடைகள் இருந்த போதும், நமது தேசிய வருமானம் - 6 சதவீதம் கூடியது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உணவுப் பொருள் உற்பத்தி 200 மில்லியன் டன்களைக் கடந்தது. முன் எப்போதும் இருந்ததை விட அதிகமாக உணவுப் பொருள் இருப்பு இருக்கிறது. இதற்கு நமது விவசாயிகளை நாம் பாராட்ட வேண்டும். நமது வேளாண் விஞ்ஞானிகளையும் இந்தப் பாராட்டு சேரும். தொழில் உற்பத்தி வலுவான வேகத்தில் மீண்டு வருகிறது. கட்டுமானப் பணிகளில் நாம் எடுத்து வரும் புதிய முயற்சிகள் நமது பொருளாதாரம் முழுதிலும் புதிய பயன்பாட்டை உட்செலுத்தி இருக்கிறது. முன் எப்போதும் இராத அளவுக்கு அன்னிய செலாவணி கையெடுப்பு 30 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கிறது. பங்குச் சந்தையில் சென்செக்ஸ், சாதனை நிலையை எட்டி இருக்கிறது. கார்கில் போர் நடந்த போதும், நமது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூபாய் இரண்டு லட்சம் கோடி உயர்ந்து இருக்கிறது.

முன்பு எப்போதும் இருந்ததை விட, வீடு கட்டுவதற்கான சிமெண்ட் தேவை 22 சதவீதம் கூடி இருக்கிறது. நகரங்களில் செல்வந்தர்களுக்கு மட்டுமே இருந்த காப்பீடு தற்போது விவசாயிகளாலும் தொலைதூரத்தில் வசிக்கும் நபர்களாலும் உணரப்படுகிறது. எப்போதும் இருந்ததை விட இப்போது அதிக வலிமை கொண்டவர்களாக இருக்கிறோம். பொக்ரான் - நமக்கு வலிமையை, தன்னம்பிக்கையைத் தந்துள்ளது. அழுத்தங்களுக்கு இடையே அக்னி 2 பரிசோதிக்கப்பட்டது. இது நமது பாதுகாப்பு அரணில் சேர்க்கப்படும்.

பிஎஸ்எல்வி, இன்சாட் 2E ஏவப்பட்டன. ஒரே ஒரு ராக்கெட்டில் ஒன்று அல்ல; மூன்று செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி, ஒவ்வொன்றையும் துல்லியமாக ஒரு புள்ளியில் நிலை நிறுத்தி, நமது விஞ்ஞானிகள் என்னவொரு சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்! இது ஒரு அபாரமான சாதனை. ஆம். ஒன்று மட்டும் இறங்கு முகத்தில் உள்ளது. பணவீக்க விகிதம். 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.3 சதவீதமாக ஆக இருக்கிறது.

உலகம் நம்மைப் பார்க்கும் கோணத்திலும் கடலளவு வேறுபாடு இருக்கிறது. கடந்தாண்டு மிக முக்கியமான ஓர் அடி எடுத்து வைத்தோம் - நமது பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான - பொக்ரான் 2 நீண்ட காலமாக யோசித்து வந்தோம் ஆனால் அடுத்தடுத்த அரசுகளின் மீது இருந்த அழுத்தம் காரணமாக செய்ய முடியாமல் போனோம். சிலர் நமது மதிப்பீட்டை ஏற்கவில்லை. இன்னும் சிலர் நம்மை பொறுப்பற்ற தேசமாக சித்தரிக்க முயன்றனர். ஆனாலும் இன்று உலக நாடுகள் மத்தியில் பொறுப்புணர்வுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குகிறது.

அணு ஆயுதத் திறன் மேம்பாடு ஆகட்டும், ஏவுகணைத் திறன் வளர்ச்சி ஆகட்டும், எதிரிகளை நமது மண்ணிலிருந்து விரட்டுவது ஆகட்டும்.. என்ன விலை கொடுத்தும் நமது தேசநலனை நாம் பாதுகாப்போம்; நாம் சில நடவடிக்கைகளை எடுக்காமல் தடுக்க நினைக்கும் வெளி அழுத்தங்களை எதிர்த்து நிற்போம் என்பதை உலகம் பார்த்து விட்டது. நாம் எதைச் செய்தாலும் அது ஆக்கிரமிப்புக்கு அல்ல; நம்முடைய தற்பாதுகாப்புக்கு என்பதையும், மிகுந்த சுய கட்டுப்பாட்டுடன் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகிறோம் என்பதையும் உலகம் புரிந்து கொண்டது. இந்தக் கோட்பாடுகளைத்தான், பாகிஸ்தான் நம் மீது கார்கில் போரைத் திணித்த போதும் கையாண்டோம். நமது பதிலடி - நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று. எதிரியைத் திணறடிக்கச் செய்த திறன் படைத்தது. நமது நாட்டை பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் என்பதை உலகம் நன்கு உணர்ந்து கொண்டது.

பாகிஸ்தானுடன் நமது நல்லுறவை மேம்படுத்தவே லாகூர் பேருந்துப் பயணம் மேற்கொண்டோம். உண்மையில் நாம் அமைதியும் நட்புறவுமே விரும்புகிறோம் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது. இது, காட்சிக்காக நடத்தப்பட்ட பயணம் அல்ல. இதில் ஆபத்து இருக்கக் கூடும் என்று தெரிந்தே, தீவிரமாகப் பரிசீலித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.

சர்வதேச சமூகத்தில் நமது நேர்மை, நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற்பாடு லாகூர் பேருந்து கார்கிலுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, சிம்லா உடன்படிக்கையை, லாகூர் பிரகடனத்தைப் பாகிஸ்தான் மீறி விட்டது; நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்துக்கான எல்லைகளைத் தாண்டி விட்டதை உலகம் உணர்ந்து கொண்டது. இதுதான் உலகத்தின் பார்வையை மாற்றியது. உலக அரங்கில் பாகிஸ்தான் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டது. முதன்முறையாக உலகம் எங்கும் பரவலாக இந்தியாவுக்கு ஆதரவு கிட்டியது.

இந்த நிகழ்வுகளின் மீது பாகிஸ்தான் மக்களும் (நேர்மறையாக) பிரதிபலிப்பார்கள் என்று நம்புகிறேன். நட்புறவு செய்தியுடன் உங்களை அணுகினோம். பதிலுக்கு நாங்கள் பெற்றது என்ன? நூற்றுக் கணக்கானோர், இன்னுயிர் இழந்தனர். பரஸ்பர உறவு மிக மோசமாக பாதிக்கப் பட்டது. பொருளாதார சமூக வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்க வேண்டிய வளங்கள் போருக்குப் பயன்படுத்தப்பட்டது.

மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த இரண்டு நாடுகளிலும் அமைதி தேவைப்படுகிறது. அமைதி நிலவ, (பரஸ்பர) நம்பிக்கை தேவை. கார்கில் நடவடிக்கையால் நம்பிக்கை வளர்ந்து இருக்கிறதா? ஆயுத ஊடுருவல் நட்புறவுக்கு வழி கோலுகிறதா? பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி தரப்படுகிறது. அவர்களுக்காக முகாம்கள் நடத்தப்படுகின்றன. பயங்கரவாதிகள் குழுக்களாக இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள். அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் தாக்குகிறார்கள். இந்தச் சூழலில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை எவ்வாறு நடைபெற முடியும்?

பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் எந்தப் பிரச்சினையும் தீராது என்பதைப் பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளின் தீய நோக்கம் நிறைவேற விடமாட்டோம். இன்று பஞ்சாபில் தீவிரவாதம் இல்லை. ஜம்மு காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தை வெறுக்கிறார்கள். அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் பாதிப்பை உணர்கின்றன. நாம் அனைவரும் அமைதியை விரும்புகிறோம். மக்கள் தங்களின் குழந்தைகள் எதிர்காலம் பற்றி கவலையில் இருக்கிறார்கள்.

பயங்கரவாதம் - உலகத்துக்கு நேர்ந்த சாபம். இது மதத்தீவிரவாதத்துடன் சேரும் போது, மனித குலத்துக்கே மிகப் பெரும் ஆபத்தாக மாறுகிறது. உங்கள் அனைவருக்கும் இது பரிச்சயமாகி இருக்கும் - 'Karela aur neem chadha' - கரேலாவின் கசப்பு, வேப்பெண்ணைய் கலப்பதால் இன்னும் அதிகரிக்கவே செய்யும். (நமக்குப் புரிகிற மாதிரி இப்படிச் சொல்லலாம் - வேப்பெண்ணெய் சேர்ப்பதால் பாகற்காய்க் கசப்பு இன்னும் கூடவே செய்யும்.)

35,000-க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் பல பாகங்களிலும் பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அமைதியின், வளர்ச்சியின் பாதையில் அது தடை போடுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலகின் கருத்தை ஒன்று சேர்க்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. சுதந்திர நாள் இன்று இந்தியா தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறது. நமது பார்வை எதிர்காலத்தை நோக்கி உள்ளது. உலகத்தில் நமது தகுதி உயர்ந்து உள்ளது. இப்போது மக்கள், நேற்றைய சண்டை சச்சரவுகளால் ஈர்க்கப் படுவதில்லை.

கார்கில் போர் முழுவதிலும், இரண்டு அம்சங்கள் எனக்கு மிகுந்த மன நிறைவு தந்தன. ஜம்மு காஷ்மீர் உட்பட இந்தியாவின் எல்லா பாகங்களிலும் நல்லெண்ணம், சகோதரத்துவம் நிலவியது; எங்கும் சமூகப் பதற்றம் ஏற்படவில்லை. போர் நெருப்பைப் பற்ற வைத்தால் இந்தியாவில் கலவரங்கள் வெடிக்கும் என்று நினைத்தவர்கள் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பார்கள். சண்டை உண்டாக்க சதி செய்தவர்கள் உண்மையில் மனம் நொந்து போய் இருப்பார்கள். சமுதாயத்தின் எல்லாப் பிரிவு மக்களும் போரில் இந்தியா வெற்றி பெற உழைத்தார்கள். வலிமையான தேசப்பற்று, நாட்டின் எல்லா இடங்களிலும் அலை வீசியது.

நான் கார்கிலுக்கு சென்று வீரர்களை சந்தித்த போது, அங்கே ஒட்டுமொத்த நாட்டையும் பார்த்தேன். நாகலாந்து, அசாம், தமிழ்நாடு எல்லாம் மாநிலங்களில் இருந்தும் அங்கே வீரர்கள் நாட்டுக்காகப் போரிட்டார்கள். சாதி, மதம், மண்டலம் தொடர்பான எந்தப் பிரிவும் சிறிதளவும் அங்கே இல்லை. இதுதான் உண்மையான இந்தியா. அவர்களிடம் இருந்த அந்த ஒன்றுபட்ட தன்மை நம்மிடமும் வேண்டும். இதற்காகவே நாம் வாழ வேண்டும். இதற்காக நாம் பாடுபட வேண்டும். இந்த இந்தியாவுக்காக, தேவைப்பட்டால் நமது வீரர்களைப் போல, நமது உயிரைத் தரவும் தயாராக இருக்க வேண்டும்.

தேசப்பற்று கேள்விக்கு உள்ளாகும் போது நாம் அனைவரும் ஒன்றாய் முழு நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இணைந்து நிற்போம் என்பதை, கார்கில் மீண்டும் ஒருமுறை (உலகத்துக்கு) காட்டியுள்ளது. நமது சவால்களை உறுதியுடன் ஒன்றுபட்டு சந்திப்போம். நமது எதிரிகள் எச்சரிக்கையாய் இருக்கட்டும்.

அதே சமயம் இதற்கு சமமான ஒரு பாடமும் கிடைத்தது. இப்போது நெருக்கடி தீர்ந்து விட்டது என்பதால் இந்த ஒற்றுமைப் பிடியைத் தளர விடாதீர்கள். போர் இன்னும் முடியவில்லை. புதிய சவால்கள் நமது கதவுகளைத் தட்டுகின்றன. நமது ரத்த நாளங்களில் ஓடிய தேசப்பற்று, வாழ்க்கையின் முக்கிய அம்சமாக நிரந்தரமாக இருத்தல் வேண்டும்.

மகாத்மா காந்தி நமக்குத் தந்ததை நினைவில் கொள்வோம் - நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் நமக்கு சந்தேகம் எழுந்தால் அவர் நமக்கு கற்றுத் தந்ததை நினைவு படுத்திக் கொள்வோம் - எனது செயல், ஆதரிக்க யாருமின்றி நிர்க்கதியாய் நிற்கும் சாமானியனுக்கு இது உதவுமா? இந்தக் கேள்வியில் நமது ஐயங்கள் அனைத்தும் கரைந்து போகும்.

கார்கில் நமக்குத் தந்த இரண்டாவது சூத்திரம் - நாம் ஒரு நடவடிக்கை எடுக்க யோசிக்கிற போது இந்தக் கேள்வியை நம் முன் வைப்போம் - மலை முகடுகளில் நமது வீரர், உயிரைப் பணயம் வைக்கிறாரே.. அந்த தியாகத்துக்கு நமது செயல் தகுதியானதா? நமது தாய்நாட்டைப் பாதுகாக்கப் போரிடும் வீரரின் எழுச்சிக்கு இணையாக நமது நடவடிக்கையின் நோக்கம் இருக்கிறதா?

நாம் எதிர்கொள்ளும் சவால்களை எல்லையில் தமது கடமையைச் செய்யும் வீரர்களால் மட்டுமே வெற்றி கொள்ள முடியாது. ஒழுங்கு நிறைந்த ஒரு தேசம் இவர்கள் பின்னால் நிற்க வேண்டும். நமது சிந்தனையில் தேசநலனை முன்னிறுத்தி நமது சமூகத்தை முன்னேற்ற வேண்டும்; தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்.

நமது பொருளாதாரம் வலிமையாக இல்லையெனில், தேச பாதுகாப்பில் முக்கிய துறைகளில் நாம் தற்சார்பு உடையவர்களாக இல்லையெனில், புறச்சவால்களை நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாது.

நாம் எங்கே இருந்தாலும் என்ன தொழில் செய்தாலும் நமது பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும். நமது நாட்டின் எந்த ஒரு அங்கமும் பலவீனப்பட அனுமதிக்கக் கூடாது. சவால்களை இன்னல்களை நாம் திறம்பட வெற்றி கொண்டதில் இருந்து, மனஉறுதி இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பது தெளிவாகிறது. இப்போது தேவை எல்லாம் ஓர் உறுதிமொழி தான் - நம்மால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்தே தீருவோம்.

இந்தியாவைப் பற்றி எனக்கு ஒரு பார்வை உண்டு - பசியும் அச்சமும் இல்லாத இந்தியா; அறியாமையும் தேவையும் இல்லாத இந்தியா. வளமான வலுவான (பிறர் மீது) அக்கறை கொண்ட இந்தியாவை நான் கனவு காண்கிறேன். உலகின் மாபெரும் தேசங்களின் மத்தியில் தனக்கென ஒரு பெருமையான இடத்தை தக்க வைத்துக் கொள்கிற ஒரு இந்தியாவைக் காண்கிறேன்.

வாருங்கள் - எல்லா மண்டலங்களும் எல்லா மக்களும் பயனடைகிற சமநிலை வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்குவோம். வடகிழக்கு மாநிலங்கள் உட்பட்ட சில பகுதிகள் சமநிலை அற்ற வளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளன என்பதை அறிந்து வருந்துகிறேன். நாட்டு வளர்ச்சி என்னும் பிரதான நீரோட்டத்தில் வடகிழக்கு மக்களைக் கொண்டு சேர்க்கிற அழுத்தமான கடமை இந்த நாட்டுக்கு இருக்கிறது.

வாருங்கள் - தலித்துகள் ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார சுதந்திரம் மட்டுமல்ல; சமூக நீதியின் பயன்களையும் அனுபவிக்கிற இந்தியாவை உருவாக்குவோம். இந்த லட்சியத்துக்கு நம்மைக் கொண்டு சேர்க்கும் பாதை - 'samata, mamata and samajik samarasta'.

வாருங்கள் - தமது குடும்பத்தின் எதிர்காலம், இந்த தேசத்தின் எதிர்காலத்தை நினைக்கும் ஆற்றல் படைத்த மகளிர் சக்தியின் முழுத் திறனை வெளிப்படுத்தும் இந்தியாவை உருவாக்குவோம். பொருளாதார சமூக கல்வி மற்றும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களாய் மகளிர் திகழ்வது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். நாடாளுமன்றத்தில் மாநில சட்டமன்றங்களில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் பட வேண்டும் என்று விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் பஞ்சாயத்துகளிலும் பிற உள்ளாட்சி அமைப்புகளிலும் எவ்வளவு திறமையாக செயல்பட முடியும் என்பதைப் பெண்கள் நிருபித்துக் காட்டி உள்ளனர்.

வாருங்கள் - நாட்டு வளர்ச்சியின் பயன்களை சிறுபான்மையினர் முழுமையாக அனுபவிக்கும் இந்தியாவை உருவாக்குவோம். நமது நாடு அனைவருக்கும் ஆனது. சிறுபான்மையினர் தேச நிர்மாணத்தில் பங்களிக்க எல்லா வாய்ப்புகளையும் பெற வேண்டும். சட்டத்தின், அரசின் பார்வையில் அனைவரும் சமமான நியாயமான வாய்ப்புகள் பெற உரிமை உடையவர்கள். 'Sarva Panth Samabhav' என்கிற மிக உயர்ந்த சமய சார்பற்ற கோட்பாட்டின் இல்லம் நமது இந்தியா. எல்லா சமூகத்தவர்க்கும், முழுமையான சமய விடுதலையை உறுதி செய்கிறது. உலகில் உள்ள எல்லா மதங்களும் இங்கே ஒற்றுமையாய் இணைந்து செயல்படுவது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை - நமது விலைமதிப்பற்ற பாரம்பரியம் ஆகும்.

கடந்த ஆண்டு, மத வன்முறை சம்பவங்கள் மிகவும் குறைவாக இருந்தன என்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. நமது நாட்டின் ஜனநாயக வழிமுறை மிகப் பழமையானது. இந்த நூற்றாண்டு பிறந்த போது, மிகச் சில நாடுகளில் மட்டுமே ஜனநாயகம் இருந்தது. அவற்றிலும் அந்த நாட்டின் ஒரு சில பேரை மட்டுமே ஜனநாயகம் சென்று சேர்ந்தது. ஆனால் இன்று, சில நாடுகள் மட்டுமே ஜனநாயகத்துக்கு வெளியே உள்ளன. ஜனநாயகத்தை விரும்பாத மக்கள் எந்த நாட்டிலும் இல்லை.

வாருங்கள் - இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம். உலகின் பிற நாடுகளுக்கு இதனை ஒரு சரியான உதாரணம் ஆக்குவோம். நமது அரசியல் ஜனநாயகத்தை, பொருளாதார சமூக ஜனநாயகமாய் மாற்றுவோம். (Let us transform our political democracy into economic and social democracy.)

வாருங்கள் - இந்தியாவை எல்லாத் துறைகளிலும் சாதனையாளர்களைக் கொண்டதாய் ஆக்குவோம். வணிகத்தில் பொருளாதாரத்தில் கல்வியில் அறிவியல் தொழில்நுட்பத்தில் கலையில் பண்பாட்டில் விளையாட்டில்... (சாதனையாளர்களை உருவாக்குவோம்) சாதனை என்றால் இந்தியா என்று செய்வோம். சாதனைகளுக்கு ஒரு 'பென்ச் மார்க்'காக (benchmark) இந்தியா இருக்கட்டும். சமீப காலத்தில் இந்திய இளைஞர்கள் நகர்த்தும் சாதனைகள் மனதுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. அயல்நாடுகளில் பணிபுரியும் இந்தியாவின் இளைய தலைமுறையின் வெற்றிக் கதைகள் நாள்தோறும் தலைப்புச் செய்திகளாகி வருகின்றன. வெளிநாடுகளில் இளைய இந்தியர்கள் இந்த அளவு வெற்றி பெற முடியும் எனில், இவற்றை அவர்கள் இங்கேயே சாதிக்கக் கூடிய சூழலை நாம் ஏன் உருவாக்கக் கூடாது?

வாருங்கள் - உருவாக்குவோம் - Parishrsmi Bharat, a Parakrami Bharat, a Vijayi Bharat. இந்தத் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, எதிர்மறைச் சிந்தனைகளில் இருந்து வெளி வருவோம்.
கடந்த கால பெருமைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். எதிர்காலத்தை எதிர்கொள்வோம். இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் நடை போடுவோம்.
பிரசினைகளை விட்டு, பார்வையை, தீர்வுகளை நோக்கித் திருப்புவோம்.

இருபதாம் நூற்றாண்டு நிறைவடைந்து 21-ம் நூற்றாண்டு நமது வாசல் கதவுகளைத் தட்டுகிற இந்தத் தருணத்தில், நமது பெருமை மிகு கடந்த காலத்தில் இருந்து உற்சாகம் பெறுவோம்; இதைவிடவும் பெருமைமிகு எதிர்காலத்தை உருவாக்க உறுதி கொள்வோம்.

வாருங்கள் - நமது தாய்நாடு பாரதத்தின் இயற்கை மற்றும் மனித வளங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம். 21ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாய் ஆக்குவோம். காலம் கடந்த கலாசாரம், பெருமித நாகரிகத்தின் வாரிசுகள் நாம். பெருமைமிகு சிறப்பு - நமது கடந்த காலம்; அதுவே நமது எதிர்காலமும் கூட. வாருங்கள் - நாம் அனைவரும் இணைந்து குரல் எழுப்புவோம்: ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

SCROLL FOR NEXT