வலைஞர் பக்கம்

தேநீர் கவிதை - ரயிலும் ரயில் நிலையமும்

எஸ்.வி.வேணுகோபாலன்

மானசீகமாகக் கூட

ரயிலைப் பிடிக்க முடியாது

தவற விடுகிறான் அவநம்பிக்கையாளன்.

ரயிலின் கடந்த காலம்

இருக்கிறது வேறோர் ஊரில்

எதிர்காலம் அழைக்கிறது

அடுத்த ஸ்டேஷனுக்கருகில்.

இரவு பகல் வெயில் மழை

எல்லாவற்றையும் சபித்தபடி

பாதுகாப்போடு இருக்கிறான்

உள்ளே பயணிப்பவன்.

ஜவுளிக் கடை துணிப் பந்தைக்

கிழிக்காது வாங்கி

கும்பலோடு அணிந்துகொள்ளும்

கூட்டுக் குடும்பம்போல்

வெயிலாடை அணிந்து கொள்ளும்

ரயிலின் பெட்டிகள் அனைத்தும்

இரவில் தரித்துக் கொள்கின்றன கருப்பு அங்கியை.

உள்ளிருந்து ஜன்னல் கம்பிகளைக் கடக்கும்

குழந்தையின் குரல்களுக்கு

பறவைகள் பதில் சொல்கின்றன

ரயிலின் மேற்பரப்பில்

துரத்தித் துரத்தி வந்தபடி...

எல்லாப் பெட்டிகளின் அருகேயும்

ஓடி ஓடி

கூவிக் கூவி விற்றபின்

மேசைக்குத் திரும்புகின்றன

மிச்சமிருக்கும் உணவுப் பொட்டலங்களும்

அவற்றுக்கான கூக்குரல்களும்.

நாய்கள் திரிகின்றன பிளாட்பாரத்தில்

சிறுகதையொன்றில் காணாமல் போன

சிறுமி ஒருத்தி

இந்த ரயிலிலாவது மீள்கிறாளா

என்று மோப்பம் பிடித்தபடி...

SCROLL FOR NEXT