மனிதர்களுக்கு இடையேயான உறவை காசு - பணம் உறவாக மாற்றிவிட்ட நவீன முதலாளித்துவ சமூகச் சூழலில் இதற்கு நேர்மாறாக அன்பைப் பேசுகிறது இயக்குநர் தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம்.
என் வாட்ஸ் ஆப் எனும் பகிரிசெயலியில் நிலைத்தகவலாக தங்கர்பச்சான் உடனான எனது படத்தைப் வைத்திருந்ததைப் பார்த்த நண்பரொருவர் , உங்களோடு நிற்பது பள்ளிக்கூடம் சினிமா எடுத்தவர்தானே? எனக் கேட்டார்; கேட்டவர் ஒரு தொழிலாளி வர்க்கப்பெண்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பள்ளிக்கூடம் திரைப்படம் இன்றும் மக்கள் மனதில் ஒரு கலைப்படைப்பாக கதைப்படைப்பாக நிலைத்திருப்பதன் அடையாளமே இந்தப் பெண்ணின் இத்தகைய விசாரிப்பு.
இத்தகைய இன்னுமொரு கலைப்படைப்பாக வெளி வரவிருக்கிறது இயக்குநர் தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன.
நவீன முதலாளித்துவம் தன்னை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக தனது உற்பத்திக்கான சந்தையை உலகளவில் தேடுகிறது. இதன் பொருட்டு உழைப்புசக்திகளும் இது சார்ந்த மனிதர்களும் ஊர் விட்டு அண்டை மாநிலம் விட்டு அடுத்தடுத்த கண்டங்களுக்கு வெவ்வேறு நாடுகளுக்கு விரட்டப்படுகிறார்கள்.
உறவுகளுக்கு இடையேயான உணரத்தக்க மென்னுணர்வான அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாம் அருகிலிருந்து உணர முடியாமல், உணர்த்த முடியாமல் கைபேசியில் கணினி வழியாக பரிசளிக்கிற காலச்சூழலாக மாறி விட்டது.
சென்னை, மானாமதுரை, ராமநாதபுரம் எனும் மூன்று இடங்களைச் சார்ந்த வெவ்வேறு பின்னணி கொண்ட மனிதர்கள் வரைந்து கொள்ளும் அன்புக்கோலம் கருமேகங்கள் கலைகின்றன.
செப்டம்பர் 1 வெளிவருகின்ற படத்துக்கான குடும்ப உறுப்பினர்களுக்கான முன்னோட்டக் காட்சி சென்னையில் பிகைன்ட் உட்ஸ் யூடியூப் தொலைக்காட்சி சார்பாக நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் நடிகர் பாரதிராஜா, அதிதி பாலன் ஆகியோர் அவர்களின் குடும்பத்தினருடன் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டு சென்னை கமலா திரையரங்கில் திரண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தி கருத்தினைக் கேட்டறிந்தனர்.
திரையரங்குகளை கார்ப்பரேட் முதலாளிகள் கையகப்படுத்திக் கொண்டு சிறு பட்ஜெட் படங்களுக்கு கதைப்படங்களுக்கு வாய்ப்பை மறுக்கிற சூழல் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாற்றாக மக்களை சிறு பட்ஜெட் சார்ந்த கலைத்திறன் கொண்ட கதைப்படங்களுக்கு ஈர்ப்பதற்கான வெவ்வேறு வழிகளை சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மட்டுமின்றி பாட்டாளிவர்க்கமும் முற்போக்கு பண்பாட்டு இயக்கங்களும் ஈடுபட வேண்டும் என்பதை சமீபத்திய பல நல்ல படங்களுக்கு திரையரங்கம் மறுக்கப்பட்ட சூழல்வழியாக உள் வாங்க வேண்டும்.
சென்னை கமலா திரையரங்கில் திரண்டிருந்த திரளான இளம் பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வயது சார்ந்த பெண்கள் ஆண்கள் என இரண்டு மணிநேரம் ஓடிய படத்தை, படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற ஆரவாரத்தை கை தட்டலை மவுனத்தை தந்து படத்தை குடும்பம் சார்ந்த ரசிகர்கள் ரசித்ததை நானும் ஜனநாயக மாதர்சங்கத்தைச் சார்ந்த மகாமணியன், மஞ்சுளா, எழுத்தாளர் தமிழ்மகன் , பேராசிரியர் பாரதி சந்துரு உடனிருந்து உணர்ந்தோம்.
நல்ல கதைப்படங்களை, கலைப்படங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதெல்லாம் திரையரங்குகள் மீது கட்டுப்பாட்டு உரிமை வகிக்கிற பெருமுதலாளிகளின் கருத்து; அந்தக் கருத்தும் உடைபட்டுப் போனதை எத்தனையோ சூழல்களில் அறிந்து கொண்டது போல கருமேகங்கள் கலைகின்றன படக்காட்சியின் பொழுதும் நேரடியாக அறிந்து கொண்டோம்.
கதை, திரைக்கதை உரையாடல் நெறியாளுகை என தங்கர்பச்சான் வகிக்க, ஒளிப்பதிவை என்.கே.ஏகாம்பரம், படக்கோர்வையை பீ.லெனின், இசையின் வகிபாகத்தை ஜி.வி.பிரகாஷ்குமார் ஏற்க, அற்புதமான பாடல்களுக்கு வைரமுத்து , நிலம் சார்ந்த கலை இயக்கத்தை த.முத்துராஜ் ஏற்றுக் கொண்ட கூட்டு உழைப்பு படத்தை பிரம்மாதமானதொரு கதைப்படைப்பாக கலைப்படைப்பாக கொண்டு வந்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
பாசம், அன்பைத் தேடி பயணிக்கிற முதிர்ந்த மனிதராக உயர் நீதிமன்ற நீதிபதியாக இயக்குநர் பாரதிராஜா அசத்துகிறார்.ஒவ்வொரு காட்சியில் தன் உடல் மொழி வழி ரசிகர்களை ஈர்க்கிறார்.
திருமணம் ஆகாத புரோட்டா மாஸ்டர் ஒரு குழந்தையை வளர்க்க அதுவே தந்தை மகள் பாச பிணைப்பாக மாற, பாசத்திற்காக அல்லாடும் பாத்திரத்தில் யோகிபாபு வாழ்ந்திருக்கிறார். அதிதி பாலன் கம்பீரம் கனிவு என கவனிக்க வைக்கிறார். கெளதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் என இயக்குநர்கள் நடிப்பில் நிறைவான அனுபவத்தை தருகிறார்கள்.டெல்லி கணேஷ், பிரமிட் நடராஜன் என பக்குவட்ட கலைஞர்களோடு பல புதுமுகங்கள் நிறைவைத் தருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் சாரல் எனும் சிறுமி பாத்திரம் கலங்கடிக்கிறது.
சிறார் இல்ல நிறுவனர் பாத்திரத்தில் செய்தி வாசிப்பாளர் நிஜந்தன் இயல்பாக நடித்து அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.
கருமேகங்கள் படத்தில் கலைந்து போனாலும் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மீது கருமேகங்கள் ஒன்று திரண்டு கலந்து பெருமழையை பொழியச் செய்து விட்டன.
இரா.தெ.முத்து,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்