4000 மீட்டர் உயர மலை சிகரத்திலிருந்து குதித்து, அந்தரத்தில் மிதந்தபடி அருகில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் நுழைய முயற்சிக்கும் சாகச வீடியோ ஒன்று யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
ரெட் புல் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் விளம்பரமாக அடிக்கடி பல சாகச வீடியோக்களை பதிவேற்றி வருகிறது. அப்படி சமீபத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்று யூடியூபில் வைரல் ஹிட் அடித்துள்ளது.
இந்த சாகசத்தை செய்தது ஃப்ரெட் ஃபூகன் மற்றும் வின்ஸ் ரெஃப்பெட் என்ற இரண்டு விங்ஸ்யூட் ஃப்ளையர்கள் (wingsuit flyers). விங்ஸ்யூட் என்பது விமானத்திலிருந்து கீழே குதித்து அந்தரத்தில் சாகசம் செய்பவர்களுக்கான பிரத்யேகமான உடை. இந்த உடையை அணிந்து சாகசம் செய்து வானில் மிதந்து/பறப்பவர்களே ஃப்ளையர்கள்.
20 வருடங்களுக்கு முன்னால் ஒரு விமானத்திலிருந்து கீழே குதித்து, அந்தரத்தில் மிதந்து, மீண்டும் அதே விமானத்துக்குள் நுழைந்த பாட்ரிக் டி கேயர்டன் என்ற சாகச வீரரின் நினைவாக அதே போன்றொரு முயற்சியை செய்து பார்ப்பதே மேற்சொன்ன இரண்டு சாகச வீரர்களின் நோக்கம். ஆனால் அப்போது ஒருவர் தான் இருந்தார். இம்முறை இரண்டு பேர். ஸ்விட்சார்லாந்தின் யுங்க்ஃப்ராவ் என்ற பனிமலையின் 4062 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து, கீழே பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் நுழைய வேண்டும். ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைகளில் ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூப்பர்மேன் சாகசத்துக்கு வானில் ஒரு கதவு (A Door in the Sky) என்று பெயரிட்டார்கள். இதற்காக பல மாதங்கள் பயிற்சி எடுத்தார்கள். கிட்டத்தட்ட 100 முறை சோதனையோட்டம் நடந்தது. இத்தனை நாள் பயிற்சியை செயலில் கொண்டு வருவதற்கான நேரம் வந்தது. இரண்டு வீரர்களும் நினைத்ததை சாதித்தார்களா? கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்.
வழக்கமாக இது போன்ற டைவிங் முயற்சிகளில் தரைக்கு அருகே வந்துவிட்டாலோ, முயற்சியில் பிசகு ஏற்பட்டாலோ சாகச வீரர்கள் தங்கள் பாராசூட்களை பயன்படுத்தி தரையிறங்கிவிடுவார்கள். ஆனால் இந்த இருவரும் அப்படி செய்யாமல், விமானத்துக்குள் நுழைவதிலேயே கவனமாக இருந்து சாதித்தும் காட்டியுள்ளார்கள். விடா முயற்சியும், கடும் பயிற்சியும் நாம் நினைத்ததை சாதிக்க வைக்கும் என்பதற்கு சான்றாக இந்த வீடியோ உள்ளது என பலர் இதை பகிர்ந்து வருகின்றனர்.
பதிவேற்றப்பட்ட 5 நாட்களில் இதுவரை 32 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.