அ
ப்புசாமி - சீதாபாட்டி ஜோடியைப் படைத்த மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, சமீபத்தில் ‘‘அப்புசாமி - சீதா பாட்டியை உருவாக்கி 50 வருஷம் ஆச்சு. யாரும் அதைக் கொண்டாடாவிட்டாலும், அவர்களைப் படைத்த நான்கூட இதைச் சொல்லாவிட்டால் எப்படி?’’ என்று கேட்டார். 50 வருடங்களுக்கு முன் அவர்கள் எப்படி தன்னுடைய கற்பனையில் உதயமானார்கள் என்று கேட்டோம்:
‘‘வாராவாரம் ரா.கி.ரங்கராஜன், புனிதன், நான் மூன்று பேரும் ‘குமுத’த்தில் ஒவ்வொரு கதை எழுத வேண்டும் என்றார் எங்கள் எடிட்டர் எஸ்.ஏ.பி. ஒரு வாரம் ரங்கராஜனும், புனிதனும் கொடுத்துவிட்டார்கள். நான் கதை எழுதலே. ‘என்ன காரணம்’னு எடிட்டர் கேட்டார். ‘வீட்டுல எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சின்ன வாக்குவாதம். அதனால என்னால் கதை எழுத முடியலே’ என்றேன். எடிட்டர் அடுத்த கேள்வியாக, ‘உங்கள் மாமனார் ரொம்பக் கோபக்காரரோ?’ என்று கேட்டார். பதிலை நான் மழுப்பினாலும் அவர் விடலே. மாமனார் - மாமியார் சண்டை மாதிரி கற்பனை பண்ணி எழுதுங்க. ஓல்ட் கப்பிள் ஆக இருந்தா நல்லா இருக்கும். எழுதுங்க, எழுதுங்க!’ன்னு சொல்லிவிட்டார்.
‘‘சீதாபாட்டிக்கு சீதாலக்ஷ்மின்னுதான் பெயர் வச்சிருந்தேன். அது கொஞ்சம் கர்நாடகமா இருக்கிறதோன்னு தோணித்து. அதனால சீதாபாட்டின்னு வச்சிண்டேன். கொஞ்சம் மாடர்னா இருக்கணும்கறதுக்காக, ரீடர்ஸ் டைஜஸ்ட் படிக்கிற கேரக்டரா வச்சேன். பக்கத்து வீட்டுல ஒருத்தர் குப்புசாமின்னு பேரு. ராத்திரி 11 மணிக்கு வந்து கதவைத் தடதடன்னு தட்டுவார். எனக்கு அவரை உதைக்கணும்னு தோணும். தம்பதிக்கு என்ன பெயர்னு கேட்டதும் சீதாபாட்டி - அப்புசாமின்னு சொல்லிட்டேன்.
‘‘யார் படம் போடறதுன்னு பேச்சு எழுந்தது. கோபுலு, தாணு, பாபு என்று பல பெயர்களை யோசித்துவிட்டு, கடைசியில் அப்போது குமுதத்துக்கு நிறையப் படம் போட்டுக்கொண்டிருந்த ஜெயராஜை அப்ரோச் பண்ணலாம்னு யோசிச்சோம். ‘மஞ்சள் பிசாசே, கொஞ்சம் நில்’ என்கிற கதைதான் முதல் அப்புசாமி - சீதாபாட்டி கதை.
1963-ல் வெளியான முதல் கதை. அப்புசாமி பொடி கிடி எல்லாம் போடறவர். இதுக்கு சீதாபாட்டி எதிர்ப்பு. வாராவாரம் இவர்களைப் பத்தி எழுத எழுத... நல்லா பிக் அப் ஆச்சு. ‘‘அந்தச் சமயம் சாவி விகடன்ல ‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதிக்கொண்டிருந்தார். ‘அது மாதிரி வேற ஒரு நாட்டை பேக்ரவுண்டா வச்சு ஒரு சீரியல் ஆரம்பிங்க’ என்றார் எடிட்டர். அவர் அமெரிக்கா போகாமயே ஜோரா எழுதிட்டார். நான் எந்த ஊருக்குப் போகறதுன்னு யோசிச்சேன். ‘ஆப்பிரிக்காவை வச்சு எழுதுங்கோ’ என்றார் எடிட்டர். ஆப்பிரிக்கா பத்தி லைப்ரரில எல்லாம் போய் தகவல் சேர்த்துண்டு வந்து, ‘அப்புசாமி யும் ஆப்பிரிக்க அழகியும்’ எழுதினேன். அப்புறம் அரேபியாவை வச்சு ‘1001 அப்புசாமி இரவுகள்’ எழுதினேன். ‘மாணவர் தலைவர் அப்புசாமி’ இன்னொரு சீரியல்.
‘‘ஓவியர் ஜெயராஜும் படங்கள் போட நிறைய ஐடியா கொடுப்பார். சிச்சுவேஷன் என்னன்னு தெரிஞ்சதும் அவரே படம் போட்டுடுவார். அப்புசாமி தலைகீழா தொங்கற மாதிரி ஒரு சீன். நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கறபோது, சிரிச்சுச் சிரிச்சும், மெதுவான குரல்லயும் பேசிப்போம். சந்தோஷமா இருக்கும். அப்போ ரா.கி.ரங்கராஜன் எங்களைப் பார்த்து ‘புருஷனும் பொண்டாட்டியும் பேச ஆரம்பிச்சுட்டீங்களா?’ என்று கிண்டல் பண்ணுவார். ஜெயராஜ் அவரோட லெட்டர் ஹெட்லயே அப்புசாமி - சீதாபாட்டியைத்தான் லோகோவா போட்டிருக்கார். அப்படின்னா அவர் அந்த கேரக்டரை எல்லாம் எவ்வளவு ரசிச்சிருக்கார்னு பாருங்க!’’ என்றார் பாக்கியம் ராமசாமி.