சென்னையின் அடையாளங்களில் ஒன்று ‘தி இந்து’ நாளிதழ். எம்.எஸ்.விஸ்வநாதன், சிவகுமார், கே.பாலசந்தர், வி.சாந்தா, ராமநாதன் கிருஷ்ணன், அசோகமித்திரன், சாரதா மேனன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள், சென்னை பற்றிப் பகிர்ந்துகொண்ட அவர்களது நினைவுகளின் தொகுப்பு இந்நூல். ‘தி இந்து மெட்ரோபிளஸ்’ இணைப்பிதழில், ‘மெட்ராஸின் நினைவுகள்’ என்கிற தலைப்பில் 2008-2011 கால கட்டத்தில் வெளியான இந்தப் பதிவுகள், வாசிப்போரைக் காலப் பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. சினிமா, விளையாட்டு, மருத்துவம், இலக்கியம், வணிகம் எனப் பல்துறை ஆளுமைகளின் நினைவுகள்வழி சென்னையின் வரலாறு குறித்த புதிய பரிமாணத்தைப் பெற முடிகிறது. நூல் நெடுகிலும் தரப்பட்டிருக்கும் ‘தி இந்து ஆவணக்காப்பக’த்தின் கறுப்பு-வெள்ளை ஒளிப்படங்கள் நினைவுகளுக்கு மேலும் வலுக்கூட்டுகின்றன.
டாக்டர் கு.கணேசனுக்கு சர்வதேச விருது
லண்டனில் இயங்கிவரும் உலகத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் உலகளவில் மருத்துவப் பணியோடும் சமூகச் சிந்தனையோடும் செயலாற்றும் சிறந்த மருத்துவர்களைத் தேர்வு செய்து, ‘உலக மருத்துவச் சாதனையாளர்’ விருது வழங்கிவருகிறது. எளிய தமிழில் மருத்துவம் குறித்து எழுதிவரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் கு.கணேசனுக்கு இந்த ஆண்டுக்கான சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது. 40 ஆண்டுகளாக மருத்துவப் பணியோடு தமிழில் தொடர்ச்சியாக மருத்துவக் கட்டுரைகளையும் நூல்களையும் அவர் எழுதிவருகிறார்.