வலைஞர் பக்கம்

வட சென்னைக்கு நல்ல மழை வாய்ப்பு; மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

செய்திப்பிரிவு

இன்று (நவம்பர் 10) வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் நல்ல மழை பெய்யும் ஆனால் சென்னையின் மற்ற பகுதிகளில் மிதமான அளவே மழை பெய்யும் என வானிலை ஆர்வலரும் பதிவருமான ’தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் (தமிழ்நாடு வெதர்மேன் ஃபேஸ்புக் பக்கம்), "இன்று வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் லேசான மழை இருக்கும்.

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. திருவாரூரில் இன்று இரவுமுதல் நல்ல மழை பெய்யும். அந்தப் பகுதியில் காற்றின் போக்கு மழைக்கு சாதகமாக இருக்கிறது.

ஞாயிறுவரை காத்திருப்போம்:

சென்னையில் மீண்டும் மழை வெளுத்துவாங்க வரும் ஞாயிறுவரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால், சென்னையில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்றால் வடகிழக்கு பகுதியில் காற்று குவிந்து மேகக்கூட்டங்கள் உருவாக வேண்டும். இப்போது ஒரு மேகக்கூட்டம் உருவாகியிருக்கிறது ஆனால் அது சற்று தொலைவில் இருக்கிறது.

அதேவேளையில் வடகிழக்குப் பகுதியில் உள்ள அந்த மேகக்கூட்டமானது நன்றாக முதிர்ந்திருப்பதால் சென்னையை நெருங்கும்போது அது வலுவிழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் அதை கூர்ந்து கவனித்துவருவோம். அதில் மாற்றம் ஏதும் இருந்தால் சொல்கிறேன்" இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT