வலைஞர் பக்கம்

தேநீர் கவிதை: எனக்குள் ஒலிக்கும்கொலுசு

சென்னிமலை தண்டபாணி

தூக்கி எறிந்துவிட்டுப்

போ

ஒரு புன்னகையை.

தூர தேசங்களுக்குப்

பயணிக்கிறேன் நான்.

உன்

கூந்தல் இரவில்தான்

தேடிக்கொண்டே இருக்கிறேன்...

எனக்கான வெளிச்சத்தை.

கடந்த காலத்தின்

கண்ணீர்த் துளிகளில்தான்

நிகழ்காலத்துக்குள்

நீந்திக் கொண்டிருக்கிறேன்.

தனிமை

வலைபின்னுகிறது.

சிலந்திப் பூச்சியாய்ச்

சிக்கித் தவிக்கிறேன்.

மணலற்ற ஆறாய்

வறண்ட வாழ்க்கையில்

வந்து விழுவாயா

ஒரு மழைத்துளியாக?

இந்த வயதில்

எதற்குக் கொலுசு என்கிறாய்.

எந்த வயதென்றாலும்

எனக்குள் ஒலிப்பது

அந்தக் கொலுசுதானே?

நீ பார்த்துவிட்டுப்போன

பார்வை வெளிச்சத்தில்தான்

கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்

இந்த இரவை.

அறுந்த வீணையின்

நரம்புபோல்

நீ வராத நாளெல்லாம்

வதைக்கிறது என்னை.

என் ஓடம்

உன் கரைதேடித்

தத்தளிக்கிறது.

என்

அறுவடைக் காலத்தில்

மட்டும்

எங்கிருந்து விழுகின்றன

இத்தனை கண்ணீர்த் துளிகள்?

SCROLL FOR NEXT