வலைஞர் பக்கம்

இஸ்லாமியர் வாரிசுகளுக்கு நலவாரியம் மூலம் கல்வி உதவி

கி.பார்த்திபன்

தமிழக அரசு சிறுபான்மையினருக்கு அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகம் மூலம் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. அது குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அ. கருப்பையா.

சிறுபான்மை பிரிவு இஸ்லாமியர்களுக்கு நலவாரியம் உள்ளதா?

ஆம். இஸ்லாமியர்களின் பள்ளி வாசல்கள், மதரசாக்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆலீம்கள், பேஷ், இமாம்கள், ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீ்ம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் பொரு ளாதாரம் மற்றும் கல்வி நிலையில் முன்னேற்றம் அடை வதற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது.

உலமாக்கள் உறுப்பினர் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற நிபந்தனைகள் உண்டா?

உண்டு. நலவாரியத்தில் உறுப்பினர் பதிவை 3 ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் புதுப்பித்திருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை பெற இயலும். அதன்படி 10-ம் வகுப்பு படித்து வரும் உறுப்பினர் குழந்தைகளுக்கு ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப் படுகிறது.

அதுபோல் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் உறுப்பினர் குழந்தைகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், 12-ம் வகுப்பு படித்தல், தேர்ச்சி பெறுதல் மற்றும் முறையான பட்டப் படிப்பு படிக்கும் உறுப்பினர் குழந்தைக்கு ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முறையான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,750, முறையான பட்ட மேற்படிப்பு மேற்கொள்வோருக்கு ரூ.2,000, பட்ட மேற்படிப்பு விடுதியில் தங்கி பயில்பவராக இருந்தால் ரூ.3,000 வழங்கப்படுகிறது.

தொழிற்கல்வியில் உதவித்தொகை வழங்கப் படுகிறதா?

ஆம். தொழிற்கல்வி படிப்போருக்கு ரூ.2,000, விடுதியில் தங்கி பயில்வோருக்கு ரூ.4,000 வழங்கப்படுகிறது. மேலும், தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு படிப்போருக்கு ரூ.4,000, அதே விடுதியில் தங்கி பட்ட மேற்படிப்பு படிப்போருக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. ஐடிஐ, பாலிடெக்னிக் படிப் போருக்கு ரூ.1000, விடுதியில் தங்கி பயின்றால் ரூ.1,200 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சுய தொழிலுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதா?

தமிழகத்தில் உள்ள படித்த வேலையற்ற சிறுபான்மை யினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்தி சுய தொழில் மேற்கொள்ள பல்வேறு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் குறித்த பயிற்சி எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT