வலைஞர் பக்கம்

தொழில் பயிற்சிகளும் உதவித் தொகைகளும்

கி.பார்த்திபன்

அரசின் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களான UYEGP, NEEDS மற்றும் மத்திய அரசின் PMEGP ஆகியவற்றில் அளிக்கப்படும் பயிற்சி, பயிற்சிக் காலத்தில் அளிக்கப்படும் உதவித்தொகை ஆகியவை குறித்து சொல்கிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் க.ராசு.

#தமிழக பயிற்சி நாட்களில் உதவித்தொகை அளிக்கப்படுமா?

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.120 வீதம் 25 நாட்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

#PMEGP திட்டத்தின் கீழ் எந்தெந்த தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது?

தமிழக அரசின் திட்டங்களான UYGEP, NEEDS ஆகியவற்றைப் போலவே உற்பத்தி,சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு 2 வாரமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 நாட்களும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

#இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை எதுவும் இல்லை. ஆனால், பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்கப்படுகிறது. அதன்படி, உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு 2 வாரம் பயிற்சி அளிக்கும் நிறுவனத்திற்கு ரூ.3155 கட்டணமாக வழங்கப்படுகிறது. அதுபோல, சேவைப் பிரிவில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு ரூ.672 கட்டணமாக வழங்கப்படுகிறது.

#அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சிதான் அளிக்கப்படுமா?

மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பயிற்சியில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படாது. உதாரணமாக, ஒருவர் மளிகைக் கடை தொடங்க உள்ளார் என்றால் கடைகளுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்படுவதில்லை. தொழிலை நேர்த்தியாக செய்வது, சந்தைப்படுத்துதல் குறித்து மட்டும் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதனால் வெவ்வேறு தொழில் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தாலும் ஒரு மாதிரியான பயிற்சிதான் அளிக்கப்படுகிறது.

#ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட அளவு தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு உள்ளதா?

ஆம். ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவுக்கு தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு (எண்ணிக்கை) மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் உள்ளது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாறுபடும். மேலும், ஒவ்வொரு திட்டத்தின் கீழும் குறிப்பிட்ட அளவு பயிற்சியாளர்கள் சேர்ந்தால், வங்கிக் கடனுதவி அனுமதிக்கு பின், தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT