வார ராசிபலன்கள்

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ பிப்.12 - 18

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் வேலைப்பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள் தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

          

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். வார மத்தியில் பண வரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

திருவோணம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். காரிய தடையால் மன குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பண வரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. மன அமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். திட புத்தியும், பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் மேலோங்கும். பண வரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம் புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சுக்கிரன், புதன், சனி, ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பண வரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். மதிப்பு கூடும்.

பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

சதயம்: இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைய கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மன மகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும்.

பெண்களுக்கு கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கு இடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டு கட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப பிரச்சனை தீரும். மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் சரளமாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். மக்களின் ஆதரவும் பெருகும். மறைமுக வருவாய்கள் பெருகும்.

ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமையும், லட்சுமி கடாட்சமான நிலையும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிரிந்தவர்கள் கூட ஒன்று கூடி மகிழ்வார்கள். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறி மன நிம்மதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு யாவும் கிடைக்கப்பெறும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT