வார ராசிபலன்கள்

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ பிப்.5 - 11

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சனி, ராகு - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் சகோதர வழியில் சங்கடங்கள் வந்து மறையலாம். நிதானமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டிய காலம் இது. பணப் புழக்கம் இருந்தாலும் பண நெருக்கடி வந்து போகும். இரவுப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிரிகளால் ஏற்படும் ஓவ்வொரு பிரச்சனையும் உங்களுக்கே நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காமல் தவிர்க்கவும். அரசாங்க வழிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கண் பிரச்சனைகள் வந்து போகும். புத்திரர்கள் இடத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் பின் அது லாபத்தைக் கொடுக்கும். சில நேரங்களில் மனம் ஒரு நிலை படாமல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான காலகட்டம் இது. பண வரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.

தொழில் துறையினருக்கு ஏற்ற இறக்கமின்றி இருக்கும், தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பண வரத்து இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டிய காலகட்டம். கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண் கவலையை தவிர்ப்பது நல்லது.

          

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுய தொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர். மாணவர்கள் படிப்பில் மந்த நிலை நீங்கும்.

பூசம்: இந்த வாரம் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி வரும். சமூகப் பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.

ஆயில்யம்: இந்த வாரம் வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ முத்து மாரியம்மனை அர்ச்சனை செய்து மனம் உருக வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - ரண ருன ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சனி, ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. குடும்ப ஒற்றுமையில் சிறு சலனங்கள் ஏற்படலாம். அதனால் கவனமுடன் நடக்கவும். வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களை கண்டிக்கும் போது தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் நிதானமாகப் பேசவும்.

அடிக்கடி மனக் குழப்பங்கள் வந்து மறையும். புத்திரர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் உங்களின் அன்பான அணுகு முறையால் எல்லாரையும் திருத்திவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நெருக்கடி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

தொழில் துறையினர் புது முதலீடுகள் செய்யாமல் நிதானமாக இருக்கவும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். பெண்கள் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்கள் அதிகம் கண் விழித்துப் படிக்காமல் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

மகம்: இந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வர வேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். தொழிலில் திறமை அதிகரிக்கும். உப தொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.

பூரம்: இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி கிடைக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு விளக்கேற்றி வழிபட துன்பம் எல்லாம் தீர்ந்து சிறப்பான பலன் கிடைக்கும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் உங்கள் இல்லங்களில் சுபமான நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். சில சமயங்களில் அசாத்திய தைரியத்தால் சில முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கே பாதகமாகி விடும். அதனால் நிதானமாக இருப்பது நன்மையாகும். குடும்பத்தில் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். அந்த வரனை முடிக்கும் போது உறுதியான நிச்சயம் செய்து கொள்ளவும்.

தொடர்ந்து ஏற்படும் சுபச் செலவுகளால் பண நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். தேவையற்ற பேச்சுகள் புது எதிரிகளை உருவாக்கும். மனைவி வழியில் அனுகூலம் கிடைக்கும். உதவுயும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

தொழில் துறையினர் வளர்ச்சியை காண்பார்கள். முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்களின் கல்வித் திறன் மேன்மை பெறும். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு.

அஸ்தம்: இந்த வாரம் உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி தங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக வாக்கு வாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தாயாருடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.

பரிகாரம்: நவ கிரகங்களில் இருக்கும் புதன் பகவானுக்கு பச்சை பட்டு சாத்தி வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT