நன்றி மறவாத குணமும், நலிந்தோருக்கு நல்லதே செய்யும் உள்ளமும் கொண்ட நீங்கள், ஏட்டறிவைவிடப் பட்டறிவு அதிகமுடையவர்கள்.
உங்கள் ராசிக்கு 12-ம் ராசியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் பண விரயம், வீண் அலைச்சல் என அடுக்கடுக்காக வந்தாலும் அதையெல்லாம் சமாளித்து சுப விரயமாக மாற்றிக் கொள்வீர்கள். இனி ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
குடும்பத்தில் உள்ளவர்கள் இனி நீங்கள் சொல்வதை கேட்பார்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் சில சமயங்களில் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். அவர்களால் மன உளைச்சல் வந்து போகும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். எனினும் உயர்கல்வி சிறப்பாக இருக்கும்.
1.1.2026 முதல் 31.5.2026 வரை ஜென்ம குருவாக நிற்பதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் மனதை வாட்டும். முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 2-ம் வீட்டுக்கு செல்வதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிரச்சினைகளிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். 14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு 3-ம் வீட்டுக்கு செல்வதால் தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
16.1.2026 முதல் 23.2.2026 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தலை தூக்கும். திறமையான வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. சிலருக்கு சொந்த வீடு, மனை வாங்குவதில் அலைச்சல் உண்டாகும்.
வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கோயில் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.
டிச.4-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். நட்பு வட்டம் விரிவடையும். 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. பண விஷயத்தில் இரக்கப்பட்டு ஏமாற வேண்டாம். டிச. 5-ம் தேதி முதல் கேது 2-ம் இடத்துக்கு வருவதால் பேச்சில் கவனமாக இருங்கள். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டு. ராகு 8-ம் வீட்டுக்கு வருவதால் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கன்னிப் பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கல்யாணத் தடைகள் விலகும். மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வியில் வெற்றியுண்டு.
வியாபாரத்தில் ஜூன் மாதத்திலிருந்து லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்து லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் வருவார்கள். கல்வி நிறுவனங்கள், ஏஜென்ஸி, புரோக்கரேஜ், கடல் வாழ் உயிரினங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. நீண்டநாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில் கடினமான வேலைகளை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்துக்கே மாற்றல் கிடைக்கும். கணினி துறையினருக்கு ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அதிகம் கண்விழிப்பதை யும், அர்த்த ராத்திரியில் உணவு உண்பதையும் தவிர்க்கப் பாருங்கள்.
கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடிவரும். மூத்த கலைஞர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும்.
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, நீண்டநாள் விருப் பங்களை நிறைவேற்றித் தரும்.
பரிகாரம்: சென்னை மீஞ்சூரில் இருந்து 6 கிமீ தொலைவில் தேவதானம் எனும் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு வெள்ளிக்கிழமையில் துளசி சமர்ப்பித்து வணங்குங்கள். நினைத்தது நிறைவேறும்.