தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) குறி விலகாத அம்பை போல் குறிக்கோள் தவறாதவர்களே. எவ்வளவு சம்பாதித்தாலும் அலட்டிக்கொள்ளாதவர்களே. உயர்ரக வாகனம், விமானம் என மாறி மாறி பயணித்தாலும், பழைய மிதிவண்டி பயணத்தை மறக்காதவர்களே! மதம் மீறிய மனிதநேயர்களே. மனசாட்சிக்கு பயந்தவர்களே!
ஏறக்குறைய எட்டரை ஆண்டுகளாக உங்களை ஆட்டிப் படைத்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். கார் இருந்தும் பெட்ரோல் போட காசில்லை என்ற நிலை மாறும். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்கியம் அடைவீர்கள். நடைபயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பெண்ணுக்கு ஏற்ற நல்ல வரன் அமையும். சொந்தபந்தங்கள் வியக்கும்படி திருமணத்தை முடிப்பீர்கள். சொந்த வீட்டில் குடிப்புகுவீர்கள். பலரின் உள்மனசில் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ளாமல் வெளிப்படையாக, வெகுளியாக பேசி சிக்கிக் கொண்டீர்களே! இனி எதிலும் கறாராக இருப்பீர்கள். யாரோ செய்த தவறால் நீங்கள் தலைமறைவானீர்களே, வழக்கில் இனி வெற்றிதான். கடனை நினைத்தும் நடுங்கினீர்களே, கல்யாணம் கிரகப்பிரவேசத்தில் எல்லாம் உங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்களே, இனி எல்லோ ரும் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள். பலரும் வலிய வந்து பேசுவார்கள். விஐபி அந்தஸ்து பெறுவீர்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்துக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன் படுத்துவார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரிக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொண்டு நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர், மாநிலத்தவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினைகள் தீரும். உங்களை ஏமாற்றியவர்களை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.
07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் ராசிநாதனும் - சுகாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் உதவி கிடைக்கும். ஷேர் பணம் தரும். அரசாங்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் வாங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். அவ்வப்போது பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் விலகும்.
இல்லத்தரசிகளே! உடல் ஆரோக்கியம் மேம்படும். சமையலறை சாதனங்களை புதுப்பிப்பீர்கள். கணவரின் வியாபாரத்தை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் திறமையை குறைவாக எடைபோட்டவர்கள் வியக்கும்படி சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! கூடிய விரைவில் கெட்டி மேளச்சத்தம் கேட்கும். தடைப்பட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். முகப்பரு, தோலில் நமைச்சல் வந்து நீங்கும்.
வியாபாரிகளே, கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். அனுபவம் மிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளை சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க கெடுபிடிகள் குறையும்.
உத்தியோகஸ்தர்களே, பிரச்சினை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு.
இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துக்கொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.
பரிகாரம்: தேனிக்கு அருகில் உள்ள குச்சனூரில் வீற்றிருக்கும் சுயம்பு சனீஸ்வர பகவானை விசாகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |