சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): எடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ, தொழிற்கூடத்தையோ திறம்பட வழிநடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. பேச்சிலே காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். சனிபகவான் 7-ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாக கையாளுங்கள். மகனின் உயர் கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். உத்தியோகம், வியாபாரத்தின்பொருட்டு குடும்பத்தை பிரியவேண்டி வரும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக-பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வாகனம் அமையும். திருமணம், காதுகுத்து, உபநயனம் என வீடு களைகட்டும்.
15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய மாற்று வழி பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.
07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - அட்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் பிள்ளை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும்.
இல்லத்தரசிகளே! கணவரின் சின்ன சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! சக ஊழியர்களை விமர்சித்து பேசவேண்டாம். வேலைப் பளு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
கன்னிப் பெண்களே! எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோ சிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். வியாபாரிகளே, கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். கூட்டுத் தொழில் வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசி-பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும்.
உத்தியோகஸ்தர்களே, முன்புபோல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.
இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் பிரச்சினைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.
பரிகாரம்: திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தொழுநோய் மற்றும் காசநோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி நல்லது நடக்கும்.
மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |