மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழி நடத்தும் அளவுக்கு பட்டறிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள் காசு பணத்துக்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால் இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். இனி ஓரளவு வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சினை தீரும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டதிபதியும்-லாபாதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பழைய கடனைத் தீர்ப்பதற்கு புது வழி பிறக்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். தொண்டை புகைச்சல், யூரினரி இன்பெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும்.
15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு சொந்தத்திலேயே நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.
07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்திலும் மதிப்பு, மரியாதை கூடும்.
இல்லத்தரசிகளே! தங்க ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். மாமனார், மாமியாருடனான கருத்துமோதல்கள் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! இனி பணியில் நிரந்தரமாக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களே! விரைவிலேயே திருமணம் நடைபெறும். மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.
வியாபாரிகளே, மற்றவர் களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகத்தில் இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும்.
இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.
பரிகாரம்: விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.
மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |