சிறப்பு பலன்கள்

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023 | குரு பார்க்க கோடி நன்மை

செய்திப்பிரிவு

உலகமே போற்றி வணங்கும் குருபகவான் பிலவ வருடம் பங்குனி மாதம் 30-ம் தேதி, புதன்கிழமை (விடிந்தால் வியாழன்) 13-/14.04.2022 அதிகாலை 04 மணி 08 நிமிடத்துக்கு தன் சொந்த வீடான மீனத்துக்குள் அமர்ந்து 22.04.2023 வரை ஆட்சி செய்ய இருக்கிறார். இவர்தான் என்னுடைய குருநாதர் என்று சொல்லும் போதே நம்ம மனதில் உருவாகும் அந்த மரியாதையையும் சந்தோஷம் கலந்த பயபக்தியையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குரு என்றால் நம் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் சொல்பவராக இருக்க வேண்டும். எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அந்தத் தொழிலை நன்றாக அறிந்தவர் அதை அறிய விரும்புபவருக்கு அவர் விளங்கிக் கொள்ளும் வகையில் எளிதாக சொல்லிக் கொடுப்பவரை குருவென வணங்குதல் வேண்டும்.

கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டையாக இருந்தாலும் மண்பாண்டம் செய்தல், மரவேலை செய்தல், கார் மெக்கானிக் என எந்தத் தொழிலாக இருந்தாலும் கற்றுக் கொடுப்பவர்தான் குரு. குரு என்பவர் வித்யா குரு, தீட்சா குரு, ஞான குரு, லோக குரு என பலவாறாக உருவெடுப்பவர். வித்யா குரு பலவகை வித்தைகளை தன்னை நாடி வந்தவர்களுக்கு சொல்லித் தருபவர். பஞ்சாட்சரம் உள்ளிட்ட மந்திரங்களை மாணவனின் மன ஓட்டம் அறிந்து முறைப்படி போதிப்பவர் தீட்சா குரு. தெளிவான உயர்ந்த ஞானத்தை தன் எதிரே உள்ளவரின் மனதில் விதைப்பவர் ஞானகுரு. ஒவ்வொருவரின் கர்ம வினைகளைப் போக்கி, பிறப்பின் சூட்சுமத்தை உணர்த்தி, உயிர்களின் இருளைப்போக்கி உள்ளத்தில் ஒளி விளக்கேற்றி அழியாத பேரின்ப வாழ்வளிப்பவர்தான் லோக குரு.

இத்தனைப் பெரிய அளவிலா ஆற்றலை அண்டவெளியில் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் குருவானவர் பெயர்ச்சியாகிறார் என்றவுடன் நமக்கு அவரின் ஆசிர்வாதம் கிடைக்குமா! இந்த மாற்றத்திலாவது நம் வாழ்வில் முன்னேற்றம் வருமா? அவரின் ஆசிர்வாதம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில்தான் இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மைதான். குருபகவான் மட்டும்தான் உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும், பார்வையால் யோகங்களைத் தருபவர். குருபகவான் நேரில் வந்து நம்மை வாழ்த்தாவிட்டாலும் அவரிடமிருந்து பிரசாதம் நமக்கு வந்து சேர்ந்தாலே அதுவே பெரிய பாக்யம் அதுவே பெரிய பொக்கிஷம்தானே-!

நான்கரை வருடங்களுக்குப் பிறகு முழு பலத்துடன் குருபகவான் அமர்வதால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாகும். வேலைக்கிடைக்கும். பதட்டமாக இருந்தவர்கள் இனிநிம்மதியாக இருப்பார்கள். மகப்பேறுக்காக மருத்துவமனையே தவமென இருந்தவர்களுக் கெல்லாம் குருபகவானின் ஆசிர்வாதத்தால் இனி குழந்தை பாக்யம் கிடைக்கும். வாகன உற்பத்த இனி அதிகரிக்கும். மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகள் இனி இயங்கும். மழை அதிகமாகும். விவசாயத்தை கெடுக்காமல் விவசாயிகளை வாழவைக்கும்படி மழைப் பொழிவு இருக்கும். மகசூல் பெருகும். வங்கிகளில் புது சட்ட திட்டம் வரும்.

கடல் வளம் பாதுகாக்கப்படும். கடல்வாழ் உயிரினங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மீன் மற்றும் பவளப் பாறைகள் அதிகமாகும். இந்திய ராணுவத்தில் கப்பற்படை மேலும் வலுப்படுத்தப்படும். நாடெங்கும் நதிகள் இணைக்கப்பட்டு நீர்வளம், நிலவளம் பெருகும். ஆசிரியர்கள், வேத வல்லுநர்கள் பெரிய பதவியில் அமர்வர், உயரிய விருதுகளும் பெறுவர். தங்கம் விலை உயரும். காலப்புருஷத் தத்துவப்படி குரு மீனத்தில் அமர்வதால் நவீன மருத்துவமனைகள் உருவாகும். சிறைகளில் உள்ள கைதிகளின் திறமைகளைக் கண்டறிவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் சட்டம் வரும். சகல வசதி கொண்ட சிறைச்சாலைகள் உருவாக்கப்படும். குருபகவான் கடக ராசியைப் பார்ப்பதால் சினிமா, கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவர்.

கன்னி ராசியைப் பார்ப்பதால் புதுப்பாடத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும். உடற் கல்வி, நீதிபோதனைகள் கல்வி மீண்டும் பயிற்று விக்கப்படும். விளையாட்டுத் துறையில் குறிப்பாக துப்பாக்கி சுடும் போட்டி, கிரிக்கெட்டில் இந்தியா சாதிக்கும். விருச்சிக ராசியைப் பார்ப்பதால் ராணுவ மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்கப்படும். நம் நாட்டிலேயே அனைத்தும் தயாராகும். உள்நாட்டு உற்பத்தி பெருகும். உணவு மற்றும் ஆயுத ஏற்றுமதி அதிகரிக்கும். காடு மற்றும் வனவாழ் உயிரினங்களைப் பாதுகாக்க புது சட்டங்கள் வரும். வருமானவரி கட்டுவோர் சதவீதம் பெருகும். மொத்தத்தில் இந்த மீன குரு மகிழ்ச்சி, வருமானம், பக்தி, நிம்மதி, தூக்கம் என அனைத்தையும் தரும் விதமாக இருக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல
SCROLL FOR NEXT