- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
விருச்சிக ராசி வாசகர்களுக்கு வணக்கம்.
இந்த குருப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறது என்பதைப் பார்ப்போம்.
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்த குருபகவான் இப்போது 4-ஆம் இடத்திற்கு சென்று அர்த்தாஷ்டம குருவாக செயல்படப் போகிறார் என்றதும் ஒருவித பதட்டம் ஏற்படுவது இயல்புதான். அதேசமயம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான தன ஸ்தானத்திற்கும் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதி ஆவார்கள். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாக வரக்கூடிய எந்த கிரகமாக இருந்தாலும், அவர்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும் கெடு பலனை தரக் கூடாது, நற்பலன்களை மட்டுமே தர வேண்டும் என்பது ஜோதிட விதி. எனவே குரு பகவான் அர்த்தாஷ்டம குருவாக இருந்தாலும் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது என்பதை உறுதியாக நம்பலாம். அதேசமயம் அலட்சியமாகவும் இருக்கவேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். வெளியிடங்களில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்.
கரோனா காலம் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சிறிய அளவிலான உடல் நல பாதிப்புக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. பண விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருங்கள். குடும்பத்தாருடன் எந்தவிதமான சச்சரவுகளும் செய்யாமல் இருக்கவேண்டும். இதுபோன்ற எச்சரிக்கையுடன் கூடிய வழிமுறைகள் உங்களுக்கு நன்மை பயக்கும். அதேபோல வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகம் ஆனாலும் கவலைப்பட வேண்டாம், இதனால் வேறு சில பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும், அதே போல வீடு கட்டுதல், சுபச்செலவுகள் செய்தல், குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துதல், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளுதல், அல்லது குடும்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் செய்து வைத்தல், இது போன்ற சுப செலவுகளை செய்து கொள்வது நல்லது.
மேலும் உங்கள் ராசியில் கேது பகவான் இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். எனவே அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் மூன்றாம் இடத்தில் இருக்கக் கூடிய சனி பகவான் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு உதவிகள் செய்து வருவார். உங்களுடைய செலவுக்கேற்ற வருமானத்தையும் தருவார். எனவே இந்த குருப்பெயர்ச்சி காலம் சோதனைகளையும் தரும், அதே சமயம் அந்த சோதனைகளை மீறி பல சாதனைகளையும் செய்ய வைக்கும் என்பதை மறக்கவேண்டாம். குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்து வாருங்கள். குலதெய்வம் உங்களுக்கு பக்கத் துணையாக இருக்கும்.
அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதன் மூலம் சற்று அழுத்தம் அதிகரிக்கும். ஆனாலும் கவலைப்பட வேண்டியதில்லை. சக ஊழியர்களின் உதவியோடு பலவித வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது வேறு நிறுவனங்களுக்கு மாறிக் கொள்வது நல்லது. இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் இப்போது சிறப்பாக இருக்கிறது. எனவே வெளிநாடுகளில் பணியாற்ற விரும்புபவர்கள் இப்போது அதற்கு முயற்சி செய்யலாம்.
சுயதொழில் செய்து கொண்டு வருபவர்களுக்கு இப்போது தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஆனாலும் அவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்கள் கையெழுத்து இடும்போது முழுமையாக படித்துப் பார்த்த பின்பு கையெழுத்து போட வேண்டும். தொழில் தொடர்பான இயந்திரங்களை சரிவர பராமரிக்க வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்க வேண்டியது வரலாம். தொழிலாளர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுங்கள். தொழில் தொடங்க வங்கிக் கடன் அல்லது தனியார் கடன் பெறும் பொழுது முழுமையாக படித்துப் பார்த்து பிறகு கடன் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். எந்தவிதமான மன மாச்சரியங்கள் வந்தாலும் அதை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. ஒரு விதத்தில் தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதேசமயம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஒரு முறைக்கு பலமுறை அலைச்சலை சந்திக்க வேண்டியது வரும். ஆனாலும் முழுமனதோடு இயங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். சக வியாபாரிகளோடு இணைந்து செயலாற்றுங்கள். வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுங்கள். கடன் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். வியாபார இடங்களையும் கணக்கு வழக்குகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வியாபாரத்தை செய்ய வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கலாம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டால் வியாபாரத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் கடந்து செல்ல முடியும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். ஒவ்வொரு செய்திகளையும் ஓடிஓடி சேகரிக்க வேண்டியது வரும். உணவு உண்பது முதல் தூக்கம் வரை சரிவர இருக்காது, எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள், சரியான நேரத்திற்குச் சாப்பிடுங்கள், நல்ல தூக்கத்திற்கு வழி வகுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சிக்கலான விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல் மற்றும் அரசியல்வாதிகளுடைய நெருக்கம் குறைத்துக் கொள்வது நல்லது. எச்சரிக்கை உணர்வோடு பணியாற்றினால் இந்த குருப் பெயர்ச்சி பல வகையிலும் உங்களுக்கு நன்மை தரும்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த பலன்கள் நடைபெறும். அதேசமயம் கலைத் துறை தொடர்பான ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஒப்பந்தம் போட வேண்டாம். பணப் பிரச்சினைகளை கறாராக இருப்பது நல்லது. கடன் கொடுப்பதும் வேண்டாம். கடன் வாங்குவதும் வேண்டாம். உங்கள் கலைத்துறை சார்ந்த வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிரபலமாக இருப்பதாலேயே பொது விஷயங்களில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது. அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்தால் இந்த குருப்பெயர்ச்சிக் காலம் நன்மை தருவதாக இருக்கும் என்பதை உணருங்கள்.
பெண்களுக்கு நற்பலன்கள் நடக்கும் குரு பெயர்ச்சி ஆக இருக்கும்.சொத்து சேர்க்கை முதல் ஆடை ஆபரணச் சேர்க்கை வரை அனைத்தும் எளிதாக கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் நடக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுய தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு இது மிகச் சரியான காலகட்டமாகும். அர்த்தாஷ்டம குரு என பயந்து ஒதுங்க வேண்டாம். நிச்சயமாக சுயதொழில் தொடங்க முடியும். அதில் வெற்றியும் காணமுடியும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்தால் இப்போது கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வணங்குங்கள். நன்மைகள் அதிகம் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் மிகச் சிறப்பான ஆண்டாக இருக்கப்போகிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்குமே மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறமுடியும். படித்த படிப்புக்கேற்ற வேலை இப்போது கிடைக்கும். உயர்கல்வி கற்பதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாடுகளுக்கு சென்று படிக்கும் வாய்ப்பும் பலருக்கும் உண்டு. கல்வி தொடர்பாக தேவையான உதவிகளை செய்து தரக்கூடிய ஆசிரியர்களின் நட்பு கிடைக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி அதிக நன்மைகளை தரக் கூடியதாக இருக்கிறது.
விருச்சிக ராசி வாசகர்களுக்கு எப்போதும் பக்கபலமாக துணையாக இருப்பது ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு தான். எனவே பட்டீஸ்வரம் துர்கை அம்மன், கதிராமங்கலம் வனதுர்கை போன்ற துர்கை ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் நன்மைகள் அதிகமாகப் பெற முடியும். பிரச்சினைகள் எது வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியும். வாழ்க வளமுடன்.
***************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |