சிறப்பு பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி ; மகர ராசி அன்பர்களே! வீடு வாங்குவீர்கள்; கடன் அடைப்பீர்கள்; வியாபார விருத்தி; தொழிலில் மேன்மை; சேமிப்பீர்கள்! 

செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் மகர ராசி வாசகர்களே.
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்ன பலன்களையெல்லாம் வாரி வழங்கும் என்பதைப் பார்ப்போமா?


இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் ராகுவும், 12ம் இடத்தில் கேதுவும் இருந்து நற்பலன்களை தந்துகொண்டிருந்தார்கள். குறிப்பாக நெருக்கடியான பிரச்சினைகளில் இருந்து விடுதலை அடைந்தீர்கள். ஆரோக்கிய நன்மை, எதிர்ப்பு காட்டியவர்களை அடக்கி ஒடுக்கி வைத்தது, கடன்களில் பெரும்பங்கை தீர்த்த என்று பல நன்மைகளை இதுவரை தந்தார்கள்.

இப்போது உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு ராகுவும், 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு கேதுவும் வருகிறார்கள்.

இந்த 5ம் இட ராகு நற்பலன்களையே தருவார் என நம்பலாம். பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு எந்த கிரகம் வந்தாலும் நன்மையை மட்டுமே செய்வார், செய்யவேண்டும் என்பது ஜோதிட விதி. அந்த வகையில் ராகுவும் நற்பலன்கள் மட்டுமே உங்களுக்குத் தரப் போகிறார்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். விரும்பிய மண வாழ்க்கை அமையும். திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் தாமதமாகிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது நிச்சயமாக புத்திர பாக்கியம் உண்டாகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என இப்போதே யோசித்து வையுங்கள்.

சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும். அதற்கான வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள், எந்த சங்கடமும் இல்லாமல் உங்களுக்குக் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குலதெய்வ வழிபாடு நடக்கும். குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்துதல், காதணி விழா நடத்துதல் என சுப விசேஷங்கள் நடந்தேறும்.

உத்தியோகத்தில் மேன்மை பெறுவீர்கள். உங்கள் கருத்துக்கு மரியாதை கிடைக்கும். அலுவலகமே உங்கள் ஆலோசனையை எதிர்பார்ப்பது போன்றவையெல்லாம் நடக்கும். மதிப்பு உயரும். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாதவர்களுக்கும், இப்போது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். அரசுப் பணி கிடைக்கும் வாய்ப்பு பலமாக இருக்கிறது.

தொழிலில் இனி நல்ல வளர்ச்சியைக் காணலாம். அதிக உழைப்பில்லாத தொழில் செய்பவர்கள், அதாவது தரகு, கமிஷன் போன்ற தொழில் செய்பவர்கள், வட்டித்தொழில், அடகுக்கடை, ஆடம்பரப் பொருள் விற்பனை, தங்கும் விடுதி, உணவகம், மனமகிழ் மன்றம் போன்ற தொழில் செய்பவர்கள் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள்.
உற்பத்தி சார்ந்த தொழில் செய்பவர்கள், ஆயத்த ஆடை தயாரிப்பவர்கள், ஏற்றுமதிதொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் ஏற்றம் தரும் மாற்றங்கள் நிகழும் காலம் இது. தொழிலை விரிவுபடுத்தத் தேவையான முதலீடுகள் வங்கிக் கடன் போன்றவை கிடைக்கும்.

வியாபாரிகள் சிறிய முதலீட்டீலேயே நிறைய லாபம் பார்ப்பார்கள். நூதனப் பொருட்கள் விற்பனை சிறப்பான லாபம் தருவதாக இருக்கும். வித்தியாசமான விளம்பரங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், சலுகைகள் என அறிவித்து வியாபார வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள். இதுவரை வியாபார ஆர்வம் இல்லாதவர்கள் கூட இப்போது வியாபாரம் செய்யத் தொடங்குவார்கள்.

மனை விற்பனை, கட்டுமானத் தொழில், கட்டுமானப் பொருள் விற்பனை, பயணங்கள் தொடர்பான டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் தொழில் முதலானவற்றில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். ஏற்படும். ரசாயன தொழில், பட்டாசு தொழில், மருந்துக்கடை, மூலிகை வைத்திய மருந்து விற்பனை போன்ற தொழில் வியாபாரங்களும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விவசாய மக்களுக்கு பெரும் நன்மைகள் நடக்கும். வறண்ட பூமியையும் செழிப்பாக மாற்றுவீர்கள். மலர் விளைச்சல், மஞ்சள், கரும்பு விவசாயம், விவசாய இயந்திரங்கள் வாடகைக்கு விடுதல் போன்றவை நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும். மழை பொழிவு சிறப்பாக இருப்பதால் நம்பி பயிர் செய்து லாபம் பார்ப்பீர்கள். உரமில்லாத இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்படும். செயலில் இறங்குவீர்கள்.

பெண்களுக்கு இயல்பான சொத்து சேர்க்கை, சொந்த வீடு, ஆபரணச் சேர்க்கை, சுப விசேஷங்களில் கலந்து கொள்வது என மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திருமணம் உறுதியாகும். விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு போட்டியே இல்லாமல் பதவிகள் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்புகளே இல்லாத நிலை ஏற்படும். தர்ம காரிய பணிகளில் நற்பெயர் கிடைக்கும். மேலிடம், உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும்.

மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். விரும்பிய கல்வி கிடைக்கும். புதிய கல்விகளை கற்கும் ஆர்வம் ஏற்படும். ஆசிரியர்கள், நண்பர்கள் என பலரும் உங்கள் கல்விக்கு உதவி செய்வார்கள்.

கலைஞர்களுக்கு, இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலம் வந்துவிட்டது. அதிக முயற்சி இல்லாமலேயே வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் மேம்படும். சொத்து சேர்க்கை ஏற்படும். நண்பர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி செய்து கொள்வீர்கள். எதிர்பாலின நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும் ஒப்பந்தம் ஏற்படும்.


கேது பகவானால் கிடைக்கும் பலன்கள் -

இதுவரை 12ம் இடத்தில் இருந்த கேது பகவான், இப்போது லாப ஸ்தானத்துக்கு வருகிறார். 12ல் இருந்த வரை சுப செலவுகள் தந்திருப்பார். ஆன்மிகப் பயணங்களையும், ஒருசில மருத்துவச் செலவுகளையும் தந்திருப்பார்.

இப்போது லாப ஸ்தானம் செல்லும் கேது பகவான், மேலும் பல நன்மைகளையும், யோகங்களையும் தரப்போகிறார். உபஜெயஸ்தானத்தில் ஒன்றான 11ம் இடத்திற்கு பாவ கிரகங்கள் வரும்போது நன்மைகளை பலமடங்காகத் தருவார்கள் என்பது அடிப்படை விதி. அந்த வகையில் கேது பகவான் தொழிலில் லாபம், வியாபாரத்தில் லாபம், பயணங்களால் லாபம் என எதிலும் லாபத்தையே தருவார். புதிய முயற்சிகளில் ஈடுபட வைப்பார்.

தொழிலில் முதலீடுகளை அதிகப்படுத்துவார், கூட்டுத்தொழில் செய்ய வைப்பார். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்தி தருவார். விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் நடத்தித் தருவார். ரகசியமான முறையில் புதிர் போல் வாழ்க்கை மேற்கொள்பவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்து நல்வழிபடுத்துவார். மூத்த சகோதரர்களை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவார். அவரின் பிரச்சினைகளைக் களைவதற்கு, உங்களைத் தூண்டி விடுவார்.

ஆரோக்கிய பாதிப்பை சரிசெய்து தருவார். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளை அதிகப்படுத்திக் கொடுப்பார். அயல்நாடுகளுக்கு சென்றுவர உதவிகள் செய்வார், அப்படியான தொலைதூரப் பயணத்தின் மூலமாக ஆதாயத்தை வாரி வழங்குவார்.

வாழ்க்கைத்துணை வழியிலான குடும்பப் பிரச்சினைகளையும் சரிசெய்வார். மனைவியின் தங்கைக்கு திருமணம் நடத்தித் தருவார். எல்லாவற்றையும் விட சேமிப்பை பன்மடங்காக பலப்படுத்துவார். அதுவும் யாருக்கும் தெரியாமல் சேமிப்பைச் செய்யவைப்பார்.

வயோதிகர்களுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான உதவிகள் செய்து தருவதும், ஆதரவற்று இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு உதவுவதும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் - திருவக்கரை வக்ரகாளி, திண்டிவனம்.
********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT