- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
கன்னி ராசி அன்பர்களே, வணக்கம்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் உங்களின் கன்னி ராசிக்கு, உங்களுக்கு எப்படி இருக்கும், என்னவெல்லாம் பலன்களைத் தரப்போகிறது என்று பார்ப்போம்.
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் ராகுவும், நான்காம் இடத்தில் கேதுவும் இருந்து நன்மைகளையும் பாதிப்புகளையும் மாறிமாறித் தந்தார்கள். இந்தப் பெயர்ச்சிக்குப் பிறகு எப்படியெல்லாம் பலன் தரப்போகிறார்கள்?
இதுவரை பத்தாமிடத்தில் இருந்த ராகு பகவான் வருமான வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, புதிய தொழில் துவங்குவது, பிரிந்த சொந்தங்களை ஒன்று சேர்ப்பது என பல நன்மைகளைத் தந்தார். இப்போது ராகு 9ம் இடம் சென்றாலும் உங்களுக்கு நன்மைகளைச் செய்யத் தவறமாட்டார்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள், சொந்த வீடு, அசையா சொத்துகள் சேர்ப்பது போன்ற நன்மைகளைச் செய்து தந்தாலும், பூர்வீகச் சொத்து விஷயத்தில் கறாராக நடந்து உறவினர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். சகோதர ஒற்றுமை வெளிநபர்களால் கெட்டுப்போகும்.
எனவே கேட்பார் பேச்சைக் கேட்காமல் சுய புத்தியுடன் செயல்பட்டு விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தந்தையாரை மிக மிகக் கவனத்துடன் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.
கடன் வாங்கி சொத்து சேர்ப்பதும், ஆடம்பரச் செலவுகளும் செய்ய மனதில் எண்ணங்கள் தோன்றும். கடன் வாங்காமல் இருப்பது நல்லது. அப்படி ஒருவேளை, கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தனிநபரிடம் கடன் வாங்காமல், வங்கியில் கடன் பெறுவது நல்லது.
தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேலும் முதலீடுகள் செய்யும் திட்டம் ஏற்படும். ஆனால் அளவான முதலீடுகளை மட்டும் செய்யுங்கள். அகலக்கால் வைக்க வேண்டாம். பயணம் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு ஓய்வில்லாத உழைப்பு ஏற்படும். வருமானம் பெருகும்.
விற்பனைப் பிரதிநிதிகள் மாதத்துக்கான இலக்கை எளிதாக எட்டுவார்கள். உபரி வருமானம் அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கட்டுமானத் தொழில் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் சீரான வளர்ச்சியைக் காண்பார்கள். தங்க நகை தொழில் செய்பவர்கள், கவரிங் நகை தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார நண்பர்கள் அறிமுகவார்கள். அவர்களிடம் சற்று விலகியே இருக்க வேண்டும். பெரிய ஆசைகளைக் காட்டி ஏமாற்ற முனைவார்கள். எனவே கவனமாக இருங்கள். உணவகம் தொடர்பான தொழில் வளர்ச்சி அடையும். கிளைகள் துவங்க இது ஏற்ற காலம்.
வழக்கறிஞர், மருத்துவர், கணக்காளர், ஆசிரியப் பணியில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் காலகட்டம். சரியாக செயல்பட்டால் வளர்ச்சியை அடைய முடியும்.
விவசாயத்தில் புதிய புரட்சியை விவசாயிகள் ஏற்படுத்துவார்கள். குறுகிய காலப் பயிர்கள் மூலம் நிறைந்த வருவாய் கிடைக்கப்பெறுவார்கள். சோதனை முயற்சியாக செயல்படுத்தி வெற்றிகளைக் காண்பார்கள். விவசாய இயந்திரங்கள் வாங்குவதற்கு இது ஏற்ற நேரமாகும்.
அரசியல் செய்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. அவசர முடிவுகள் சங்கடத்தை ஏற்படுத்தும். பதவியை தேடிப்போகாமல் பதவி தேடி வரும்படி உங்கள் செயல்பாடு இருந்தால் நிச்சயமாக பதவி கிடைக்கும். ஆத்மார்த்தமாக சேவை செய்தால் மக்களிடம் நற்பெயர் கிடைக்கும்.
பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணம் நடந்தேறும். மிக முக்கியமாக தாமதப்பட்ட புத்திர பாக்கியம் இப்போது உறுதியாகக் கிடைக்கும் என்பதை முழுமையாக நம்பலாம்.
மாணவர்கள் கல்வி சிறக்கும். உயர்கல்வி மாணவர்கள் எளிதாக தங்கள் கல்வியை முடிப்பார்கள். தோல்வியுற்ற பாடங்களில் இப்போது எளிதான தேர்ச்சி அடைவார்கள்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக அதிலும் பெண் தோழர்கள் மூலமாகக் கிடைக்கும். இப்போது கிடைக்கும் வாய்ப்பு உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை வாய்ப்பு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
கேது பகவான் தரும் பலன்கள் -
இதுவரை நான்காம் இடத்தில் இருந்து ஆரோக்கிய பாதிப்புகளைத் தந்தார். தாயாரின் உடல்நலத்தை பாதித்து வந்தார். சொத்துகளில் வில்லங்கத்தையும், பயணங்களில் இடைஞ்சல்களையும், பராமரிப்புச் செலவுகளையும் தந்து வந்தார். இனி நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
ஆமாம்... இப்போது கேது 3ம் இடம் வந்து நன்மைகளை அள்ளித்தரப்போகிறார். ஆரோக்கியத்தில் முன்னேற்றம், தாயாரின் உடல்நலம் சீராகுதல், புதிய முயற்சிகளில் ஈடுபடுதல், ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பது என கேது பகவான் பல நன்மைகளைத் தரக் காத்திருக்கிறார்.
அதேசமயம் சகோதரர்களிடம் மன வருத்தத்தையும், பிரிவையும் ஏற்படுத்துவார். நீண்டநாளாக சந்திக்க நினைத்த மனிதர்களைச் சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அச்சம் தந்த விஷயங்களில் இனி துணிச்சலாக இறங்கி வெற்றி காண்பீர்கள்.
பொதுவாக நன்மைகள் அதிகம் இருந்தாலும், சபலத்திற்கு ஆளாகாமல் இருப்பது மிக மிக நல்லது. புதிய மனிதர்களை நம்பி பெரிய விஷயங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிக லாபம் கிடைக்கிறது என்பதற்காக சட்ட விரோத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதும் நல்லது. இல்லையெனில் மாட்டிக்கொள்வீர்கள்.
ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடுவதும், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு இயன்ற கைங்கரியங்கள் செய்வதும் நன்மைகளைத் தரும்.
வணங்க வேண்டிய தெய்வம் - திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள்.
*****************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |