சிறப்பு பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி; ரிஷப ராசி அன்பர்களே!  கடனே இல்லாத வாழ்க்கை; தொழிலில் வளர்ச்சி; உண்மையான நட்பை கண்டறிவீர்கள்! 

செய்திப்பிரிவு

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரிஷப ராசி அன்பர்களே வணக்கம்.

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தர இருக்கிறது என்று பார்ப்போமா?

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்த ராகு, இப்போது உங்கள் ராசிக்கே வருகிறார். இதுவரை எட்டாமிடத்தில் இருந்த கேது பகவான் இப்போது ஏழாம் இடத்திற்கு வருகிறார்.

இந்த ராகு - கேது பெயர்ச்சியில் ராகு பகவான் தர இருக்கும் பலன்களை முதலில் பார்ப்போம்.

இதுவரை இரண்டில் இருந்த ராகு பகவான், தாராள பணவரவையும், சிரமமில்லாத வாழ்க்கையையும் தந்திருப்பார். குடும்பத்திலும், உறவுகளிடமும் வீண் விவாதங்களையும் மன வருத்தங்களையும் தந்திருப்பார். ஒருசிலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் என தந்திருந்தாலும், தேவையற்ற சிக்கல்களிலும், வாக்கு தவறுதல் முதலான விஷயங்களையும் வீண் அலைச்சல்களையும் தந்திருப்பார்.

இப்போது உங்களின் ஜென்ம ராசிக்கே வருகிறார் ராகு பகவான். இதனால் உண்டாகும் பலன் எப்படி இருக்கும்?

ஜென்ம ராசிக்குள் ராகு பகவான் வரும்போது, இடமாற்றம் முதல் தேவையற்ற பிரச்சினைகளில் சிக்க வைப்பது வரை கடுமையான மன உளைச்சலைத் தருவார் என்பது பொது விதி!

என்ன... லேசாக பதறுகிறீர்களா? கவலையே வேண்டாம். ராகு பகவான் ரிஷபத்தில் நீசம் அடைவதாலும், ரிஷப ராசி அதிபதியான சுக்கிரனுக்கு நெருங்கிய நட்பு என்பதாலும், இந்த ராகுப் பெயர்ச்சியால், கடுகளவு பிரச்சினையும் ஏற்படாது என்பது உறுதி. இன்னும் சொல்லப்போனால் ரிஷப ராசி அன்பர்களை “உயரத்தில் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பாரே” தவிர துளி கூட அழ வைத்து வேடிக்கை பார்க்க மாட்டார் என்பதை உறுதியாக நம்புங்கள். .

இந்தப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் ஏற்படுமா?

ஆமாம்... நிச்சயம் ஏற்படும். இப்போது இருக்கும் இடத்தைவிட சிறந்த இடமாற்றமாக அது இருக்கும். அது வேலை தொடர்பாகவும் இருக்கும். வீடு மாற்றமாகவும் இருக்கும். பெரிய அளவிலான பணவரவுகளை உண்டாக்கும்.

இதுவரை முயற்சிக்காத விஷயத்தை முயற்சி செய்ய வைக்கும். அதில் வெற்றியையே காண்பீர்கள். இதன் மூலமாக நயாபைசா கூட கடன் இல்லாத மனிதனாக நீங்கள் ஆகப்போகிறீர்கள். அதாவது, கடன் தொல்லையில் இருந்து முற்றிலுமாக விடுபடுவீர்கள்.

குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். இந்த ராகு - கேது பெயர்ச்சி, நாடுவிட்டு நாடு செல்ல வைக்கும். எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமோ அப்படியெல்லாம் சம்பாதிக்க வைக்கும். வெறித்தனமாக சம்பாதிப்பீர்கள். பட்ட துயரமெல்லாம் துடைத்தெறியும் வகையில், யாரிடமெல்லாம் அவமானங்களை சந்தித்தீர்களோ அவர்களையெல்லாம் வாய் பிளக்க வைக்கும்படியாக வாழ வைக்கப் போகிறார் ராகு பகவான்.

திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு வாசல், வாகனம் என செழிப்பான வாழ்வை அமைத்துத் தரும். இதுவரை தொழில் செய்யாதவர்கள் கூட சுயதொழில் தொடங்குவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு மிகச் சிறப்பான வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு சாதிக்க வைக்கும். வறண்ட பூமியையும் வளமாக மாற்ற வைக்கும். விவசாயத் தண்ணீர் பிரச்சினை ஆழ்குழாய் மூலம் தீரப்போகிறது.

ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இதுவரை இருந்த இடர்பாடுகள் நீங்கி தொழில் ஏற்றம் பெறும். அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படும். உணவகம் தொடர்பான தொழில், அசைவ உணவு தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள், வியாபார இடத்தை விரிவுபடுத்துதல் போன்றவை நடக்கும். வியாபாரத்திற்கு ஆட்களை சேர்த்தல் போன்றவையும் நடக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பாராத பதவிகள் கிடைக்கப்பெறுவார்கள். அதிகாரத்தை அளவோடு பயன்படுத்தினால் இன்னும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். தேர்தல் வெற்றி எளிதானதாக இருக்கும்.

பெண்களின் சம்பாத்தியத் திறமை வெளிப்படும். திருமண முயற்சிகள் சாதகமாகும். திருமண விஷயத்தில் பெற்றோர் சம்மதமும் முழு ஆசியும் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வேறு நிறுவனம் மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். பிரிந்த தம்பதி மீண்டும் சேர்ந்து வாழ வழி உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். எந்தக் கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்திற்கு தக்க ஆலோசனைகள் கிடைக்கும். மருத்துவக் கல்வி பயிலும் ஆர்வம் நிறைவேறும்.

கலைஞர்கள் நீங்கள் நினைத்தே பார்த்திடாத நிறுவனத்தில் இருந்தும் நீங்கள் தூர நின்று ரசித்த நபரிடமிருந்தும் அழைப்பு வரும். நல்ல ஒப்பந்தம் ஏற்படும். மிகப்பெரிய சாதனையைச் செய்வீர்கள். அரியதொரு படைப்பை உண்டாக்கப் போகிறீர்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

எதிர்பாலினத்தவரிடம் கவனமாகப் பழக வேண்டும். மாற்று மொழியினர், அயல் தேசத்தினரிடம் கவனமாக இருங்கள். அதிகப்படியான வருமானத்தால் தலைக்கனம் கூடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினர்களை அலட்சியப்படுத்தாதீர்கள்.

கேதுவின் இடப்பெயர்ச்சி பலன்கள் -

இதுவரை எட்டாமிடத்தில் அமர்ந்து ஆரோக்கிய அச்சுறுத்தலையும், மனம் நோகும்படியான சம்பவங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி ஆரோக்கியத் தொல்லை அறவே இல்லாமல் போகும். மனம் வெதும்பிய சம்பவங்கள் இனி நடக்கவே நடக்காது. உண்மையான நட்பு யார் என்று அடையாளம் காண்பீர்கள்.

கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் மேல் சந்தேகம் ஏற்படும். எதுவாயினும் மனம் விட்டு பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். முற்றவிட்டால் கூட்டுத்தொழில் பிரிந்து போக வாய்ப்பு உள்ளது.

வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமை வெளி நபர்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது, வேற்று நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிறிய கருத்து வேறுபாடு பிரிவு வரைக்கும் செல்லும் நிலை ஏற்படும். விட்டுக்கொடுத்துச் சென்றால் நிம்மதி உண்டாகும்.

ஶ்ரீகாளஹஸ்தி ஆலயத்திற்கு சென்று வாருங்கள். ராகு கேதுவுக்கு புளியோதரை சாதம் நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் - தில்லைக்காளி

******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT