சிறப்பு பலன்கள்

பூச நட்சத்திரக்காரர்கள் ஏமாளிகளா? ;  27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 22 -  ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

செய்திப்பிரிவு

பூச நட்சத்திரக்காரர்கள் ஏமாளிகளா? ;
27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 22 -
‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.
இப்போது நாம் பார்க்க இருப்பது பூசம் நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் எட்டாவது நட்சத்திரம் இது. கடகம் என்னும் பாற்கடல் ராசியில் இருக்கும் நட்சத்திரம் என்பது பூச நட்சத்திரத்தின் சிறப்பு. . இந்த நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு அம்பறாத்துணி என்னும் அம்புகள் வைக்கும் கூடு போல் இருக்கும். குடுவை போலவும் குடம் போன்றும் இருக்கும்.

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்த அமிர்த கலசம், இந்த கடகம் என்னும் ராசியில் இருக்கும் பூசம் எனும் நட்சத்திரத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல... தேவர்களின் குருவான பிரகஸ்பதியான குரு பகவான் பிறந்த நட்சத்திரம் இந்த பூசம் தான். இவர் மட்டுமல்ல ஶ்ரீராமரின் வனவாசத்தின் போது அயோத்தியை ராமரின் பெயரால் ஆண்ட ராமரின் சகோதரன் பரதன் பிறந்ததும் இந்த பூசம் நட்சத்திரத்தில்தான்.

குரு என்பவர் எப்படிப்பட்டவர்? எதற்கும் விடை தருபவர். பாகுபாடு பார்க்காதவர். எந்த விஷயத்திலும் அவசரப்படாதவர். நிதானமாக கற்றுத் தருபவர். இந்த குணங்களும் அடையாளங்களுமே குரு.

பரதன் நினைத்திருந்தால் அரசாட்சியை தனதாக்கிக்கொண்டிருக்க முடியும். ஆனால் அவன் தன் அண்ணனின் பாதுகையை அரியணையில் வைத்து அண்ணன் ராமனின் பெயரால் ஆட்சி செய்தான். இந்த நேர்மை, பணிவு, அடக்கம், பிறர் பொருள் மேல் ஆசை இல்லாத குணம், தன் வாக்கை காப்பாற்றுதல் இதுவே பூசத்தின் அடையாளங்கள்.

குரு மற்றும் பரதன் இந்த இருவரின் குணாதிசயங்களைக் கொண்டு பூச நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்களை நீங்களே அறிந்து உணர்ந்து கொள்ளலாம்.

ஆமாம்... யாருக்கும் தீங்கிழைக்காதவர்கள் பூச நட்சத்திரக்காரர்கள். அடுத்தவர் பொருள் மீது ஆசை கொள்ளாதவர்கள். தியாகத்தின் மறு உருவமாக இருப்பவர்கள், மறந்தும் கூட தவறு செய்யாதவர்கள்.

இந்த கடக ராசி பூச நட்சத்திரத்தில்தான் குரு பகவான் உச்சம் அடைகிறார். ஆணவம், அகங்காரம், போர்க்குணம் கொண்ட செவ்வாய் பகவான், தன் அனைத்து சக்திகளையும் இந்த பூச நட்சத்திரத்தில்தான் நீசம் என்ற நிலை கொண்டு தன் பலம் அனைத்தையும் இழக்கிறார்.

ஆக, இந்த பூசமானது சண்டை, சச்சரவு, பழிவாங்கும் குணம் போன்ற எந்த கெட்ட குணத்தையும் தன்னகத்தே ஏற்பதில்லை. மாறாக கருணை, அன்பு, இரக்கம், மற்றவர்களுக்கு உதவும் குணம், தானம், தர்மம், தன்னலம் கருதாமை, பிறர் தன்னை ஏமாற்றினாலும் அதற்காக வருந்தாத குணம், தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வது போன்ற உன்னதமான நற்குணங்கள் நிறைந்த நட்சத்திரம்... பூசம்!

ஆனால் இந்த உலகம் இவர்களை பிழைக்கத்தெரியாதவர்கள் என ஏளனம் செய்யும். ஆனால் எதையும் பொருட்படுத்தமாட்டார்கள் இந்த நட்சத்திரக்காரர்கள். .
எளிதில் ஏமாறும் குணத்துக்குச் சொந்தக்காரர்கள். யார் எது சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவார்கள். இதனாலேயே நிறைய இழப்புகளையும் சந்திப்பவர்கள், பூச நட்சத்திரக்காரர்கள்.

தானம், தர்மம் என்பவராக இருப்பார்கள் என்கிறீர்கள். ஏமாளிகள் என்கிறீர்கள். நல்ல விஷயங்கள், உயரங்கள் என பூச நட்சத்திரக்காரர்களுக்குக் கிடையவே கிடையாதா? என்று கேட்கலாம்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு என்ன தேவையோ, அது எந்தத் தடையும் தாமதமும் இல்லாமல், அந்த தேவை முழுமையாக கிடைத்துவிடும். இது நூறு சதம் உண்மை!

இவர்கள் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை. எது தேவையோ அது இவர்களைத் தேடி வரும். சொந்த வீடு வேண்டும் என நினைத்தாலே போதும். நல்ல வீடு தானாக அமையும். நல்ல வேலை வேண்டும் என சிந்திக்கும்போதே நல்ல வேலை தேடிவரும். இப்படி எதுவும் இவர்களைத் தேடி வருமே தவிர, எதையும் தேடி அலைய வேண்டி வராது.

இவர்களுக்கு எந்த மாதிரியான வேலை அமையும்?
உண்மையைச் சொன்னால் எந்த வேலையும் இவர்களுக்கு சரியாகப் பொருந்தும். பொருந்தாத வேலையாக இருந்தாலும் அதில் தன்னை சரியாக பொருத்திக்கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலைமை பதவிகளில் தான் இருப்பார்கள்.
குழுவுக்கு தலைமை தாங்குதல், நிர்வாக இயக்குனர், மனிதவள மேம்பாடு பதவி, ஆசிரியர், விரிவுரையாளர், வேத விற்பன்னர்கள், உபதேச தொழில், பிரசங்கம் போன்ற வேலைகளில் இருப்பார்கள். மற்றும் அதிகம் பேர் வெளிநாடுகளில் பணியில் இருப்பார்கள். தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கடல் கடந்து செல்வார்கள். தூதரக பணி, விமானம் மற்றும் கப்பல் தொடர்புடைய பணி, (பைலட் மற்றும் கேப்டன்) கூரியர் சர்வீஸ் போன்ற துறைகளிலும் இருப்பார்கள். பயணங்களில் அலாதி ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தன் வேலை கூட அலைச்சல் மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

தங்கம் தொடர்பான தொழில் (ஆபரணம் அல்ல), நிதி நிறுவனங்கள், கூட்டுறவு, பணம் புழங்கும் இடங்கள் (வங்கி, கிளப், ரேஸ்) கடல்சார் தொழில், ஏற்றுமதி இறக்குமதி, மூலிகை மருத்துவம், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், சுற்றுலா அமைப்பாளர், பயண ஏற்பாட்டாளர், திருமண தகவல் மையம், திருமண மண்டபம், அன்னச் சத்திரம், கல்விக் கூடங்கள், சேவை மையங்கள், டிரெஸ்ட்கள் இது போன்ற தொழில்கள் அமையும்.

உணவு விஷயத்தில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பவர்கள் பூச நட்சத்திரக்காரர்கள். எந்த உணவு தன் உடல்நலத்திற்கு சரியானது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். உடல் நலம் என பார்த்தால் நுரையீரல் தொற்று, மூச்சுக் குழல் பாதிப்பு, சுரப்பிகளில் குறைபாடு, எலும்பு தேய்மானம், பல் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்சினைகள் வரும்.

பொதுவாக இவர்களில் பெரும்பாலோர் வணக்கத்திற்கு உரிய மகான்கள், யோகிகள், சித்தர்கள் என அவர்களை பின் தொடர்பவர்களாக இருப்பார்கள். பூச நட்சத்திரக்காரர்கள், அதீத ஞானம் உடையவர்கள் என்பதால் எதையும் வரும்முன் உணர்வார்கள். தன் எதிர்காலத்தை மிகச்சரியாக திட்டமிட்டு வைத்துக்கொள்வார்கள்.
சரி... பூச நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணையாக வருபவர் எப்படி இருப்பார்? எந்த நட்சத்திரக்காரர்கள், வாழ்க்கைத் துணையாக வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்?
அடுத்த பதிவில் பார்ப்போம்!
- வளரும்

SCROLL FOR NEXT