சிறப்பு பலன்கள்

தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

முனைவர் கே.பி.வித்யாதரன்

தனுசு: விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், யார் தயவிலும் இருக்காமல், சொந்த காலில் நிற்கும் தன்மானச் சிங்கங்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். இதுவரை உங்கள் ராசி நாதனே 6-ம் இடத்தில் மறைந்து இருந்தார். ஆகவே, உங்களுக்கு நீங்களே எதிராக மாறும் அளவுக்குச் சூழல் இருந்தது. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உங்களின் அறிவுரையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தடைபட்டிருந்த சுபகாரியங்கள் இனி நல்லபடியாக நடக்கும்.

பழைய பகையை மனதில் கொள்ளாமல், உறவினர்களுடன் அன்பாகப் பழகவும். பகைக்கு யார் காரணம் என்று ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஏழாம் இடத்தில் குரு வந்து அமர்வதால், உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மனம் திறந்து பேசுவீர்கள். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீரும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: ராசியை குருபகவான் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, புது உற்சாகம் பிறக்கும். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கவுரவப் பதவிகள் தேடிவரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக குளம் வெட்டுவது, கிணறு அமைப்பது என்று பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோயில் குடமுழுக்கு, ஊர் திருவிழா என்று உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள்.

உங்களால் பயன் அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். வீண் பழிகள் விலகும். உங்கள் ராசிக்கு 11-ம் இடமாகிய லாபஸ்தானம் குருவின் பார்வையைப் பெறுவதால் விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணவரவு உண்டாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியும், விரயாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குருபகவான் பயணம் செய்வதால் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. மகளுக்கு திருமணம் கூடி வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பூர்வீகத்தில் சொத்து வாங்குவீர்கள். புது வீடு கட்டுவீர்கள். எல்லாவற்றிலும் வெற்றி உண்டு.
ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குருபகவான் பயணிப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். எல்லா வகையிலும் வெற்றி உண்டு. எதிர்ப்புகள் எல்லாம் விலகும். வழக்குகள் சாதகமாகும்.

உங்களுடைய ராசிநாதனும், சுகாதிபதியுமான குரு பகவான் தன்னுடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் வருமானம் உயரும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வீடு, புது வாகனம் வாங்குவீர்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் செலவு வரும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் பயணங்களின்போது கவனம் தேவை. தாய், மனைவி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தந்தைவழி உறவினர்களால் மனஸ்தாபங்கள் ஏற்படும்.

வியாபாரத்தில் புதுப்பாய்ச்சல் காட்டுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். வருடப் பிற்பகுதியில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் ஓயும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய யுக்திகளைக் கையாண்டு, பழைய வாடிக்கையாளர்களையும் மீண்டும் வரவழைப்பீர்கள். பழைய பங்குதாரர்களின் ஆலோசனைகளையும் கேட்டு நடக்கவும். அதிகமாக மக்கள் கூடும் இடத்துக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். கடையை நவீனப்படுத்துவதால், சிற்சில நன்மைகள் உண்டு.

உத்தியோகத்தில், பணிச்சுமை சற்று குறையும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு, அவருடன் நெருக்கமாவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களைப் பற்றி தலைமை இடத்தில் புகார் கூற வேண்டாம். அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். உங்கள் புராஜெக்ட் தலைவரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். தேவையில்லாமல் அவரை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கலைஞர்களே! நல்லதொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். நடிகர்கள், சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவும். இசைத் துறையைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடலாம். உங்கள் கல்வி நிலையை உயர்த்திக் கொள்வது நல்லது.
இந்த குரு பெயர்ச்சி புது சிந்தனைகளையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமையும்.

பரிகாரம்: ஆலங்குடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவானை வியாழக்கிழமைகளில் சென்று 24 தீபங்கள் ஏற்றி வணங்குங்கள். ஆபத்சகாயேஸ்வரரையும், ஏலவார் குழலி அம்பாளையும் வழிபடவும். துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏதேனும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். தடைகள் உடைபடும்.

SCROLL FOR NEXT