சிறப்பு பலன்கள்

மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

முனைவர் கே.பி.வித்யாதரன்

மிதுனம்: நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்ட நீங்கள் யாருக்கும் தலைவணங்காமல் உண்மையை உரக்கச் சொல்பவர்கள். (திருக்கணிதப்படி) மே 14 முதல், உங்கள் ராசியில் வந்து அமர்ந்து, பலன் தரப்போகிறார் குருபகவான். ஜென்ம குரு என்று பதற்றம் அடைய வேண்டாம். குருபகவானின் பார்வை பலன்கள் ஓரளவுக்கு உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் தீர்வு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள்.

ஜென்ம குரு என்பதால், வீட்டில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்படும். மனதுக்குள் சலிப்பு, சோர்வு, முன்கோபம் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். எதிர்பார்த்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டு. வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் அன்பர்கள் மூலம் சுபச் செய்தி கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் திட்டமிட்டு செயலாற்றினால், வீண் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.

குரு பகவான் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தைப்பேறு வாய்க்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டு. பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு. மகளுக்கு கல்யாணம் கூடிவரும். குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தாமதமான சுபநிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்க்கும் பணம் ஓரளவு வரும். செலவுகளும் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: அலைச்சல் மற்றும் ஆதாயத்துக்குரிய கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் செல்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். அங்கீகாரம் இல்லாத வீடு, மனை மற்றும் வீட்டை வாங்காதீர்கள். மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் செல்வதால் தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வந்து போகும். சேமிப்புகள் கரைகிறதே என்று வருந்துவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்பழி வரும். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இரவு நேரம் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

உங்களின் சப்தம ஜீவனாதிபதியுமான குரு பகவான் அவரது நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 செல்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். புரிதல் இல்லாமல் பிரிதல் வர வாய்ப்பிருக்கிறது. புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல்நிலை பாதிக்கும். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டு. குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தீர்வுக்கு வரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சந்தை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். கெமிக்கல், ஹோட்டல், துணி வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு உண்டு. கணினி துறையினருக்கு கண் பிரச்சினை, தூக்கமின்மை வரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நினைத்ததை முடிப்பீர்கள். கலைஞர்கள் விமர்சனங்களைப் புறந்தள்ளுவது நல்லது.

இந்த குரு பெயர்ச்சி தடைகள் எதுவானாலும் சமாளிக்கும் தைரியத்தை தருவதாக அமையும்.

பரிகாரம்: திருச்சி துவாக்குடி அருகில் திருநெடுங்களத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். எதிலும் நன்மையே கிட்டும்.

SCROLL FOR NEXT