சிம்மம்: எங்கும், எதிலும் புதுமையை விரும்பும் நீங்கள், எல்லாவற்றிலும் வெற்றியே காண்பவர்கள். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் சந்திரன் நிற்கும்போது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் மனதில் உற்சாகம் பொங்கும். புது முடிவுகளை எடுத்து சுற்றியிருப்பவர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் தோற்றப் பொலிவு கூடும். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும்.
மே 14-ம் தேதி முதல் குருபகவான் லாப ஸ்தானத்துக்குள் வருவதால் வராமலிருந்த பணமெல்லாம் இனி தடையின்றி வரும். பொன், பொருள் சேரும். வீட்டுக்குத் தேவையான நவீன எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். விஐபிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் இனி தீர்வுக்கு வரும். தந்தையாரின் உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். என்றாலும் மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.
குடும்பத்தில் உங்களை அலட்சியமாக பார்த்தநிலை மாறும். சந்தோஷம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் இனி உறுதுணையாக இருப்பார்கள். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். மே 18-ம் தேதி நிகழப் போகும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே அமையும். சமயோசித பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி உற்சாகம் பெருகும். புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள்.
அண்டை அயலாருடன் அதிகம் நெருக்கம் காட்ட வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அவ்வப்போது வரும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுக்கப் பாருங்கள். முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும் முன்பு பெட்ரோல் இருக்கிறதா, டயரில் காற்று இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு செல்லுங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லத்தரசிகளுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தினர் அனைவரும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் அவர்களின் கல்யாணத்தைப் பற்றி அவ்வப்போது கவலைப்படுவீர்கள். என்றாலும் நல்லதே நடக்கும். கன்னிப் பெண்களுக்கு கல்லூரி படிப்பில் இருந்து வந்த தடைகள் உடைபடும். பலமுறை எழுதிய தேர்வில் இனி வெற்றி நிச்சயம். விரைவில் திருமணம் முடியும். எதிர்பார்த்தபடியே நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மாணவ-மாணவிகளுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும். பெற்றோர், ஆசிரியர் என அனைவரிடமும் அன்பை பெறுவார்கள். கொஞ்சம் தூக்கத்தை தவிர்த்து படிப்பில் அக்கறைக் காட்டுங்கள்.
வியாபாரிகளுக்கு, போட்டிகள் இருக்கத்தான் செய்யும். பழைய பாக்கிகளை அலைந்து திரிந்துதான் வசூலிக்க நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தை நிலவரத்தை அறிந்து சரக்குகளை கொள்முதல் செய்யுங்கள். இரும்பு, கடல் சார்ந்த உணவு வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் நேரடியாக பேசி விடுவது நல்லது.
உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம் உண்டாகும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததற்கு பலன் கிடைக்கும். இனி எதிர்பார்த்தபடி சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களும் நெருங்கி வந்து பேசுவார்கள். கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். வீண் வதந்திகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு சில சிரமங்களைக் கொடுத்தாலும் பலவிதங்களிலும் முன்னேற்றத்தை தேடித் தருவதாக அமையும்.
பரிகாரம்: வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளை வணங்குங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். வில்வ மரக்கன்று நட்டு பராமரியுங்கள். நினைப்பது நடக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்