கும்பம்: சீர்திருத்தச் சிந்தனையும், தவறுகளை தட்டிக்கேட்கும் தைரியமும் கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களுக்கு உதவும் குணம் கொண்ட வர்கள். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்து நாலாபுறத்திலும் குழப்பங்களையும். தடுமாற்றங்களையும் கொடுத்தார். எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பித்துப்பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.
உங்களின் ராசிநாதனாகிய சனிபகவான் ஆட்சி பெற்று வலுவாக அமர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். உடல்நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகளும், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மகனுக்கு தடைபட்ட கல்யாணம் இனி கைகூடி வரும். மகளை நல்ல கல்லூரியில் சேர்ப்பீர்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் பணிச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தன, லாபாதிபதியான குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை சனிபகவான் செல்வதால் எதிலும் வெற்றி உண்டு. பணம் வரும். விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் வீடு வாங்குவீர்கள். எதிர்ப்புகள் விலகும். கவலை தீரும்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் தாழ்வுமனப்பான்மை விலகும். தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். அழகு கூடும். விஐபிகள் உதவுவார்கள். புதுப் பதவிகள் தேடி வரும். 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் பூர்வ புண்ணிய - அஷ்டமாதிபதியுமான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
இல்லத்தரசிகளே! எப்போதும் அலுத்துக் கொண்ட கணவர் இனி அன்பாகப் பேசுவார். அவரின் வருமானம் உயரும். அலுவலகம் செல்லும் பெண்களே! வேலைச்சுமை குறையும். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! கல்வி, காதல், வேலை என அனைத்திலும் வெற்றி கிட்டும். மாணவ - மாணவிகளே! புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தள்ளிப் போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகஸ்தர்களே, அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். அலுவலகத்தில் வீண் வம்பு தேடி வரும். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். கணினி துறையினருக்கு, வெளிமாநிலம், வெளிநாடுகளில் கான்ட்ராக்ட் முறையில் பணி புரிய வாய்ப்புகள் வரும்.
இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சல், செலவுகளை தந்தாலும், உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.
பரிகாரம்: சென்னை பல்லாவரம் அருகிலுள்ள பொழிச்சலூரில் அருள்பாலிக்கும் வட திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்