மகரம்: குறி விலகாத அம்பை போல் குறிக்கோள் தவறாத நீங்கள், கள்ளம் கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்டவர்கள். உங்களைச் சுற்றி யுள்ளவர்களின் நலனை எப்போதும் விரும்புபவர்கள். இதுவரை பாதச் சனியாக அமர்ந்து உங்களை பல வழிகளிலும் பாடாய்ப்படுத்திய சனி பகவான், இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். கார் இருந்தும் பெட்ரோல் போட காசில்லை என்ற நிலை மாறும், எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள்.
தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள் இனி ஆரோக்கியம் அடைவீர்கள். நடைபயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடவும். ஒருமுறை வெளியூர் சுற்றுலா, ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வாருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும்.
குடும்பத்தில் இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இனி வாரிசு உருவாகும். பெண்ணுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். சொந்த பந்தங்கள் வியக்கும்படி திருமணத்தை முடிப்பீர்கள். இனி எதிலும் கறாராக இருப்பீர்கள். கடனை நினைத்து இனி கவலை வேண்டாம். யாரோ செய்த தவறுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை மாறும். விஐபி அந்தஸ்து பெறுவீர்கள். உறவினர்களும் தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். பிள்ளைகளின் சாதனையால் பெருமை அடைவீர்கள். அவர்களிடம் இருக்கும் தனித்திறனைக் கண்டறிவீர்கள். அவர்கள் புதிய வண்டி கேட்டாலும் வாங்கிக் கொடுங்கள். எதிலும் கவனம் தேவை என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கவும். சொத்து விஷயத்தில் யார் தவறு செய்திருந்தாலும், பெரிதுபடுத்த வேண்டாம். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும். பிள்ளைகளுக்கும் உறவினர்களை அறிமுகப்படுத்தி வைக்கவும். இக்கால குழந்தைகளுக்கு உறவினர் யார் என்றே தெரிவதில்லை. நெடுநாள் கனவான வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். பாதியிலேயே நின்று போன கட்டிடப் பணியை இனி தொடங்குவீர்கள். எதிர்பார்த்தபடி பண உதவியும் கிடைக்கும். விரலுக்கு தகுந்த வீக்கம் என்பதை மனதில் கொள்ளவும். பெரிய அளவில் எதையும் தொடங்கிவிட்டு பிறகு பின் வாங்கும் நிலை வராமல் பார்த்துக் கொள்ளவும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணத்துக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் உங்களிடம் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். விட்டுப் பிடியுங்கள். அவ்வப்போது அவர்களிடம் குடும்ப சூழ்நிலையை எடுத்துச் சொல்லுங்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களை கவனமாக கையாளுங்கள். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்வதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வீடு கட்டும் வேலையை தொடங்குவீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் எதிலும் வெற்றி உண்டு. திடீர் பணவரவு, செல்வாக்கு அதிகரிக்கும். தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெறுவீர்கள். நோய் விலகும். முதல் மரியாதை கிடைக்கும். 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் சஷ்டம - பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரமான சனிபகவான் ரேவதியில் செல்வதால் ஒரு பக்கம் செலவுகளும், மறுபக்கம் பணவரவும் அதிகரிக்கும். நட்பு வட்டம் மாறும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். வழக்கு வெற்றியில் முடியும். தங்க நகைகள் வாங்குவீர்கள்.
இல்லத்தரசிகளே! உடல் ஆரோக்கியம் மேம்படும். சமையலறை சாதனங்களை புதுப்பிப்பீர்கள். கணவரின் வியாபாரத்தை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் திறமையை குறைவாக எடை போட்டவர்கள் வியக்கும்படி சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! கூடிய விரைவில் கெட்டி மேளச் சத்தம் கேட்கும். மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் உண்டாகும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிப்பீர்கள்.
வியாபாரிகளே, கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றிவிட்டு, அனுபவம் மிகுந்த புதுவேலையாட்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளை சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க கெடுபிடிகள் குறையும்.
உத்தியோகஸ்தர்களே, உங்களுக்கு பிரச்சினை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வும், சம்பள பாக்கியும் உடனே கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புதுவேலை அமையும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமானாலும் அதற்குத் தகுந்தாற்போல சம்பள உயர்வும் உண்டு.
இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.
பரிகாரம்: தேனிக்கு அருகில் உள்ள குச்சனூரில் வீற்றிருக்கும் சுயம்பு சனீஸ்வர பகவானை சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்