விருச்சிகம்: விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், எதிர்நீச்சல் போட்டு பழகியவர்கள். தர்மம், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். யோக பலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்து பேசி மகிழக் கூடிய இனியநிலை உருவாகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். இனி பணவரவு அதிகரிக்கும். வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசத்தை கோலாகலமாக செய்வீர்கள்.
உங்களை கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். 5-ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள். இனி வலி நீங்கி வலிமை கூடும். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் சில சமயங்களில் உங்களை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடுவீர்கள். கண் எரிச்சல், பார்வைக் கோளாறு பிரச்சினைகள் வரக்கூடும். கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை, கால்வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். அந்தரங்க விஷயங்களை எவரிடமும் சொல்லாதீர்கள். நெடு நாள்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தன - பூர்வபுண்யாதியான குருபகவான் பூரட்டாதி சாரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு திருமணம் முடியும். சொந்த ஊரில் வீடு கட்டுவீர்கள்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் தைரிய - சுகாதிபதியான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் அம்மாவின் ஆரோக்கியம் பாதிக்கும். வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளால் அலைச்சல் இருக்கும். வீடு மாறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளிநாட்டு பயணம் அமையும். 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் அஷ்டம - லாபாதியான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு, பெரிய பதவிகள் வந்து சேரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
இல்லத்தரசிகளே! குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவர் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார். அலுவலகம் செல்லும் பெண்களே! மன உளைச்சல், வேலைச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். உங்கள் எண்ணங்களை புரிந்து கொள்ளும் மணாளன் கிடைப்பார். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வரக் கூடும். நீங்கள் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். மாணவ – மாணவிகளே! நாட்டமில்லாமல் இருந்து வந்த உயர்கல்வியில் இனி ஆர்வம் பிறக்கும்.
வியாபாரிகளே! பற்று வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு கொள்முதல் செய்யப் பாருங்கள். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப் படுத்துவீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. ஏஜென்ஸி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகஸ்தர்களே, அதிகாரிகளே ஆச்சரியப்படும்படி சில கடினமான வேலை களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்துக்கே மாற்றல் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும்.
இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும். செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைக்கழித்தாலும் தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறவைக்கும்.
பரிகாரம்: தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். மேன்மேலும் முன்னேறுவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்