சிறப்பு பலன்கள்

துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

Guest Author

துலாம்: எங்கும் எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பும் நீங்கள், குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரமாய் சிந்திப்பவர்கள். அடுத்தவர்களுக்கு எப்போதும் நல்லதையே நினைப்ப வர்களாக இருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித் தருவார். மன இறுக்கம், கோபத்தில் இருந்து விடுபடுவீர்கள். இனி உங்களின் வாழ்க்கை பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும்.

பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பிள்ளைப் பேறு கிட்டும். மனைவி உறுதுணையாக இருப்பார். குடும்ப உறுப்பினர்களுடன் தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்பு நீங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் கவுரவம் கூடும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுவதால் பல நன்மைகள் உண்டு.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தைரிய - சஷ்டமாதியான குருபகவான் பூரட்டாதி சாரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்வதால் பழைய கடன் தீரும். வீடு கட்ட புதுக்கடன் வாங்குவீர்கள். வாகனப் பழுது, விபத்துகள் வந்து நீங்கும். வாட்ஸ்-அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கவனமாகக் கையாளுங்கள். ஊர் பிரச்சினைகள், வீட்டுப் பிரச்சினைகளை பொது வெளியில் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் சுக - பூர்வ புண்யாதிபதியான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. சொந்த வீடு அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் உண்டு. 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் உண்டு. சேமிப்பு அதிகரிக்கும்.

இல்லத்தரசிகளே! தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சொந்தம் பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புகுந்த வீட்டில் நற்பெயர் வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களை நம்பி மேலதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கல்யாணம் கூடிவரும். மாணவ-மாணவிகளே! சமூக வலைதளம், சினிமா, விளையாட்டில் முழு நேரமும் செலவிடுவதைத் தவிர்த்துவிட்டு இனி படிப்பில் அக்கறை காட்டுவீர். கல்வி ஒன்றே வாழ்க்கை முழுவதும் துணை நிற்கும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்.

வியாபாரிகளே, அதிரடி லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் கடையை மாற்றுவீர்கள். அதிக முதலீடு செய்யும்போது ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களே, இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்தவும்.

இந்தச் சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஆரணி - படவேடு தடத்தில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீஎந்திர சனீஸ்வர பகவானை சென்று வணங்குங்கள். கைம்பெண்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

SCROLL FOR NEXT