சிம்மம்: அரண்மனையில் காவலனாய் இருப்பதைக் காட்டிலும், குப்பத்தில் தலைவனாய் இருப்பதே மேல் என சுய கவுரவம் உடைவர்கள் நீங்கள் தான். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எங்கும் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்கள் தானே என்று குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அவ்வப்போது வரும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள்.
முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. மகனின் உயர்கல்விக்காகவும், உத்தியோகத்துக்காகவும் முக்கிய விஐபிகளின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கொஞ்சம் கடன் வாங்க வேண்டி வரும். கட்டுப்படுத்த முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். மனைவியுடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்து போகும். உங்களுக்கு வர வேண்டிய பூர்வீகச் சொத்தின் பங்கை போராடிப் பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். என்றாலும் சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த திடீர் பணவரவால் திக்குமுக்காடிப் போவீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான குருபகவான் பூரட்டாதி சாரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்வதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். அவர்களை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்சினைகள் தீரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். என்றாலும் மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் சஷ்ட - சப்தமாதிபதியான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் கடன் அதிகமாகும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் சங்கடம் வரும். 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் தன - லாபாதிபதியான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள்.
இல்லத்தரசிகளே! குடும்பத்தினருக்கு நீங்கள் தான் ஆலோசனை சொல்ல வேண்டி வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து அவ்வப்போது கவலைகள் வந்து தலைதூக்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! விளையாட்டாகப் பேசி வம்பில் சிக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! விரைவில் திருமணம் முடியும். மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும்.
வியாபாரிகளே, போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சினைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.
உத்தியோகஸ்தர்களே! நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
இந்த சனி மாற்றம் பிரச்சினைகளிலும், செலவுகளிலும் சிக்க வைத்தாலும் கூட, கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.
பரிகாரம்: கஞ்சனூர் அருகிலுள்ள திருக்கோடிக்காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்