கடகம்: எடுத்த காரியத்தை உண்ணாமல் உறங்காமல் முடிக்கும் வல்லமை கொண்ட நீங்கள் காசு பணத்துக்காக கவுரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால் இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள்.
சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதுக்குள் துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நீண்ட காலமாக இருந்துவந்த பங்காளிப் பிரச்சினை தீரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்டபடி எந்த காரியமும் முடிவுக்கு வரும். அடுத்தவர்களின் ஆலோசனைகளையே கேட்டுக் கொண்டிருந்த நீங்கள் இனி தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பேச்சாலேயே மற்றவர்களை வசீகரிப்பீர்கள். எதிர்பாராத பணவரவுகளும் உண்டு.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் பூரட்டாதி சாரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். தங்க, வைர ஆபரணங்களை வாங்குவீர்கள். மகனுக்கு திருமணத் தடை நீங்கும்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் சப்தம - அஷ்டமாதிபதியான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் வீண் அலைச்சல், விரயச் செலவுகள் வரக்கூடும். தம்பதிக்குள் கருத்து மோதல்கள் வந்து விலகும். வழக்குகளில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிப்பது நல்லது. 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் தைரிய - விரயாதிபதியான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் தம்பி, தங்கைகளுக்கு திருமணம் கூடி வரும். வீடு கட்டுவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
இல்லத்தரசிகளே! இனி தங்க ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மாமனார், மாமியாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! இனி பணியில் நிரந்தரமாக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களே தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இனி கைகூடி வரும். மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.
வியாபாரிகளே, இதுவரை மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டிருப்பீர்கள். இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாரம்பரிய அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகத்தில் இனி உங்கள் ராஜ்ஜியம் தான். தொல்லை தந்த அதிகாரி மாற்றப்பட்டு, உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகளும் தேடி வரும்.
இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.
பரிகாரம்: பாண்டிச்சேரிக்கு முன்புள்ள பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். உயர்கல்விக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களின் படிப்புக்கு உதவுங்கள். நினைத்ததை முடிப்பீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்