தியாக உணர்வும், திடச்சிந்தனையும் உள்ள வர்களே! மற்றவர்கள் உங்களுக்கு செய்த தீங்குகளை எல்லாம் நொடிப்பொழுதில் மறந்து மன்னிக்கும் மகாத்மாவும் நீங்கள்தான்.
ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடு படுத்தியெடுத்துக் கொண்டிருந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் திக்கு திசையறிவீர்கள். உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிவரும். இனி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போவீர்கள். தம்பதிக்குள் சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக முடிப்பீர்கள். அரசாங்க காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் விலகும்.
மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். கன்னிப் பெண்களுக்கு மன இறுக்கம் விலகும். மாணவர்கள் விளையாடும்போது கவனமாக இருக்க வேண்டும். ஷேர், கமிஷன், அரிசி குடோன், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடை வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு உண்டு. பதவி உயர்வு தேடி வரும். கணினி துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத் துறையினர் போட்டி, பொறாமைக்கு நடுவில் வெற்றி பெறுவார்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் இக்கால கட்டங்களில் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திடீர் பணவரவு உண்டு. சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகுபகவான் சஞ்சாரம் செய்வதால் எதிலும் வெற்றி உண்டு. சொத்து தகராறு சுமுகமாக முடியும். குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் இக்காலகட்டங்களில் அநாவசியச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமருவதால் இனி சமயத்துக்கு தகுந்தாற்போல் பேச வைப்பார். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவீர்கள். தலைச்சுற்றல், ஒற்றைத் தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். சகோதரர்கள், நண்பர்களுடன் இணக்கமாகச் செல்லவும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் தீரும். வருமானம் உயரும். பங்காளிப் பிரச்சினை தீரும். சந்திரனின் அஸ்தம் நட்சத்தி ரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது பவான் சஞ்சாரம் செய்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வரவேண்டிய பணம், கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் இருந்து வந்த கவலைகள் குறையும். வேலை இழந்த பெண்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அரசு காரி யங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தி யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளின் மனதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். இந்த ராகு - கேது மாற்றம் மனதளவில் அச்சத்தையும், உடலளவில் சோர்வையும் தந்தாலும், கடின உழைப்பாலும், சகிப்புத்தன்மையாலும் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.
பரிகாரம்: பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்ட மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள பாமணி எனும் தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் ஸ்ரீ நாகநாதரையும், ஸ்ரீ அமிர்தநாயகியையும் தரிசியுங்கள். தாயை இழந்தவர்க்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |