மாத பலன்கள்

மகரம், கும்பம், மீனம்: ஆகஸ்ட் மாத பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உழைப்புக்கு அஞ்சாத மகர ராசியினரே நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். இந்த மாதம் பணவரத்து சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலைப் பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

திருவோணம்: இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்புகள் வந்துசேரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம் புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். | சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15 | அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8 |

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் ராகு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றும் கும்ப ராசியினரே இந்த மாதம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பிரிந்து சென்ற தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

சதயம்: இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மன அடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்ச நேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். | சந்திராஷ்டம தினங்கள்: 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10 |

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிக்கும் குணம் உடைய மீன ராசியினரே இந்த மாதம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும்.

பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. பெண்களுக்கு கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாக வும் பாடங்களை படிப்பது அவசியம்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் பணப் புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

உத்திரட்டாதி: இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன் விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

ரேவதி: இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம்: ஸ்ரீ ராகவேந்திரரை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். | சந்திராஷ்டம தினங்கள்: 18, 19 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12 |

இந்த மாதம் கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT