மாத பலன்கள்

கடக  ராசி அன்பர்களே! நவம்பர் மாத பலன்கள்; புத்தியில் தெளிவு; காரியத்தில் வெற்றி; குழப்பம் நீங்கும்; வீண் பயம் விலகும்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:


சுக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி - லாப ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.


கிரக மாற்றம்:


13-11-2021 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


எவரையும் கண்டு அஞ்சாமல் தான் எடுத்துக் கொண்ட காரியங்களை திறம்பட செய்யும் கடக ராசியினரே!

இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரத்து அதிகப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க, பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

புனர்பூசம்:


இந்த மாதம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி காரியமாற்றினால் மிகச் சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


பூசம்:


இந்த மாதம் மன மகிழ்ச்சி ஏற்படும். மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சினை நீங்கும்.


ஆயில்யம்:


இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சினை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT