கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-05-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-05-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-05-2025 அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மாத மத்தியில் காரிய தடைகள் எதிலும் தாமதமான போக்கு காணப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சினைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.
சதயம்: இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.
பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும் | சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்