மாத பலன்கள்

கன்னி ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

Guest Author

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 1ம் தேதி புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 2ம் தேதி சுக்கிரன் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி சூர்யன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30ம் தேதி சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அது பற்றி பரிசீலிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம்.

அரசியல் துறையினருக்கு திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். எல்லா வித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சிலவேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

அஸ்தம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

சித்திரை 1, 2, பாதம்: இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமான முடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிப்பீர்கள். ஏதேனும் வீண் கவலைகள் ஏற்படலாம். காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு இருக்காது. உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம் அன்னதானம் வழங்க மனத்தெளிவு உண்டாகும். அறிவுத் திறன் அதிகரிக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT