ஜோதிடம்

நீங்கள் எந்த ராசி? உங்களுக்கு ஆகாத உணவுகள்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ஸ்தானமும் நமக்கு ஒவ்வொரு விஷயங்களை உணர்த்தும். இதை நாம் எளிமையாக புரிந்து கொள்ள நமது முன்னோர்கள் நமக்கு பல விஷயங்களை வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியின் ஆறாம் வீடு கடன் - உடல்நலம் - மன வலி - உடல் வலி போன்ற விஷயங்களை நமக்குச் சொல்லும். இந்தப்பதிவில் ஒவ்வொருவருடைய உடல்நலத்திற்கும் நன்மை அளிக்கக் கூடிய விஷயங்களையும் நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் பார்க்கலாம்.

மேஷராசிக்காரர்கள் இயற்கையிலேயே அதிக காரம் மற்றும் உப்புச் சுவையினை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள் புளிப்பு மற்றும் அதிக காரம் ஆகியவற்றை தவிர்ப்பதன் மூலமாக நன்மைகளைப் பெறலாம்.

*************************************************
ரிஷப ராசிக்காரர்கள் இயற்கையிலேயே புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையை அதிகம் விரும்புபவராக இருப்பார்கள். இவர்கள் உணவில் அனைத்து விதத்திலும் சரியாக அமைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். உப்பு காரம் சரியாக இருந்தால் தான் இவர்கள் சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையினை தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும்.

**************************************************

மிதுன ராசிக்காரர்கள் புளிப்பு மற்றும் காரம் அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். இதனாலேயே இவர்களுக்கு வாதம் சம்பந்தமான பிரச்சினைகள் சீக்கிரமே வந்து விடும். கை கால் உளைச்சல் போன்ற பிரச்சினைகள் சீக்கிரம் இவர்களுக்கு வரலாம். இவர்கள் புளிப்பு மற்றும் காரத்தை சரி சமமான விதத்தில் சாப்பிடுவது நன்மையை கொடுக்கும்.

*********************************************************************

கடக ராசிக்காரர்கள் இயற்கையிலேயே காரம் மற்றும் இனிப்பை அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். அனைத்து விதமான உணவுகளையுமே இவர்கள் சுவைப்பார்கள். ருசிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் இனிப்புச் சுவையை தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும்.

******************************************************


சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே கொண்ட கொள்கையில் மாறாதவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். இவர்கள் காரம் மற்றும் உப்பு சுவைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன் கோபம் கூட இவர்களுக்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம் கார அளவை இவர்கள் அதிகம் சாப்பிடுவதுதான். இவர்கள் காரம் சம்பந்தமான உணவுகளை குறைத்துக்கொள்வது நன்மையைக் கொடுக்கும்.

***************************************************************


கன்னி ராசிக்காரர்கள் இயற்கையிலேயே சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். பொதுவில் இவர்களுக்கு புளிப்பு மற்றும் இனிப்புச் சுவை மிகவும் பிடிக்கும். அதே வேளையில் இவர்களுக்கு செரிமானக் கோளாறு அதிகமாக ஏற்படலாம். எனவே இவர்கள் புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையை சரிசமமாக கொள்வது நன்மையைக் கொடுக்கும்.

*************************************************************************


துலாம் ராசிக்காரர்கள் எந்த உணவானாலும் சாப்பிடக் கூடியவர்கள். இருப்பினும் இவர்கள் மாவு சம்பந்தமான பொருட்கள் மற்றும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும். இவர்களுக்கு சீக்கிரமே செரிமானக் கோளாறு ஏற்படலாம். நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நன்மையைக் கொடுக்கும்.

*******************************************************************************

விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையிலேயே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று பேசக்கூடியவர்கள். அதிக காரம் மற்றும் உப்புச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ரத்தவிருத்தி சம்பந்தமான உணவுகளை உணவில் அதிகம் எடுத்துக்கொள்வது நன்மையைக் கொடுக்கும். அதேவேளையில் அதிக காரம் இவர்களது உடல் நலத்திற்கு தீங்கானது.

******************************************************************************

தனுசு ராசிக்காரர்கள் இயற்கையிலேயே திரவ ஆகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். உடம்பில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் அடிக்கடி நிகழலாம். அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதே வேளையில் புளிப்பு சம்பந்தமான உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையேல் வாத நாடி அதிகரித்து வாதம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

***********************************************************************************************

மகர ராசிக்காரர்கள் பொதுவாகவே உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ரசித்து ருசித்து சாப்பிடக்கூடியவர்கள். உணவு சம்பந்தமான விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சமையல் கலையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். எந்தெந்த உணவோடு எந்த உணவை சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்கிற நுட்பத்தைத் தெரிந்தவர்கள். இவர்கள் இனிப்பு சம்பந்தமான உணவுகளைத் தவிர்த்தல் நலம். இல்லையேல் சர்க்கரை குறைபாடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.

****************************************************************************************

கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இவர்கள் உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் எப்பொழுதும் சூடாகச் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். இவர்களுடைய உணவில் கட்டாயமாக கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையை மிகவும் விரும்புவார்கள். இவர்கள் உடல்வாகு இயற்கையிலேயே குளிர்ச்சியான உடல்வாகாக இருப்பதனால் இவர்கள் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல் நலம்.

****************************************************************************************

மீன ராசிக்காரர்கள் பொறுத்தவரை எந்த உணவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் காரம் மற்றும் இனிப்பு சுவை உணவுகளை அதிகம் விரும்புவார்கள். தேங்காய் சேர்க்கப்பட்ட உணவுகள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் அதிக காரம் மற்றும் அதிக உப்பினைத் தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும்.

************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT