பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரக நிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு பதினெட்டாவது நட்சத்திரத்தில் இருந்து பத்தொன்பதாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்கள்:
சொந்த முயற்சியாலும், மனத்துணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் அஸ்வினி நட்சத்திர அன்பர்களே!
நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த குரு பெயர்ச்சியால் காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படுவீர்கள். மனதில் தடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.
பெண்களுக்கு : சிக்கலான விஷயங்களைக் கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதில் தடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு : நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
அரசியல் துறையினருக்கு : எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,
மாணவர்களுக்கு : கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம் : மஹாகணபதிக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வணங்கி வர, பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
மதிப்பெண்கள்: 88% . நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.
-: வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |