பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நிகழும் மங்களகரமான கல்யப்தம் 5120 - சாலிவாகனம் 1941 - பசலி 1429 - கொல்லம் 1195 - ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 11ம் தேதி பின்னரவு 12ம் தேதி முன்னிரவு (ஆங்கிலம்: 29.10.2019) அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லப்க்ஷ ப்ரதமை - விசாக நட்சத்திரம் - ஆயுஷ்மான் நாமயோகம் - கிம்ஸ்துக்னம் கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 54.14க்கு (அதிகாலை மணி 3.49க்கு) கன்னியா லக்னத்தில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.
தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒருவருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் குரு பகவான், மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி - 15.11.2020 - ஞாயிற்றுக்கிழமையன்று மாறுகிறார்.
தனுசு ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும் - ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தை விட பார்க்கும் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.
பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
நன்மை பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - சிம்மம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கன்னி - விருச்சிகம் - தனுசு - கும்பம் - மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் - கடகம் - துலாம் - மகரம்
குரு பயோடேட்டா:
சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதான தலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு
குரு காயத்ரீ மந்திரம்
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.
குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
---------------------------------------------------------
குருப்பெயர்ச்சி பொது பலன்கள்:
நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். உலகத்தில் அனைத்து இடங்களிலும் சூறாவளிக் காற்றுடன் நல்ல மழை பொழியும். கடலில் அதிக அளவில் மழை பொழியும்.
புஞ்சை தானியங்கள் அதிக அளவில் அறுவடையாகும். சில குறிப்பிட்ட பகுதிகளில், மழையால் அதிக அளவில் விவசாயம் பாதித்து, விவசாயிகள் கடுமையான அளவில் பாதிக்கப்படுவர்.
முக்கிய கிரகங்களான சனி, குரு பலமாக உள்ளதால் எதிர்காலம் நல்ல ராஜயோகம் தரும். தமிழ்நாட்டில் ஏமாற்றிய மழை இந்த வருடம் தவறாமல் பொழிய வாய்ப்புள்ளது. வடபகுதி பிரதேசம் மிக அதிக அளவில் பாதிக்கும். மருந்து வகை, மின்சார வகை, இரும்பு வகை விலையேற்றம் ஏற்படும். வெடி வகைகளுக்கு பல புதிய திட்டங்களை அரசாங்கம் கொண்டுவரும்.
அயல்நாடு சென்றுவரும் மோகம் குறையும். ஜீவ நதிகள் சுற்றுச்சூழலால் கடுமையாக பாதிக்கும். அணைகளில் சிறிதளவு பாதிப்பு நேரும். அடிக்கடி வானமூட்டமும் கோட்டை மேகம் உற்பத்தியும், மேக கர்ஜனையும், மூடுபனி, புகைப்பனி அதிகம் உண்டாகுதலும், வானத்தில் பறவைக் கூட்டத்தால் விமான ஊர்திகளுக்கு சிறிதளவு சேதாரமும் உண்டாகும்.
குரு, கேது சம்பந்தப்பட்டிருப்பதால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண நிலை மாற்றமின்றி இருக்கும். கர்நாடகா, ஊட்டி, கொடைக்கானல், இமாச்சலப் பகுதிகளில் அதிக மூடுபனியால் விவசாயம் பாதிக்கும். மர வியாபாரிகள், ஏற்றுமதி- இறக்குமதி செய்பவர்களுக்கு அரசாங்கம் கடுமையான வரிகளை விதித்து விலை நிர்ணயம் செய்யும். கரிசல் பூமி போன்ற பகுதிகளில் மரம், செடி கொடிகள் சிறப்பாக வளரும். வனங்களில் வாழும் விலங்குகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தும். கிடங்குகளில் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆன்மிகம் தழைக்கும். கும்பாபிஷேகங்கள் அதிக அளவில் நடைபெறும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |