ஜோதிடர் ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
ராசி பலன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு ராசியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். அப்படியிருக்க... ராசிக்கு மட்டும் பலன் அறிவது என்பதைவிட இன்னும் விலாவாரியாக நுட்பமாக, ஒரு ராசியை மூன்று பகுதியாக்கி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பலன்களைப் பார்க்க இருக்கிறோம்.
இது தமிழ் மாதத்தின் அடிப்படையில் மாத பலன்களாக தர இருக்கிறேன். அதுவும் உங்கள் நட்சத்திர ரீதியாக! இது விரிவான பலன்களாகவே இருக்கும். மேலும் சாதக பாதகங்கள், பரிகாரங்கள் என எல்லாம் உள்ளடக்கியதாக இருக்கும்.
எம்பெருமான் முருகன் ஆசியோடும், என் குருநாதர் யோகராம்சங்கர் அவர்களின் ஆசியோடும் தொடர்கிறேன், உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
- ஜோதிடர் ஜெயம் சரவணன்
அஸ்வினி நட்சத்திரம்
அஸ்வினி நட்சத்திர அன்பர்களே. இந்த ஆவணி மாதம் உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கும் மாதமாகவே இருக்கிறது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. ஆபரணங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து உயர்வுக்கு வழிவகுக்கும். திருமணத்தடை அகலும். திருமணம் உறுதியாகும். மிக முக்கியமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது புத்திர பாக்கியத்தை உறுதி செய்யும் தகவல் வந்துசேரும்.
பெண்களுக்கு- ஆடை ஆபரணங்கள் சேரும். ஆரோக்கியத்தில் இருந்த கவலைகள் மாறி ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவோடு சாதனைகள் நிகழ்த்துவீர்கள்.
கலைஞர்களுக்கு - புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும், தடைகள் அகலும் மாதம்.
மாணவச் செல்வங்கள்- சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். மந்த நிலை மாறி பாடங்களில் கவனமும் ஆர்வமும் ஏற்படும்.
பொதுவான பலன்கள் : ஆரோக்கியத்தில் இருந்த கவலைகள் நீங்கும். ஆனாலும் கால் மற்றும் பாதங்களில் காயம் உண்டாக வாய்ப்புள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம்- எம்பெருமான் முருக வழிபாடு எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும்.
சந்திராஷ்டம நாள் - ஆவணி -19 (செப்டம்பர் -5)
*************************************
பரணி நட்சத்திரம்
மகிழ்ச்சியில் திளைக்கும் மாதம் இது. நினைத்தது நினைத்த மாத்திரத்தில் நடந்தேறும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த விஷயம் இப்போது உங்களுக்கு சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக இருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வரும். இனிதே நடந்தேறும். எப்போதோ ஆரம்பித்து பாதியில் விடுபட்ட காரியம் திடீரென உங்களுக்கு வெற்றியாக அமையும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் இப்போது ஈடேறும். அதற்கான வங்கிக் கடன் எளிதாய் கிடைக்கும்.
பெண்களுக்கு- குடும்பத்தில் அமைதி நிலவும். வேலை நிரந்தரமாகும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மாணவச்செல்வங்கள்- கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். நல்ல மதிப்பெண் எடுத்து பெற்றோரை ஆச்சரியப்படுத்துவீர்கள். உயர்கல்வி முயற்சியில் விரும்பிய துறையே கிடைக்கும்.
கலைஞர்கள்- சந்தோஷத்தின் உச்சத்தில் திளைப்பீர்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். அரசு ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும்.
பொது பலன்கள் : வாயைக் கட்டினால் வயிற்று பிரச்சினை வராமல் தடுக்கலாம். இல்லை என்றால் வயிற்றில் வலி, சிறுநீரகக் கல் பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு உண்டு.
வணங்க வேண்டிய தெய்வம்- சிவா விஷ்ணு ஆலயம் அல்லது விஷ்ணு துர்கை வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.
சந்திராஷ்டம தினம்- ஆவணி 20 (செப்டம்பர் 6 )
********************************************
கார்த்திகை நட்சத்திரம்
கவலைகள் காணமல் போகும் மாதம் இது. ஆரோக்கியம் பற்றிய பயம், கவலைகள் நீங்கும். அலுவலகத்தில் தொல்லை கொடுத்தவர்கள் காணாமல் போவார்கள், குலதெய்வக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இப்போது நடந்தேறும். ஆன்மிகப் பயணங்கள் செய்வீர்கள்.
தொழில் திருப்திகரமாக இருக்கும். நிலுவை பணம் வசூலாகி ஆனந்தப்படுத்தும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அயல்நாட்டில் வேலை எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது கிடைக்கும். வெளிநாட்டில் குடியுரிமை எதிர்பார்த்தவர்களுக்கு தடையில்லாமல் கிடைக்கும் தருணம் இது.
பெண்களுக்கு - சொந்தவீடு கனவு எப்படியாவது நிறைவேறி புது வீட்டில் குடியேறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி மாற்றம் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
மாணவச் செல்வங்கள் - அயராது படித்தால் உயர்வு உண்டு என்பதை உணர்ந்து படியுங்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டவர்களுக்கு இப்போது நல்லது நடக்கும். மருத்துவக் கல்வி மீதான கனவு ஈடேறும்.
கலைஞர்களுக்கு - திரைத் துறை, இசைத் துறையினருக்கு பொன்னான வாய்ப்புகள் வரும். சரியாக பயன்படுத்தினால் அடுத்த 5 வருடங்களுக்கு கவலையில்லை.
பொது பலன்கள் : உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்த் தாக்கம் உண்டாகும். நீர்ச் சத்து உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - ஒருமுறை திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்யுங்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.
சந்திராஷ்டம தினம்- ஆவணி 21- (செப்டம்பர் 7)
***********************************************
ரோகிணி நட்சத்திரம்
நல்ல விஷயங்கள் தொடர்கதையாகும் தருணம் இது. ஆயிரம் கவலைகள் இருந்தாலும் சிரித்த முகத்துடனே காட்சி தரும் நீங்கள் இந்த மாதமும் சிரித்த முகத்துடனே இருக்கப்போகிறீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் சரியாக வந்து மனதைத் தேற்றும். கடன் சுமை கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். அதுவும் உங்கள் வாய்ஜாலத்தால் கிடைக்கும். ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் சுவையான உணவு எங்கு கிடைக்கும் என்ற தேடல் மட்டும் குறையாது.
சொந்தத் தொழில் செய்பவர்கள் இருப்பதை இருக்கும்படியாக நடத்தினால் போதும். புதிய முயற்சியில் இறங்குகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைக்க வேண்டாம். அதேபோல யாருக்கும் ஜாமீன் கொடுக்காதீர்கள். மீறி கொடுத்தால் நீங்கள்தான் தண்டம் கட்ட வேண்டிவரும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு நிச்சயமாக அந்த வாய்ப்பு கிடைக்கப்பெறும்.
பெண்களுக்கு - எதைப்பற்றியும் கவலையில்லாத மன நிம்மதி உண்டாகும். வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லாவிட்டால் அந்த வார்த்தையே உங்களுக்கு எதிராகப்போய்விடும், உஷார். ஆரோக்கியத் தொல்லை நீங்கும்.
மாணவர்களுக்கு- கல்வியில் சலிப்பு உண்டாகும். கல்வியே மேன்மை தரும் என்பதை உணர்ந்தால் கல்வியில் ஜொலிப்பீர்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் முன்பைவிட இப்போது இன்னும் ஆர்வம் அதிகமாகும்.
கலைஞர்களுக்கு - வெளிநாடு சென்று கலைச்சேவை செய்யும் வாய்ப்பு வரும். ஒரு சிலருக்கு புதிய வாய்ப்புகள் தடைகளைத் தாண்டி கிடைக்கப்பெறுவீர்கள்.
பொது பலன்கள் : உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். இல்லை என்றால் உணவே நோய் தரும் என்பதை உணர்ந்து கவனமாக இருங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்- துர்காதேவியை வணங்கி வாருங்கள். தடைகள் எல்லாம் தவிடுபொடியாகும்.
சந்திராஷ்டம தினம் - ஆவணி - 22 (செப்டம்பர்-8)
**************************************
மிருகசீரிடம் நட்சத்திரம்
நம்பிக்கைகள் நனவாகி கைகூடும் மாதம் இது. எதிர்பாராத பணவரவு வர வாய்ப்பு உள்ளது. அயல்நாட்டிலிருந்து வரும் தகவலால் ஆதாயம் அடைவீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு சிறுசிறு இடைஞ்சல்கள் வருவதும், அதை சமாளிப்பதும் எப்போதும் போல் உங்களுக்கு பழக்கமான ஒன்று என்பதால் கவலை அடையமாட்டீர்கள்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். திருமண வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.இனியும் தள்ளிப்போட வேண்டாம்.
பெண்களுக்கு - நிதானம் நிறைய நன்மை தரும் என்பதை உணருங்கள். ஆரோக்கிய அச்சுறுத்தல் வருவதும் போவதுமாக இருக்கும். ஆனால் பயம் வேண்டாம்.
மாணவர்களுக்கு - எல்லாம் தெரியும் என்ற அலட்சியப் போக்கை கைவிடுங்கள். கல்வியில் கவனம் செலுத்துங்கள். இல்லை என்றால் அலட்சியமே ஆபத்தாகிவிடும்.
கலைஞர்களுக்கு - நம்பிக்கை ஒளி தென்படும் மாதம். பலவிதமான வாய்ப்புகள் வரிசையாக வரும். கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
பொது பலன்கள் : தோல்நோய் அலர்ஜி வருவதற்கு வாய்ப்பு உண்டு.
வணங்கவேண்டிய தெய்வம் : ஶ்ரீரங்கம் ரங்கநாதரை தரசியுங்கள். கூடுதல் பலம் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம தினம்- ஆவணி - 23 (செப்டம்பர்-9)