சென்னை: சென்னை மியூசிக் அகாடமியில் 99-வது இசைவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் இசைவிழாவில் 80-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளும், காலை கருத்தரங்குகளும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு இசை விழாவில் இளம் வித்வான் வி.வெங்கட நாகராஜனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அவருக்கு பக்கபலமாக விக்னேஷ் தியாகராஜன் (வயலின்), திப்பிராஜபுரம் ஹரி (மிருதங்கம்), மஞ்சேஷ் மோகனன் (கடம்) இருந்தனர். ‘வனஜாக் ஷி’ எனத் தொடங்கும் தஞ்சை வடிவேலுவின் சாவேரி ராக வர்ணத்துடன் கச்சேரியைத் தொடங்கினார் வெங்கட நாகராஜன். அடுத்ததாக, முத்துஸ்வாமி தீட்சிதரின் நாட்டை ராக க்ருதியை (ஸ்வாமிநாத பரிபாலயாசுமாம்) பாடினார்.
சிறிய ஆலாபனைக்குப் பிறகு, ரீதிகௌளை ராகத்தில் அமைந்த சுப்பராய சாஸ்திரியின் பாடலை (ஜனனி நின்னு வினா) பாடினார். இதில் ஒரு குழந்தை தன் தாயிடம், “உன்னைவிட என்னை கவனித்துக் கொள்ள வேறு யார் இருக்கிறார்கள்?” என்று கேட்பதுபோல, தேவியைக் கேட்கிறார் சுப்பராய சாஸ்திரி.
பின்னர், பாபநாசம் சிவனின் பிரபலமான மாயாமாளவ கௌளை ராகத்தில் அமைந்த ‘பொல்லா புலியினும்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார் வெங்கட நாகராஜன். பிரதான ராகமாக சங்கராபரணம் அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, தியாகராஜ சுவாமியின் ‘எந்துகு பெத்தல’ கீர்த்தனையைப் பாடினார். ‘வேத சாஸ்த்ர தத்வார்த்தமு’ என்ற வரியை நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார்.
இந்த கீர்த்தனையில், சான்றோர் பெருமக்களைப் போன்ற ஞானத்தை, தனக்கு அருளுமாறு ராமபிரானை தியாகராஜர் வேண்டுகிறார். ராகம் தானம் பல்லவிக்கு வித்வான் டி.என்.சேஷகோபாலனின் வராளி ராக பல்லவியைத் தேர்வு செய்தார் வெங்கட நாகராஜன். ‘அம்பிகை ஜகதம்பிகைவராளிதோ ஸ்ருதியோடு லயமும் தராளிதோ’ என்ற பல்லவியை த்ரிகாலத்தில் பாடி, அதற்கு அழகு சேர்த்தார்.
தனி ஆவர்த்தனத்தில் திப்பிராஜபுரம் ஹரி, மஞ்சேஷ் மோகனன் தங்கள் மிருதுவான வாசிப்பில் ரசிகர்களை தாளம் போட வைத்தனர். பாடகரைத் தொடர்ந்தபடி இருந்த விக்னேஷ் தியாகராஜன், சங்கராபரண ராக ஆலாபனையிலும், ராகம் தானம் பல்லவியிலும் முத்திரை பதித்தார்.
‘ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை’ எனத் தொடங்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரத்தை காபி ராகத்தில் விருத்தமாகப் பாடி, சுத்தானந்த பாரதியின் ‘ஆடுகிறான் என்னுள் பாடுகிறான் கண்ணன்’ என்ற பாடலைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் வெங்கட நாகராஜன்.
சென்னை ஐஐடியில் மேலாண்மை ஆய்வுகள் துறையில் மனிதவளப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ள வெங்கட நாகராஜன் தற்போது கிரியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேல், விதூஷி திருச்சி அம்புஜம் வேதாந்தத்திடம் இசை பயின்ற இவர், தற்போது வித்வான் சஞ்சய் சுப்பிரமணியனிடம் இசை பயின்று வருகிறார்.