கலை

“பதிப்புத் துறையில் எழுப்பிய குடிசையில் சேரும் வைரக் கற்கள்...” - சென்னை புத்தகக் காட்சியில் ஒரு நம்பிக்கைக் குரல்

வான்கோ பதிப்பகம் உருவான உத்வேகக் கதை!

பாரதி ஆனந்த்

‘மனிதர்களை நேசிப்பதே கலை வடிவின் உச்சம்’ என்று நம்பியதோடு, அதன்படி வாழ்ந்து, அதன் வழியில் ஓவியங்களை எழுப்பிய வின்சென்ட் வான்கோவை அறியாதோர் இருப்பார்களா என்ன?

இன்று வான்கோவை ஆழமாகத் தெரியாதவர்கள் கூட அந்தப் பெயர் போதும் தன்னை தனித்துக் காட்ட என்று அவர் பாணி ஓவியங்களைப் பிரதிபலிக்கும் ஏதேனும் ஒரு பொருளை ஷோ ஆஃப்-க்காகவாவது வைத்திருக்கிறார்கள்.

வான்கோ அவர் விரும்பியபடியே எல்லைகள் கடந்து மனிதர்களின் நேசிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார் ஒரு கலைக் கடவுளாக.

“கலை காலத்தை வெல்லும்” என்பதை தன் காலங்கடந்த பின்னர் நிரூபித்த வான்கோவின் பெயரைத் தாங்கிய ஒரு பதிப்பகத்தை, அதன் பின்னணியில் உள்ள இளைஞர்கள் பற்றிய நம்பிக்கைக் கதை இது.

சென்னையில் 49-வது புத்தகக் கண்காட்சியில் உலா வந்தபோது கண்களைப் பறித்தது ‘வான்கோ’ பதிப்பகம். உண்மையில் அந்தப் பெயர் தான் என்னையும், என்னைப் போலவே பலரையும் அந்த அரங்குங்குள் ஈர்த்திருக்கலாம் என்று நம்புகிறேன்.

அரங்கினுள் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் ரேப்பர்களும், நடுவில் இருந்த வான்கோவின் சூரியகாந்தி அலங்காரமும், புத்தகங்களை வாங்குவோருக்கு இலவசமாக வழங்கப்பட்ட வான்கோ ஸ்டைல் ஓவியத்துடன், கவிதை வரிகளும் கொண்ட புக் மார்க்குகளும் இங்கு ஏதோ இருக்கிறது என்று பேச்சு கொடுக்கத் தூண்டியது.

ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆனா அரும்புநிலை பதிப்பகம் அது என்பதும், இந்த ஆண்டு கவிஞர் தேவதேவனின் ‘நிலவில் உதித்த கார்முகில்’, எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லியின் புதிய சிறுகதைத் தொகுப்பான ‘ஒரு க்ளாஸ் விஸ்கி’ ஆகிய இரண்டு நூல்களையும் வாஙோ பதிப்பகம் தாமே வெளியிட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொண்டேன்.

அப்படியே அந்த இளைஞருடன் பேச்சு நீள, அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த சிறு உரையாடலில் இருந்து...

அரங்கிலிருந்த அந்த இளம் பதிப்பாளர் பெயர் சுரேன். சென்னையில்தான் வசிக்கிறார். படித்தது என்னவோ பொறியியல். அது சார்ந்த வேலையில் சேர்ந்தாலும் கூட அதில் அவருக்கு ஒரு போதாமை இருந்துள்ளது.

இளம் வயதிலேயே வாசிப்பின் மீது நாட்டம் கொண்டிருந்த சுரேனுக்கு, ஐடி உத்தியோகம் தந்த பணத்தைவிட ஆன்ம திருப்தி தேவைப்பட்டிருக்கிறது. அந்தத் தேடல் புத்தக வாசிப்பதைத் தாண்டி புத்தகத்தை பிரசுரிக்கும் பதிப்பாளராக வேண்டும் என்ற ஆசையை தூண்டியுள்ளது.

இயற்கை மிகவும் வலிமையானது. அது, அவ்வப்போது சில புள்ளிகளை இணைக்கும். அப்படி சில, பல புள்ளிகள் சரியாக இணையும் தருணம் தான் யாரோ ஒருவரின் கனவு, லட்சியம், காதல் என பல்வேறு உணர்வுகளும் முழுமை பெறும் தருணமாக இருக்கும்.

அவ்வாறாக சுரேனின் எண்ண ஓட்டத்தை ஒத்த சிந்தனை கொண்ட சதீஷ்குமார் உள்ளிட்ட சிலர் அவருடன் கைகோத்துள்ளனர். அங்கிருந்து தான் வன்கோ பதிப்பகத்தின் பயணம் தொடங்கியுள்ளது. சதீஷுக்கு உயிர்மை பதிப்பகத்தில் பணியாற்றிய அனுபவமும், வாசிப்பும் உண்டு. இவர்கள் இருவரும் சேர்ந்து வான்கோ பதிப்பகத்தை உருவாக்க, அதன் பின்னணியில் இன்று 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். சுரேன் தன் பேச்சில் பதிப்பகத்தின் பின்னணியில் உள்ள மகேஷ், விஜயகுமார், ஹென்ரி, சந்திரசேகர் எனப் பலரையும் நினைவு கூர்ந்தார்.

“பதிப்புத் துறை நிச்சயமாக லாபகரமான தொழில் அல்ல; ஆனால்...” - இப்படித்தான் தனது பேச்சை ஆரம்பித்தார் சுரேன்.

“கடந்த ஆண்டுதான் நாங்கள் வான்கோ பதிப்பகத்தைத் தொடங்கி முதல் புத்தகக் கண்காட்சியைக் கண்டோம். ஆனால், எங்களுக்கு அது லாபத்தைக் கையில் கொடுக்கவில்லை. மாறாக, நாம் ஏன் வேறு ஏதேனும் வேலையோ / தொழிலோ செய்து கொண்டு இந்தத் தொழிலையும் சேர்த்து கவனிக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தந்தது.

கிட்டத்தட்ட அந்த முடிவை எட்டிவிட்டிருந்தேன். அதன் நிமித்தமான ஒரு ஃபோன் காலை முடித்துவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன். அங்கே ஓர் இளைஞர் வான்கோ பதிப்பகத்தில் வாங்கிய போகன் சங்கரின் ’சங்கிலி பூதம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து ‘சார்’ என்ற கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார்.

தடுமாறியிருந்த எனக்கு, நான் சரியாகத் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்று உணர வைத்த நிமிடம் அது. எனது பதிப்புப் பணி மூலம் நான் யாரோ ஒருவரை ஈர்த்திருக்கிறேன். யாரோ ஒருவர் அவரது வாழ்க்கையை நகர்த்துவதற்கு நான் விதையாக இருந்திருக்கிறேன். இங்கே இதெல்லாம் ‘சீரியஸ் இலக்கியம்’ என்று வகை சுமத்தப்படும் ஒன்றை நான் எளிதாகக் கொண்டு சேர்த்திருக்கிறேன் என்று தோன்றியது” என்று தனது போதாமை தகர்ந்து போன தருணத்தை விவரித்தார் சுரேன். இயற்கை இன்னொரு முறை சரியான புள்ளியை சுரேனின் வாழ்க்கையில் இணைத்திருந்தது எனலாம்!

சுரேன்

தொடர்ந்து பேசிய சுரேன், “தடுமாற்றங்கள் மறைந்து நாங்கள் இன்று நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். ஓர் ஓலைக் குடிசையை நாங்கள் எழுப்பியிருந்தோம். அதில் வெளிச்சம் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் படைப்புலகின் மூத்தோர் பலரும் எங்களை ஆதரிக்கின்றனர். அவர்களின் படைப்புகளை பிரசுரித்துக் கொள்ளுங்கள் என்று வழங்கியிருக்கின்றனர். இன்று நாங்கள் கட்டிய ஓலைக்குடிசை, தமிழ்ப் படைப்பாளிகளின் ஆதரவு வைரக் கற்களாக ஜொலிக்கின்றன. இந்தக் குடிசையின் ஓட்டைகளை ஒளியால் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்றும் என்னிடம் சிலர் 2-வது ஆண்டில் இரண்டு புத்தகங்களை நீங்களே வெளியிட்டுள்ளீர்கள். வாழ்த்துகள். பதிப்பகம் சரி. ஜீவனம் என்னவென்று கேட்கிறார்கள்.

இன்றைய ஜீவனம் மட்டுமல்ல எங்களின் இலக்கு. இந்தத் துறையில் இன்னும் 10 ஆண்டுகள் தாக்குப் பிடித்துவிட்டால் பதிப்புத் துறையில் ஒரு புதிய தலைமுறையாக நாங்கள் நிற்போம். எங்களைப் பார்த்து இன்னும் பல இளைஞர்கள் பதிப்புத் துறைக்குள் வருவார்கள். பதிப்பாளராக இருப்பதை இளைஞர்களுக்கு ஒரு மரபைப் போல் கடத்துவதில் நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்.

வான்கோ பதிப்பகம் என்பது நானும், சதீஷும் மட்டுமல்ல. இது ஒரு கம்யூன். இந்தக் குழுமத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், வேலை செய்யலாம், படைப்பாக்கச் சிந்தனைகளைப் பகிரலாம்.

நாங்கள் வான்கோவின் பெயரை தாங்கி நிற்பதில் காரணம் உள்ளது.

என் பார்வையில் ஒரு சிறந்த கலைஞனுக்கும், ஒரு பித்தனுக்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. அந்த மெல்லிய கோட்டை நெருங்கும் உச்சத்தைத் தொட்டவன் வான்கோ. அவன் ஓர் உன்மத்தன். அவனது கலை இன்று உலகளாவிய அடையாளம். அவரைப்போல் நாங்களும் எல்லைகளுக்குள் சுருங்காமல் இருக்கவே விரும்புகிறோம். அதனால் தான் அந்தப் பெயரைச் சூட்டிக் கொண்டோம்.

ஏற்கெனவே பல பதிப்பகங்கள் பலமுறை பதிப்பித்த புத்தகங்களைத் தான் நாங்கள் மீண்டும் பதிப்பித்திருக்கிறோம். ஆனால் எங்களை வித்தியாசப்படுத்தியிருப்பது எங்களின் அட்டைப் படங்கள். இந்த ஆண்டு ‘கில்கமேஷ்’ நூலுக்கு ஒரு வின்டேஜ் லுக் கொடுத்து பதிப்பித்திருக்கிறோம். அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் கடலும் கிழவனும், வெண்ணிற இரவுகள் புத்தகங்களையும் புதிய அட்டைப் படங்களோடு காம்போ ஆஃபரில் வெளியிட்டிருக்கிறோம். நாங்கள் வெளியிட்ட ‘சங்கிலி பூதம்’ கவிதைத் தொகுப்பை அதிலுள்ள ஓவியத்துக்காகவும் பாராட்டியவர்கள் பலர். எதிலும் சமரசம் செய்யாமல் வாசகர்களை ஈர்ப்பதே எங்கள் பதிப்பகத்தின் இலக்கு.” என்றார்.

வான்கோ பதிப்பகத்தின் அந்த நம்பிக்கைக் குரலைக் கேட்டுவிட்டு அரங்கிலிருந்த கவிஞர் தேவதேவனையும் சந்தித்தோம். 50 ஆண்டுகளாக கவிதைகள் படைக்கும் அவர், ஒரு புதிய பதிப்பகத்தில் தனது 50-வது ஆண்டு படைப்பான ‘நிலவில் உதித்த கார்முகில்’ தொகுப்பை வெளியிட முடிவு செய்தது பற்றி வினவினோம்.

தேவதேவனுடனான உரையாடலில் இருந்து...

“நான் ஒரு கவிஞன். எனக்குப் பழையது, புதியது என்று பேதங்கள் கிடையாது. ஆனால், இந்த இளைஞர்களை நான் சந்தித்தபோது இவர்களின் அணுகுமுறை எனக்குப் பிடித்தது. இளமையும் அதேவேளையும் குழந்தைமையும் இவர்களிடம் இருந்தது.

வான்கோ எனக்குப் பிரியமான ஓவியன். நான் வான்கோவை எப்படிப் பார்க்கிறேனோ, புரிந்திருக்கிறேனோ அவர்களும் அப்படியே வான்கோவை புரிந்து வைத்திருந்தார்கள். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால், அவர்களும் - நானும் சந்தித்துக் கொண்டது ஓர் இயற்கையான நிகழ்வாக நான் கருதுகிறேன். அந்த சந்திப்பின் பின்னணியில் எந்த மெனக்கிடல்களும் இல்லை.

ஒருவேளை அது அப்படியான ஈர்ப்பு இல்லை என்று யாரேனும் சொன்னாலும் அதை நான் மறுக்க மாட்டேன். நான் ஒரு கற்பனாவாதக் கவிஞன் அல்லவா!

ஒரு பெண்ணும், ஆணும் காதல் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் காதல் சரிசமமாக ஒத்துப்போகும்போது வெளிப்படும் உணர்வுகள் தான் ஆகச் சிறந்த ரொமான்ஸ் எனலாம். அப்படியான ரொமான்ஸுக்கு நிகரான புரிதல் தான் வான்கோவை மையமாக வைத்து எனக்கும் வான்கோ பதிப்பகத்துக்கும் இடையே ஏற்பட்டது. மனித உறவுகளில் எப்போதும் இதுபோன்ற உச்சங்கள் தான் நிகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் கவிதைகளில் அதையே பிரதிபலிக்க முயற்சிக்கிறேன்.

நவீன இலக்கியங்கள் ‘உணர்ச்சி வெளிப்பாடுகள்...’ என்று ரொமான்டிசிஸத்தை ஒதுக்கியபோதும் அதை நான் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறேன்” என்றார்.

கவிஞர்தேவதேவன்

50 ஆண்டு காலமாக கவிதை எழுதுபவரிடம் இன்று ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி் யாருக்கு வேண்டுமானாலும் என்ன மொழியில் வேண்டுமானாலும் நொடியில் கவிதை பெறுகிறார்களே என்று கேட்டபோது, “பெண் பிள்ளை ஒன்று பிரியத்தின் வெளிப்பாடாக அப்பாவுக்கு கையால் ஒரு துணியில் பூ வரைந்து கொடுக்கும் கர்சீஃப் அந்தத் தந்தைக்கு மிக நெருக்கமானதாக இருக்கும். தொழில்நுட்பத்தால் துணியில் மிக நேர்த்தியாக நிமிடத்தில் ஆயிரக்கணக்கில் கூட அதுபோன்ற கர்சீஃப்களை உருவாக்கலாம். ஆனால் அந்த தந்தை மகள் கொடுத்த கர்சீஃபுக்கு அதை மாற்றாக நினைக்கவே மாட்டான். மனிதனின் கவிதையும் அப்படித்தான. இதயப்பூர்வமானது, உணர்வுப்பூமானது என்று முடித்தார்.

SCROLL FOR NEXT