சென்னை: மியூசிக் அகாடமி ஒவ்வோர் ஆண்டும் இசைவிழாவை கோலாகலமாக நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நூற்றாண்டு விழா கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கு நடுவே, சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதில் வித்வான் சஞ்சய் சுப்பிரமணியனின் கச்சேரி நடைபெற்றது. அவருக்கு பக்கபலமாக எஸ்.வரதராஜன் (வயலின்), நெய்வேலி பி.வெங்கடேஷ் (மிருதங்கம்), வி.அனிருத் ஆத்ரேயா (கஞ்சிரா) இருந்தனர்.
‘சலமு ஜேஸிதி’ எனத் தொடங்கும் பந்துவராளி ராகத்தில் அமைந்த தஞ்சை பொன்னையா பிள்ளை வர்ணத்துடன் கச்சேரியைத் தொடங்கினார் சஞ்சய். அடுத்ததாக, கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலை (ஹர ஹர சிவசங்கர) பாடினார். அதே தொடக்க வரிக்கு ஸ்வரக் கோர்வைகளைப் பாடியதும் கச்சேரி களைகட்டியது.
பின்னர், தேவகாந்தாரி ராகத்தில் சிறிய ஆலாபனை செய்துவிட்டு, கோடீஸ்வர ஐயரின் ‘முத்துசாமி தீட்சிதா சத்குரோ அருள் தந்தருள்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். அடுத்ததாக ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் சுத்த தன்யாசி (உதய ரவிச்சந்திரிகா) ராகத்தில் அமைந்த ‘சாமோதம் சிந்தயாமி’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.
இந்த பாடலில், ஸ்ரீமன் நாராயணன் சந்திரன் போன்று ஒளிவீசும் முகம் கொண்டவராகவும், முரன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை அழித்தவராகவும், அனைவருக்கும் பல வரங்களை அருள்பவராகவும் போற்றப்படுகிறார்.
கச்சேரியில், பிரதான ராகமாக சங்கராபரணம் அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, சுப்பராம தீட்சிதரின், ‘சங்கராச்சார்யம் ஸ்மராம்யஹம்” எனத் தொடங்கும் க்ருதியைப் பாடினார் சஞ்சய். ‘பரம ஞான லதா’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார்.
இந்த க்ருதியில் ஆதிசங்கரரின் அருளிச் செயல்கள் விளக்கப்படுகின்றன. அத்வைதக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவராகவும், அனைவருக்கும் தெளிவான விளக்கத்தை அளித்தவராகவும், அனைத்து முனிவர்களால் வணங்கப்படுபவராகவும் ஆதிசங்கரர் போற்றப்படுகிறார்.
தனி ஆவர்த்தனத்தில் வெங்கடேஷ், அனிருத் ஆத்ரேயா ஆகியோர் தங்கள் மிருதுவான வாசிப்பாலும், கச்சிதமான கோர்வைகளாலும் ரசிகர்களை ஈர்த்தனர். ராகம் தானம் பல்லவிக்கு ஹம்ஸானந்தி ராகத்தை தேர்ந்தெடுத்தார் சஞ்சய். ‘எந்நேரமும் உன் சந்நிதியில் இருக்க வேண்டும் அய்யா’ என்ற பல்லவியை த்ரிகாலத்திலும் பாடி ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார்.
ராகமாலிகையில் ராஜலஹரி, காபி ராக ஸ்வரங்கள் அமைந்தன. தொடக்கம் முதலே பாடகரை வயலினில் நிழல்போல தொடர்ந்து வந்த வரத ராஜன், சங்கராபரண ஆலாபனையிலும் ராகம் தானம் பல்லவியிலும் முத்திரை பதித்தார்.
சுப்பிரமணிய பாரதியாரின் பாகேஸ்ரீ ராகப் பாடல் (நின்னையே ரதியென்று), புரந்தரதாசரின் நாமநாராயணி ராக தேவர்நாமா (ரங்க பாரோ), பாபநாசம் சிவனின் மத்யமாவதி ராகப் பாடல் (கற்பகமே கண் பாராய்) ஆகியவற்றைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் சஞ்சய்.
சிறுவயதில் வித்வான் வி.லட்சுமிநாராயணனிடம் வயலின் வாசிக்க கற்றுக்கொண்ட சஞ்சய், பின்னர் தனது அத்தை சுகன்யா சுவாமிநாதன், விதூஷி ருக்மிணி ராஜகோபாலன், வித்வான்கள் கொல்கத்தா கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி, செம்பனார்கோவில் எஸ்ஆர்டி.வைத்தியநாதன் ஆகியோரிடம் இசை பயின்றார். தற்போது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கச்சேரி செய்து வருகிறார்.