சங்கீத வித்வத் சபை என்று அழைக்கப்படும் சென்னை மியூசிக் அகாடமி, இந்தியக் கலையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இசைக் கச்சேரிகளுக்குத் தயாராகும் விதமாக மியூசிக் அகாடமி வளாகத்தில் இளம் மாணவர்கள், கலைஞர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில் பந்துலா ரமாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கச்சேரியில் அவருக்கு பக்கபலமாக அவரது கணவர் எம்எஸ்என். மூர்த்தி (வயலின்), வி.வி.ரமணமூர்த்தி (மிருதங்கம்), நெற்குணம் எஸ். சங்கர் (கஞ்சிரா) இருந்தனர்.
கலாநிதி ராகத்தில் அமைந்த தியாகராஜர் கீர்த்தனையுடன் (சின்ன நாடென) கச்சேரியைத் தொடங்கினார் பந்துலா ரமா. அடுத்ததாக, ஸ்வாதி திருநாள் மகாராஜாவின் ரேவகுப்தி ராகப் பாடல் (கோபாலக பாஹிமாம்), தியாகராஜ சுவாமியின் கல்யாண வசந்தம் ராகக் கீர்த்தனை (நாதலோலுடை) ஆகியவற்றைப் பாடினார்.
ஜெயமனோ ஹரி என்ற அரிய ராகத்தில் அமைந்த தியாகராஜ சுவாமியின் ‘ஸ்ரீரம்ய சித்த’ கீர்த்தனையைப் பாடினார். இந்த கீர்த்தனையில் ராமனை, அலங்கார வடிவினன், இந்திரன் பகைவனின் உயிர்க்குடித்தோனின் சகோதரன், அனைவரையும் காப்பாற்றுபவன், நிலமகளின் மணாளன் என்று பலவாறு போற்றுகிறார் தியாகராஜர்.
கேதார கௌளை ராகத்தில் அமைந்த பல்லவியை ராகம் தானம் பல்லவிக்கு தேர்ந்தெடுத்தார் பந்துலா ரமா. ‘நீல மேக ஸ்யாமா வேணு கான லோல’ என்ற பல்லவி மிஸ்ர சாபு தாளத்தில் பிரதி பிம்ப பல்லவியாக அமைந்தது. தியாகராஜ சுவாமியின் சரஸ்வதி மனோஹரி ராககீர்த்தனைக்கு (எந்தவேடு கொந்து ராகவா) பிறகு, பிரதானராகமாக கமகக்ரியா அமைந்தது.
விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, முத்துசுவாமி தீட்சிதரின் ‘மீனாட்சி மேமுதம்’ எனத் தொடங்கும் க்ருதியைப் பாடினார் பந்துலா ரமா. ‘வீணா தச கமகக்ரியா’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். இந்த க்ருதியில் மீனாட்சி தேவி, மீன் போன்ற கண்களைக் கொண்டவளாக, ஆனந்தம் அருள்பவளாக, மேக நிறத்தவளாக, ராஜ மாதங்கியாக போற்றப்படுகிறாள்.
ராகம் தானம் பல்லவியிலும், பிரதான ராக ஆலாபனையிலும் வயலின் வித்வான் எம்எஸ்என். மூர்த்தியின் பங்கு பாராட்டுக்குரியது. தனி ஆவர்த்தனத்தில் வி.வி.ரமண மூர்த்தியும், நெற்குணம் சங்கரும் தங்கள் மிருதுவான வாசிப்பால், கச்சேரியை மெருகேற்றினர். தஞ்சை சின்னையா இயற்றிய பரஸ் ராக ஜாவளி (செலி நேனேட்லு) மற்றும் தில்லானாவுடன் கச்சேரியை நிறைவு செய்தார் பந்துலா ரமா.
தனது தந்தை பந்துலா கோபால ராவிடம் இசை கற்கத் தொடங்கிய பந்துலா ரமா, 8 வயது முதல் மேடையில் பாடி வருகிறார். பின்னர் வித்வான் இவதூரி விஜயேஸ்வர ராவிடம் சிறந்த பயிற்சி பெற்று, தற்போது பிரபலமான கர்னாடக இசைக் கலைஞராகத் திகழ்கிறார்.