உமையாள்புரம் சிவராமன், அஷ்வத் நாராயணன்.
சென்னை: பாரம்பரியமிக்க சபாக்களில் ஒன்று சென்னை மியூசிக் அகாடமி. இதன் மேடையில் ஏறுவதை அரிய வாய்ப்பாக, ஆகப்பெரும் பாக்கியமாக கருதுகின்றனர் இசைக் கலைஞர்கள். அதற்கு ஏற்ற வகையில் பயிற்சி பெற்று தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர்.
அந்த வகையில், மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில், வளரும் வித்வான் அஷ்வத் நாராயணனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கச்சேரியில் அவருக்கு பக்கபலமாக பி.யூ.கணேஷ் பிரசாத் (வயலின்), ‘பத்மவிபூஷண்’ உமையாள்புரம் கே.சிவராமன் (மிருதங்கம்), பி.எஸ்.புருஷோத்தமன் (கஞ்சிரா) இருந்தனர்.
‘நின்னு கோரி’ எனத் தொடங்கும் வசந்தா ராக வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார் அஷ்வத். அடுத்ததாக ஆரபி ராக திருப்பாவை (ஓங்கி உலகளந்த உத்தமன்), அடாணா ராகதியாகராஜர் கீர்த்தனை (அனுபமகுணாம்புதி), கன்னட ராக முத்துசுவாமி தீட்சிதர் க்ருதி ( மாத்ரு பூதம்), கேதார கௌளை ராக சியாமா சாஸ்திரி சாஹித்யம் (பராகேல) ஆகியவற்றைப் பாடினார்.
கச்சேரியின் பிரதான ராகமாக காபி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, தியாகராஜ சுவாமிகளின் ‘இந்த சௌக்கியமணி’ கீர்த்தனையைப் பாடினார். ‘ஸ்வரராக லய சுதாரஸ’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார்.
தனி ஆவர்த்தனத்தில் உமையாள்புரம் சிவராமனும், புருஷோத்தமனும் தங்கள் சௌக்கியமான வாசிப்பில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர். ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று, 10 நிமிடங்களுக்கும் மேலாக கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பூர்விகல்யாணி ராகத்தில் அமைந்த, ‘காணக் கிடைக்குமோ சபேசன் தரிசனம் கண்டால் கலி தீருமோ’ என்ற பல்லவியை ராகம் தானம் பல்லவிக்கு தேர்ந்தெடுத்தார் அஷ்வத். பாடகரை நிழல்போல வயலினில் தொடந்த கணேஷ்பிரசாத், ராகமாலிகை ஸ்வரங்களில் (ஆனந்த பைரவி, கேதாரம், சிந்துபைரவி) முத்திரை பதித்தார்.
புரந்தரதாசரின் ‘நரஜென்ம பந்தாக’, தருமபுரி சுப்பராய ஐயரின் ‘ஸ்மரசுந்தராங்குனி’ – பரஸ் ராக ஜாவளி, தில்லானாவுடன் கச்சேரியை அஷ்வத் நிறைவு செய்தார். தனது 4-வது வயதில் இருந்து ஜெயலட்சுமி சுந்தர ராஜனிடம் இசை பயின்ற அஷ்வத், பின்னர் பாலக்காடு கே.வி.நாராயணசுவாமி, பத்மா நாராயணசுவாமியிடம் இசை பயின்றார்.
எண்ணற்ற விருதுகளைப் பெற்ற இவர், தற்போது பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதேபோல, தனது 10-வது வயதில் இருந்து மிருதங்கம் வாசித்துக் கொண்டிருக்கும் மிருதங்க மேதை உமையாள்புரம் கே.சிவராமன், இளம் வித்வான்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மிருதங்கம் வாசித்து வருகிறார். “வயது என்பது வெறும் எண். நாதம்தான் என் உயிர் மூச்சு” என்று அவர் அடிக்கடி கூறுவது வழக்கம். அவர் சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.