படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
வீணாகும் பழைய மரச்சட்டங்களில் இருந்து உபயோகமாகும் வகையில் கலைப்பொருட்களை உருவாக்கும் மதுரை ஓவியர், ஜல்லிக்கட்டை முன்னிட்டு வீரன் ஏறு தழுவுதல் மரச் சிற்பங்களையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் நா.இளங்கோவன் (52). பட்டதாரியான இவர் ஓவியம், புகைப்படக்கலை மூலம் கோயில் சிற்பங்கள், கோயில் தேர்களை ஆவணப் படுத்தியுள்ளார். கல்லில் கலை வண்ணம் இருப்பதுபோல், மரச் சிற்பங்களின் கலைநுட்பத்தை அறிந்தவர், தற்போது வீணாகும் பழைய மரச்சட்டங்கள், மரக்கட்டைகளிலிருந்து கலைப்பொருட்களை வடிவமைத்து வருகிறார். ஜல்லிக்கட்டையொட்டி வீரன் காளையை அடக்கும் ஏறு தழுவுதல் மரச் சிற்பங்களை உருவாக்கியுள்ளார். மேலும், கார்கள், வாகனங்களில் வைக்கும் சிற்பங்களையும் உருவாக்கி வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் உள்ளார்.
இதுகுறித்து நா.இளங்கோவன் (52) கூறுகையில்,மதுரையில் பட்டப்படிப்பு முடித்தவுடன் ஓவியம், புகைப்படக் -கலையில் ஆர்வம் ஏற்பட்டது. கோயில்களுக்கு வலைதளம் உருவாக்கும்போது கோயில் சிற்பங்கள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. கோயில் கற்சிற்பங்கள், தேர்களிலுள்ள சிற்பங்களை ஆவணப்படுத்தினேன். மரபுக் கட்டுமானங்கள் குறித்தும் தெரிந்து கொண்டேன்.
அப்போது நம்மிட முள்ள பொருட்களை வைத்து மரபுக் கட்டு மானங்களை உருவாக்கும் தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டேன். நாம் வீடுகளில் உபயோகப்படுத்திய நிலைகள், கதவுகள், பூஜை மாடங்களை சேகரிக்க தொடங்கினேன். விறகாகச் செல்லும் மரச்சட்டங்கள், மரக்கட்டைகளை பயன்படுத்தி கலைப்பொருட்களை வடிவமைத்து வருகிறேன் .
மரச்சிற்பிகள், தச்சர்கள் துணையுடன் சித்திரமாடம் சிற்பக்கலைக்கூடம் நடத்தி வருகிறேன் . கணினியோடு இணைந்த சிஎன்சி இயந்திரம் மூலம் பல்வேறு சிற்பங்களை உருவாக்கி வருகிறோம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையொட்டி வீரன் காளையை அடக்கும் ஏறுதழுவுதல் சிற்பங்களை உருவாக்கியுள்ளோம். இதனை பரிசாக வழங்கும் வகையில் 6 இஞ்ச் அளவில் உருவாக்கியுள்ளோம். மேலும் கலைநுட்பத்துடன் நிலைக் கதவுகள், பூஜை மாடங்கள்,சுவர் அலங்காரச் சிற்பங்களையும் செய்து தருகிறோம் என்றார்.