கலை

கோவை அருகே விடிய விடிய நடந்த இரணிய நாடகம் - திரளாக மக்கள் பங்கேற்பு

நோய் நொடிகளை தீர்க்க வேண்டுதலுடன் தெருக்கூத்து

டி.ஜி.ரகுபதி

கோவை: நோய் நொடிகளை தீர்க்க வேண்டி, கோவை அருகே விடிய விடிய இரணிய நாடகம் தெருக்கூத்து நடத்தப்பட்டது. இதில், திரளாக கிராம மக்கள் பங்கேற்றனர்.

இந்திய கலை வடிவங்களில் மிகவும் தொன்மையானது தெருக்கூத்து. தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளின் உன்னத வடிவமாக நடத்தப்பட்டு வரும் தெருக்கூத்து, நம் பாரம்பரிய கலைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. திறந்தவெளி இடங்களில் தெருக்களின் சந்திப்பில் களம் அமைத்து நடத்தப்படுவதால் இக்கலைக்கு தெருக்கூத்து எனப்பெயர் பெற்றது.

இது ஒரு பொழுதுபோக்கு கலையாக மட்டுமின்றி, மக்களுக்கு தெரிந்த கதைகள், தெரியாத வரலாறுகள், நீதி போதனைகள் தெருக்கூத்து வாயிலாக தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்றும் தெருக்கூத்து கலையை தங்களது வாழ்வின் ஓர் அங்கமாக, தங்களின் நோய் தீர்க்கும் மருந்தாக கருதி கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஊர் கூடி விடிய விடிய தெருக்கூத்தை நடத்தி மகிழ்கிறது பகத்தூர் என்னும் கிராம மக்கள்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை அருகேயுள்ள பகத்தூர் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லை நோய் என்றழைக்கபட்ட பிளேக் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி பல நூறு பேர் வரிசையாய் உயிரிழந்தனர். வீடு தோறும் மரணங்கள் தொடர்ந்தது.

அக்காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக்கும் வகையில் இரணிய நாடகம் என்ற தெருக்கூத்து நடத்தப்பட்டுள்ளது. அன்று முதல் பல தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் போது இந்த தெருகூத்து நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டும் இரணிய நாடகம் நடத்தப்பட்டது. நேற்று (ஜன.16) இரவு 8 மணிக்கு தொடங்கி இன்று (ஜன.17) காலை 8.30 மணிக்கு இரணிய நாடகம் தெருக்கூத்து நடைபெற்றது. அதாவது, இரணியன் கொல்லப்பட்டு இறைவன் கோபம் தணிந்த பின்னரே இந்நிகழ்ச்சி நிறைவடைகிறது.

முழுக்க முழுக்க பகதூர் கிராமத்தினரே இத்தெருக்கூத்தில் வேடமிட்டு நடித்தனர். இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் எந்த பகுதியில் வேலை நிமித்தமாக இருந்தாலும் இத்தெருக்கூத்து நடத்தப்படும் நாளில் தவறாமல் தங்களது கிராமத்தை வந்தடைந்து இக்கூத்தில் பங்கெடுப்பது தனிச்சிறப்பாகும்.

இது குறித்து பகத்தூர் கிராம மக்கள் கூறும்போது, ‘‘பக்த பிரகலாதனின் கோரிக்கையை ஏற்று திருமால் நரசிம்ம அவதாரத்தில் வெளிவந்து தீமையின் அடையாளமான இரணியனை அழிப்பதாக கூறும் இத்தெருக்கூத்து நாடகத்தால் அன்று தங்களது ஊரை பிடித்த பிணி மெல்ல மெல்ல விலகி மகிழ்ச்சி திரும்பியதாக நாங்கள் எண்ணுகிறோம்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் இரணிய நாடகம் தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டும் இரணிய நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டது. சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை வெட்டவெளியில் கொட்டும் பனியினையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஊர் மக்கள் அனைவரும் இத்தெருகூத்தை விடிய விடிய கண்டு ரசித்தனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT