வினிஷா கதிரவன்
சென்னை: ராமாயணக் கதைகளை கேட்கும் போது மனதுக்குள் காட்சிகள் விரியும். ராமாவதாரம், சீதா கல்யாணம், வனவாசம் தொடங்கி பட்டாபிஷேகம் வரை முக்கிய அம்சங்கள் அனைத்தும் கண் முன்னே நாட்டியமாக வடிவமைக்கப்பட்டால் சிறப்புதான்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாரத் கலாச்சார் அரங்கில் மார்கழி மகோற்சவத்தின் ஒரு பகுதியாக மருத்துவர் வினிஷா கதிரவனின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ‘ராம காதை’ இருந்தது.
ராம காதையின் காட்சிகள் கண்முன் விரிந்தன. ராமபிரான் அவதாரம், அடுத்தடுத்து இலக்குவன், விசுவாமித்திரர், அகலிகை தொடர்பான காட்சிகள், சீதையை மணக்க போட்டி போட்டு வில்லொடிக்க வந்த வேந்தர்கள், சீதையின் சுயம்வரம், வனம் புகுதல், சூர்ப்பனகையின் அறுபட்ட மூக்கு, ராவணன், அனுமன், கணையாழி பெறல், கண்டேன் சீதையை, ராம சேது பந்தனம், போர், பட்டாபிஷேகம் என ராமாயணக் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. ராமாயணமும் ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்தது.
வினிஷா கதிரவனின் அபிநயம், கதை சொல்லும் திறன், உணர்வுகளை வெளிப்படுத்தும் உடல் மொழி ஆகியவை பார்வையாளர்களை ஆர்வம் குறையாமல் ரசிக்க வைத்தன.
முகபாவங்கள், கண் அசைவுகள், உதடு அசைவுகள் ராமாயணக் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் கண்முன் நிறுத்தின. எழுத்தாளர் பாலகுமாரன், பத்மபூஷண் வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், பாரத் கலாச்சார் இணைச் செயலர் சுதா மகேந்திரன், சித்த மருத்துவர் கு.சிவராமன் ஆகியோரால் பாராட்டப்பட்ட மருத்துவர் வினிஷா கதிரவன், நாட்டிய குரு ஊர்மிளா சத்தியநாராயணனின் மாணவி ஆவார்.
“மருத்துவம் என் வாழ்க்கை; பரதம் என் மூச்சு” என்று தெளிவாகச் சொல்லும் வினிஷா, ‘யுவ கலா பாரதி’, ‘நாட்டிய நிபுண’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.