சென்னை: சென்னை மியூசிக் அகாடமி சார்பில் ஒவ்வொரு இசைவிழாவிலும் 80-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. இதில் இளம் கலைஞர்கள், வளரும் கலைஞர்கள் உட்பட பிரபல மற்றும் சீனியர் வித்வான்களும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில் வித்வான் பரத் சுந்தரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அவருக்கு பக்கபலமாக எம்.ராஜீவ் (வயலின்), பட்ரி சதீஷ்குமார் (மிருதங்கம்), என்.குருபிரசாத் (கடம்) இருந்தனர். ‘ஏரா நாபை’ எனத் தொடங்கும் பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் தோடி ராக வர்ணத்துடன் கச்சேரியைத் தொடங்கினார் பரத் சுந்தர். அடுத்ததாக டாக்டர்.
எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் நாட்டை ராகப் பாடலை (கான சுதாரஸ பாண) பாடினார். பூர்வி கல்யாணி ராகத்தில் சிறிய ஆலாபனை செய்துவிட்டு, கோபாலகிருஷ்ண பாரதியின் ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்ற பிரபலமான பாடலைப் பாடினார்.
‘பக்தியில் கரை கண்டவன், பார்த்து பார்த்து உண்டவன்’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். திருப்புன்கூர் சென்ற நந்தனார், தான் சிவதரிசனம் செய்வதற்கு நந்தி குறுக்கே இருப்பதைக் கண்டு, ‘சற்றே விலகி இருப்பாய். நான் சிவதரிசனம் செய்ய வேண்டும்’ என்று நந்தியை வேண்டுகிறார். நந்தனாரின் உணர்வுகளை இந்தப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார் கோபாலகிருஷ்ண பாரதி.
அடுத்ததாக முத்துஸ்வாமி தீட்சிதரின் ராக க்ருதி ( தியாகராஜ மஹத்வஜாரோக), தியாகராஜ சுவாமியின் காபிநாராயணி ராகக் கீர்த்தனை (சரஸ சாமதான) ஆகியவற்றைப் பாடினார் பரத்சுந்தர். பிரதான ராகமாக ஆபேரி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனையுடன் ‘பஜரே ரே மானஸ’ எனத் தொடங்கும் மைசூர் வாசு தேவாச்சாரியாரின் பாடலைப் பாடினார்.
‘ராஜகுமாரம் ராமம் பவன ஜாப்தம் அவனிஜ மனோஹரம்’ என்ற வரியில் நிரவல் செய்து ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். தனி ஆவர்த்தனத்தில் பட்ரி சதீஷ்குமாரும், குருபிரசாத்தும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மிருதங்க நாதம் தொடர்பாக பட்ரி சதீஷ்குமார் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
ராகம் தானம் பல்லவிக்கு கல்யாணி ராகத்தை தேர்ந்தெடுத்தார் பரத் சுந்தர். கண்ட சாபு தாளத்தில் திஸ்ர நடையில், ‘நீ தயை புரிய தாமதமாகுமா சரவண பவா வரம் அருள உனை வேண்டி நிதம் பணிந்தேன்’ என்ற பல்லவியை த்ரிகாலத்தில் பாடி அசத்தினார். பாடகருக்கு உறுதுணையாக, நிழல் போல வயலினில் தொடர்ந்தார் ராஜீவ். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘குயில்காள் முகில் கண்ணன் வரக் கூவீரோ’ என்ற பாடலுடன் கச்சேரியை நிறைவு செய்தார் பரத் சுந்தர்.
வித்வான் பி.எஸ்.நாராயண ஸ்வாமி மற்றும் விதூஷி எஸ்.சௌமியாவிடம் இசை பயின்ற பரத் சுந்தர், தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கச்சேரி செய்து வருகிறார். மேலும், பல மாணவர்களுக்கு இசை கற்பித்து வருகிறார்.